Showing posts with label தெலுங்கானா. Show all posts
Showing posts with label தெலுங்கானா. Show all posts

உறுதிகொண்ட மக்களால் வென்றெடுக்கப்பட்ட தெலுங்கானா – ஒரு போராட்ட வரலாறு

தெலுங்கானா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாகும்.இதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும்.இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது.



கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல்,அதிலாபாத்,கம்மம்,மகபூப்நகர்,நல்கொண்டா, ரங்காரெட்டி,கரீம்நகர்,நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும்.கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.

இங்கு தெலவானா என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் சண்டை புரிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இதற்கு உறுதுணையாக வாரங்கலில் இருக்கும் பாண்டவுல குகாலு காட்டப்படுகிறது.

இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர்.கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமஸ்தானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.

விடுதலைக்குப் பிறகான வரலாறு



1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது.ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது.

மொழிவாரி மாநிலம் மற்றும் தெலுங்கானா ஆந்திரா இணைப்பு
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூல்|கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் பசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது.

தனித் தெலுங்கானா போராட்டம்

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

1990-2004களில் இயக்கம்

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS,தெராச )என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

2004 பின்னர்
கொடி

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெராச கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

நவ தெலுங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.
2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.

புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

திசம்பர் 2009: தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்தது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், மாணவர்களும் இணைந்து நடத்தி வரும் மிகப் பெரிய போராட்டம் கிட்டத்தட்ட புரட்சியாக மாறியது.

இதையடுத்து பெரும் இக்கட்டான நிலையில் (09.12.2009) அன்று டெல்லியில் 3 முறை முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ரோசய்யா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இன்றே கொண்டு வருமாறும் ரோசய்யாவுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள் முடுக்கி விடப்படவுள்ளன. இதற்குப் பொருத்தமான தீர்மானம் ஆந்திர மாநில சட்டசபையில் கொண்டு வரப்படும் என்றார்.

இதன் மூலம் மொழி உணர்வுள்ள மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு உறுதியான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP