கருணாநிதியின் ஓரிரவு... (நாடகம்) சில நொடியில் அம்பளம்...


ஐயகோ தமிழினம் அழிகிறதே….. மனித சங்கிலி...
முழு வேலை நிறுத்தம்....
ஓரிரவு பொறுத்திருப்போம்....

ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து இன்று தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதம் நாடகத்தில் கருணாநிதி சிறந்த நடிப்பை வெளிகாட்யிருந்தார்.... அதிமுக தலைமையிலான கூட்டணியினரின் தேர்தல் பரப்புரைகளையும், ஈழத்தமிழர்களுக்கெதிரான காங்கிரஸ், தி.மு.கவின் துரோகத்தையும் அடுத்து எழுந்துள்ள மக்களின் கொந்தளிப்பையும் ஈடுகட்ட முடியாத கருணாநிதியின் வஞ்சக புத்திக்கூர்மையின் வெளிப்பாடே இந்த நாடகம்… காலம்காலமாக நடக்கும் போரை ஓரிரு நாளில் நிறுத்துவது என்பது இயலாதது என்று கூறியிருந்தவர்.... உண்ணாவிரதம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் பேசிவைத்தது போலவும் மேலும் தாமே இலங்கை அதிபர் ஆகிவிட்ட கனவிலோ என்னவோ இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டது என கூறி... தனது உண்ணாவிரதத்திற்கு தானே முடிவு கட்டுகிறார்....
இந்த நாடக வெற்றிக்கு நாடெங்கும் பட்டாசு வெடித்து வெற்றி வேறு....
இவரின் நயவஞ்சகத்தை சிங்களவனே வெளிப்படுத்துயுள்ளான்...
யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான ஊடக செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:07.41 AM GMT +05:30 ]
யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி இலங்கை இராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
'பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என பாதுகாப்பு அமைச்சக இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

Read more...

புலியை எலியாக்க நினைக்கும் கருணா (எ) கருணாநிதி


விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ஈழத்தில் தனது பேரப்பிள்ளைகளை முதல்வராக்கும் வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தனி ஈழத்தை அங்கீகரிக்கலாம் - கருணாநிதி.

Read more...

மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை: விடுதலைப் புலிகள்



சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரண்டுநாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் - முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்காஅரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை - புதுவருடப்பிறப்பிற்கென தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடாத்துகின்றன.

உலகையும் - தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்கவேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப்போர்நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள்இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத்துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் - உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் - தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் இராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம்கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

Read more...

புலிகளே மக்கள்! மக்களே புலிகள்!

ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக்கொள்ள முடியாது. இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். உனது வேதனை வரிகளை விமர்சிக்க முடியாது. ஆனாலும் கூட ஒருசில நெருடல்கள் என் மனதைத் துண்டுகளாக உடைத்துத் தூங்கவிடாமல் பண்ணியது.


ஐந்து வேளையும் இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்ப் பட்டியல் பார்ப்பது நீ மட்டுமல்ல... வன்னி மண்ணில் இருக்கும் தங்கள் பெற்றோரை, சகோதர-சகோதரிகளை, உறவுகளை எண்ணி உணவு இறங்காமல் நடைப் பிணமானவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

உன் அம்மம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு உன் பதின் பருவத்துக் கடைசி வயதுகளில், 'பொடியள் மறுபடி பிடித்த ஆனையிறவில்' உன் வீடு பார்க்க நீ போன தருணத்தில், இராணுவக் காலணிகள் சூழ்ந்த யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் நான் விம்மலையும் வேதனைகளையும் தொண்டைக்குழிக்குள் தேக்கிவைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தேன்.

தன் பதின் கடைசி வயதுகளில் போராளியாகிய என் தம்பி, அதே ஆனையிறவுச் சமரில் படுகாயமடைந்து மரணப் படுக்கையில் கிடப்பதாக, என் அம்மா முல்லைத்தீவிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார். அதே ஆனையிறவுத் தளத்தின் வெற்றி விழாவில் மக்கள் கலந்து மகிழும்போது, நீ சொன்ன கிரிக்கெட் ஸ்கோரின்படி 400 வீடுகளில் பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள் (என் தம்பி பிழைத்துக்கொண்டான்).

எங்கள் மக்களின் துயரங்களை வெளியில் கொண்டுவரும் உன் படைப்பு உன்னதமானதுதான். அப்பாவிப் பொதுமக்களையும், பச்சிளம் பாலகர்களையும் படுகொலை செய்யும் போர் எனும் அரக்கனின் பிடியில், எங்கள் மக்கள் மரணத்தின் முன் மண்டியிட்டுக்கிடக்கிறார்கள் என்பதை வெளி உலகம் கண்டும் காணாமல் இருக்கும். உண்மைதான் சகோதரா, ஆனாலும்கூட வெளி உலகம், பொதுமக்கள் - போராளிகள் என்று பிரித்துப் பார்ப்பதைப் போலவா நீயும் பார்க்கிறாய்?

உன்னை நேசித்த காயத்திரி தன் மண்ணை நேசித்து நஞ்சு மாலை சூடிக்கொண்டதுகூட அவளின் வீரச்சாவின் பின்னர்தான் உனக்குத் தெரிய வந்ததா சகோதரனே? 'துவக்குப் பிடித்தவன் மரணத்தை நிச்சயித்துக் கொண்டவன். யுத்த முனையில் களமாடுபவனின் உயிர் என்பதும் துப்பாக்கிக் குண்டு போல ஓர் ஆயுதமே' என்று இரட்டை வரிகளில் அந்நியப்படுத்திவிட்டாயே? அவர்கள் என்ன பிறக்கும்போதே தாய், தந்தை, குடும்பம் ஏதும் இல்லாமல் கழுத்தில் குப்பியும் கையில் குண்டுமாகப் பிறந்தார்களா?

மருத்துவப் பீடத்துக்குத் தெரிவாக வேண்டும் என்ற கனவுடன் படித்தவன் என் கடைசித் தம்பி. தனது எதிர்காலப் படிப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே பள்ளியில் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் படையில் சேர்ந்து கொண்டவன். அதே முதலுதவிப் படை, அவனை மானிப்பாயில் இராணுவம் நிகழ்த்திய 'முன்னேறிப் பாய்ச்சல்' நடவடிக்கையில் காயம் அடைந்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தியது.

வீட்டிற்குத் திரும்ப வந்தவன், 'எத்தனை குழந்தைகளைத் தூக்கினேன் தெரியுமா? எத்தனை பிணங்களைத் தூக்கினேன் தெரியுமா? கையைக் கழுவக் கழுவ இரத்தம் ஒட்டியிருக்கிறது' என்று அரற்றிக் கொண்டு இருந்தான். அடுத்த மாதமே வீட்டைவிட்டுப் போய்விட் டான். நீ சொன்னபடி துவக்கு தூக்கிக்கொண்டு மரணத்தை நிச்சயித்துக்கொண்டான்.

தனது பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் என்று கனவு கண்ட என் பெற்றோர், கடைசிப் பிள்ளை கனவைக் கலைத்தாலும், மற்றைய மூவரும் ஈடு செய்வார்கள் என்றிருந்தார்கள். அவர்களது கனவைத் திரும்பச் சிதறடித்துவிட்டு, 95-ல் யாழ் மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தபோது, எனது அடுத்த தம்பியும் தன் தம்பியின் தடம் ஒற்றிப் போய்விட்டான்.

இவர்கள் மரணத்தை நிச்சயித்துக் கொண்டார்கள் என்று நாங்கள் தண்ணீர் தெளித்து விடவில்லை சகோதரா! அவர்கள் களமுனையில் நிற்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் செத்துப் பிழைக்கும் வாழ்வை வாழ்பவர்கள். பாம்பு கடித்து இறந்தாலும், பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு இறந்தாலும், களத்தில் வீர மரணம் என்றாலும், இழப்பு தரும் வலி, இருப்பவர்களுக்கு ஒரே மாதிரியானதுதான். வலி தரும் உணர்வுகள் மட்டுமே வெவ்வேறானவை.

என் கடைசித் தம்பியின் வீர மரணச் செய்தி கேட்டுக் கதறித் துடித்தபோது, கட்டிப் பிடித்து அழுவதற்கு அவன் உடல் கூடக் கிடைக்கவில்லை. சட்டம் இடப்பட்ட புகைப்படமே மிச்சம் இருந்தது எங்களுக்கு.

இவர்கள் வலுக்கட்டாயமாகப் போரில் நுழையும் சண்டியர்கள் அல்ல; காலம்காலமாகப் போர் எங்களில் திணிக்கப்பட்டது. இயக்கத்துக்காரியான உனது மச்சாளின் பேச்சு குறைந்திருந்தது என்று எழுதி இருந்தாய். தயவுசெய்து இப்படி எழுதுவதன் மூலம் அவர்களை இரும்பு மனிதர்கள் என்று உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிவிடாதே!

அவர்கள் அன்பானவர்கள்; கலகலப்பானவர்கள். அடுத்தவன் அழிவைப் பார்த்தே, 'ஐயையோ' என்று பதறி ஆயுதம் எடுத்தவர்கள். யார் அழிந்தாலும் எனது வாழ்வு, எனது படிப்பு, எனது உயிர் முக்கியம் என்று கடக்க முடியாதவர்கள்.

இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதாக எழுதி இருந்தாய். கனடாவில் இருந்து நானும் அதையே செய்கிறேன், சகோதரா! சிறிய வித்தியாசம். நெஞ்சுக்குழிக்குள் ரயில்கள் தடதடக்க, மாவீரர் பட்டியலில் அடுத்த தம்பியின் பெயர் உள்ளதா என்று பார்க்கும் கணப் பொழுதுகளும் மிகக் கொடுமையானவை.

அதில் அவன் பெயர் வரவில்லை என்று உணர்ந்து வரும் அந்தச் சிறு நிம்மதியை, அதில் உள்ள மற்றைய பெயர்கள் எல்லாமே என் சகோதரச் சகோதரிகளாக மாறி அடித்துச் செல்ல, எஞ்சி நிற்கும் வெறுமை ஆளையே கொல்லும்.

பொதுமக்கள் இறந்தாலோ, காயப்பட்டாலோ, பெயர் விவரம் எங்களை உடனே வந்து சேரும். போராளிகள் இறந்தால்கூட, தாமதமாக என்றாலும் பட்டியல் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், காயம் அடைந்து விழுந்துகிடக்கும் போராளிகளின் பெயர் எந்தப் பட்டியலிலும் வராது சகோதரா!

எங்கள் போராளிகள் வெற்றி பெறும்போதெல்லாம் முழு நீள அக்ஷன் திரைப்படம் பார்ப்பது போல், நீ சொன்னது போல்... கனவுகளைத் தின்னும் கற்பனைக் குதிரைகளில் தொலைவுகளைக் கடந்துவிட்டு, இப்போது கிளைமாக்ஸ் பிடித்தபடி அமையாத போது... இது சரிப்பட்டு வராது, என் உறவுகள் என்னுடன் இருந்தால் போதும் என்று வாழ்பவர்கள் - புலம் பெயர் மண்ணிலும் வாழ்கிறார்கள்; வன்னி மண்ணிலும் வாழ்கிறார்கள்.

அது போலவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கட்டாயத்தினால், போராட்டத்தில் இருந்தும் நாட்டில் இருந்தும் வெளியேறிவிட்டு, 'ஐயோ! இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளதே, கடல் கடந்து, கண்டம் கடந்து ஈழம் போய்ச் சேரமாட்டோமா?' என்று மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கில். அதன் வடிவமாகத்தான் இலட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், ஐ.நா. வாசலில் தீயூட்டிச் செத்துப் போனான்.

எங்களை விட்டுவிடு. புலம் பெயர்ந்து வந்தாலும் எங்கள் வாழ்வுகள் ஈழத்தில் புதையுண்டு கிடக்கின்றன. ஈழத்தில் எம் மக்கள், கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதைக் கண்டு மனம் வெதும்பித் தன்னைத் தீயிட்டு, இந்த அவலத்தை உலகறிய வைத்தானே முத்துக்குமார், அவன் எந்த கிளைமாக்ஸை எதிர்ப்பார்த்திருந்தான்?

அவனைத் தொடர்ந்து எத்தனை பேர்? இவர்களின் குடும்பங்களையும் எமது நாட்டின் போர் முத்தமிட்டுச் சென்றுள்ளதே! இவர்களின் இழப்புக்கு எதனை ஈடுவைக்கப் போகிறோம் நாம்?

தான் இறந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் வாழ வேண்டும் என்று கரும்புலியாய் செல்லும் எங்கள் வீரனின் தியாகத்துக்கும், தான் இறந்தாலும் பரவாயில்லை, ஈழத் தமிழன் வாழ வேண்டும் என்று தன்னை அழித்த முத்துக்குமாரின் தியாகத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை எனக்கு.

''எங்கள் இனிய உறவுகளே, எங்கள் மக்கள் அழிந்துகொண்டு இருப்பதைப் பார்த்து அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனாலும், மேலும் மேலும் முத்துக்குமாரைப் பின்பற்றுபவர்களைப் பார்த்துக் கை தொழுது கேட்கின்றோம். சாவில் எழுதிய ஜாதகங்கள் எங்களுடையதாக இருக்கட்டும். மரணத்தின் வாசனை உங்கள் வாசலுக்கும் வருவதைப் பார்த்திருக்க எங்களால் முடியவில்லை. எங்கள் வரலாறு இரத்தத்தால் வரையப்படுகிறது. அதற்குத் தீச் சுவாலைகளால் சட்டம் இடாதீர்கள்'' என்று கேட்கத் தோன்றுகிறது.

''உதிரியாகத் தீக்குளித்துச் சாவதை விடுத்து ஒன்றுபடுங்கள் மக்களே! ஈழத் தமிழனைக் காக்க என்று தினம்தோறும் புதிது புதிதாக அமைப்புகள் தொடங்குகிறார்கள் அரசியல்வாதிகள். எதற்கு இத்தனை அமைப்புகள்? மக்களே, உங்கள் போராட்டம் தவறான பாதையில் போகவிடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் அத்தனை கட்சிகளையும் அணி திரட்டுங்கள் என்று வேண்டுகிறேன் நான் - தமிழகத்து உறவுகளை!'

'புலம் பெயர் நாடுகளில், பயங்கரவாதம் என்று தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிக் கதைக்காமல், உங்கள் கவன ஈர்ப்பை நடத்துங்கள்' என்றார்கள். நாங்களும் செவி சாய்த்தோம். எங்கள் போராட்ட உணர்வை, தமிழீழ உணர்வை ஒதுக்கிவைத்து, மக்கள் அழிவதை மட்டும் எடுத்துக் காட்டினோம். அவர்களோ, மக்களை வெளியேற்றி இராணுவத்திடம் கொடுத்துவிட்டு, இனி புலிகளை அழியுங்கள் என்று சொல்ல ஆசைப்பட்டார்கள். ஆசைப்படுகிறார்கள்.

நாங்கள் விழித்துக் கொண்டோம். இப்போது 'புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள்' என்ற போராட்டத்தை அங்கீகரி' என்றே போராடுகிறோம். உன் எழுத்துக்களும் இதையே செய்யட்டும், சகோதரா! அவர்களின்றி நாங்கள் இல்லை. நாங்கள் இன்றி அவர்கள் இல்லை. இதை உலகுக்கு உணர்த்து!

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP