தமிழர்கள் என்றால் அமிதாபுக்கு கிள்ளுக்கீரையா?-வைகோ

கொழும்பில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்தும் முயற்சியை நடிகர் அமிதாப்பச்சன் கைவிட வேண்டும், அந்த விழாவில் தமிழ்த் திரைப்பட துறையைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் மரண பூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைப் பாதகன் ராஜபக்சே ராஜாங்கம் நடத்தும் தலைநகர் கெழும்பில், ஜூன் மாதத்தில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்ற செய்தி ஆகும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் [^] படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும், வீசும் காற்றையே ஓலக் காற்றாக ஆக்கிவிட்ட நிலையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை, மூன்று நாட்கள் நடத்த, இந்த அமைப்பின் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்தது தமிழர்களின் தலையிலே மிதிக்கின்ற அக்கிரமம் ஆகும்.

இந்தியாவில், அனைவராலும் மதிக்கப்படுகின்றன கலையுலக நட்சத்திரமான அமிதாப்பச்சன், இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது.

இந்த முயற்சியை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும். அவர் வசிக்கும் மும்பை [^]யிலே தாக்குதல் [^] நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மடியக் காரணமான பாகிஸ் தானியர்களின் தலைநகரில், இஸ்லாமாபாத்தில், இந்த விழாவை அவர் நடத்தத் தயாரா?.

அப்படி அறிவித்து விட்டு மும்பை நகரில் அவர் நடமாட முடியுமா?.

தமிழர்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கொண்டாடப் போகிறார்களா?.

இப்படியெல்லாம், இவர்கள் செயல்படுவதற்கு துணிச்சலைத் தந்ததே இந்திய அரசுதானே?. ராஜபக்சேயை இந்தியாவுக்கு அழைத்து வந்து, திருப்பதியில் பூரண கும்ப வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ததால் தானே, இந்தத் துணிவு அனைவருக்கும் வந்து விட்டது?.

கொழும்பிலே உத்தேசிக்கப்பட்ட விழாவை, இந்தியத் திரைப்படத் துறையினர் சார்பில் நடத்தக் கூடாது. இந்த விழாவில் தமிழகத் திரைப்பட துறையைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக அறிகிறோம்.

தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதோடு, இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும்.

அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Read more...

கருணாநிதி சாகும் வரை தமிழனுக்கு மறுவாழ்வு இல்லை

ஒரு கோட்டை சிறியதாக்க அதன் அருகிலேயே ஒரு பெரிய கோடு போட்டால் அது சிறியதாகி விடுகிறது.இதையே தான் கலைஞர் கருணாநிதி வேத வாக்காகக் கொண்டிருக்கிறார் போலும்.ஒரு துரோகச்செயலை மூடி மறைக்க இன்னொரு துரோகம் அதைவிட பெரியதாய் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

ஈழப்பிரச்சினையில் கடிதம் எழுதி எழுதியே மூண்டெழுந்த உணர்வலைகளைக் காலம் தாழ்த்தியபடி இந்தியா செய்த அத்தனை துரோகத்துக்கும் ஒத்து ஊதிக்கொண்டிருந்த இந்தக் கலைஞர் ,பேரனுக்கும் மகனுக்கும் மந்திரி பதவி வாங்க முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் தில்லிக்கு சென்று சண்டையிட்டார் .

முத்துக்குமார் உயிரை ஈகம் செய்த பொது மாணவர் பிரச்சினை வந்துவிடக் கூடாதென்று கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுப்பளித்து மாணவர் சமுதாயத்தை இழிவு படுத்தினார்.

இப்படி தன் சக்திக்கு மீறி துரோகமிழைத்து வரும் கருணாநிதியிடம் நளினியின் ஆயுள் தண்டனையை குறைக்கப் பரிந்துரை செய்யும் கருணை மனு வந்தபோது தன்னிடம் சகல அதிகாரங்கள் இருந்த போதும் அதை மறுத்து தண்டனைக்குறைப்பு செய்யவில்லை. பொய் வழக்கில் சிறையிலிருக்கும் நளினிக்கு கருணை காட்டாத கலைஞர் தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் சிறையிலிருந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டினார்.

நளினியின் கருணை மனு மீதான வழக்கு விசாரணையின் போது நிதிபதி கேட்ட கேள்விக்கு அரசு வழக்கறிஞர் பதில் அளித்ததைக் கேட்டு நீதிமன்ற வளாகமே சிரித்தது. நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நளினியின் தாயார் வசிக்கும் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியதைக்கேட்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது தான்.



விசாரணையில் தான் பிடியில் இருக்கும் கைதி ஒருவரிடமே தான் நினைத்ததை வாக்குமூலமாக வாங்கும் சக்தி படைத்த காவல்துறை ஆய்வாளர் தரும் வாக்குமூலம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள பெரிய ஞானம் தேவையில்லை தானே.



நளினியிடமே பொய் வாக்குமூலம் வாங்கி பத்தொன்பது ஆண்டுகள் சிறை வாசம் வாங்கிக்கொடுத்த கயவனின் வாக்குமூலம் மட்டும் நீதியோடு இருக்குமா என்ன ?

பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துத் திருப்பியனுப்பியதை மறைக்க சிறையிலிருக்கும் நளினியிடம் கைபேசி இருந்ததாகப் பொய்வழக்குப்போடுகிறார் கருணாநிதி.


நளினி வெளியே வர இருந்த அத்தனை வாய்ப்புகளையும் தட்டிவிட்டு அவரை மென்மேலும் சிறைவாசியாக்கி விடுதலைக்கான எந்த வாய்ப்பும் அந்ததாய்க்கு கிடைக்கவிடாமல் செய்த கருணாநிதியின் துரோகம் முடிவே இல்லாமல் தொடர்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

Read more...

தமிழர்களை ஒன்றுபடுத்தவே அரசியல் கட்சி: சீமான்

தமிழர்களை ஒன்று​படுத்தவே நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுகிறது என்று அந்த இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கூறியுள்ளார்.


இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் தமிழின எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் மே 18ல் நடைபெறுகிறது.​ இது தமிழர்களுக்கான அரசியல் கட்சியாகத் தொடங்கப்படுகிறது.​

இந்திய தேசியம்,​திராவிடம் என்ற பெயர்களில்தான் இதுவரை தமிழகத்தில் கட்சிகள் உள்ளன.​தமிழினத்திற்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகி​விட்டது.​


ஈழத்தில் முன்பிருந்ததை​விடவும் அதிகமாக தமிழன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான்.​ உலகம் முழுவதும் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழனுக்கு உதவ முடியவில்லை.​


இலங்கை கடல் படையினால் நாள்​தோறும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சித்திரவதை அனுபவிக்கின்றனர்.​ இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.​ மத்திய,​மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.​ அவர்களுக்கு ஆதரவாக எச்சரிக்கை விடுவதற்குக்​கூட அரசுகள் முயலவில்லை.​


பல்வேறு உலக நாடுகள் இலங்கை அரசு போர்க் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக்​காட்டுகின்றன.​ஆனால்,​​ இந்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறது.​ இந்நிலையில் தமிழ் இனத்திற்கென்று,​​ மொழிக்கென்று அரசியல் கட்சி அமைக்க வேண்டியது அவசியம்.​ தமிழர்களை ஆள்பவர்கள் தமிழன் துயரப்படும்​போது உதவவில்லை.​ எனவே,​​ தமிழரைப் பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி தேவை.​


இந்தக் கட்சியின் கொடி அறிமுக விழா (சனிக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.​ நாங்கள் வசதியாக வாழ்வதற்காகக் கட்சி தொடங்கவில்லை.
​ திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.​ அப்படியொரு நிலை ஏற்பட்டால்,​​ கட்சியைக் கலைத்து​விட்டு திரைத்துறைக்குச் சென்று விடுவேன்.​ தமிழின அமைப்புகள் விரும்பினால்,​​ அவர்களைத் தேர்தலில் சேர்த்துக் கொள்வோம்.​


கட்சி தொடங்கிய பின்னர்,​ஊர் ஊராகச் சென்று இளைஞர்களிடம் தமிழின உணர்வுகளைப் பரப்புவோம்.​ அரசியல் வகுப்பு​ள் நடத்தி,​​ இளைஞர்களை வழி நடத்துவோம்.​ பெரியார்,​ பூலித்தேவன்,​​ ரெட்டை​மலை சீனிவாசன் போன்ற தமினத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களில் படிப்பகங்களைத் தொடங்குவோம்.​


உடல் பயிற்சிக் கூடங்களை அமைத்து,​இளைஞர்களைத் தனித்திறன் மிக்கவர்களாக வார்த்தெடுப்போம்.​ இளைஞர்களை மது,​புகையிலை போன்ற தீயசெயல்களில் இருந்து மீட்டெடுப்போம் என்றார்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP