ம.தி.மு.க. வரலாற்றுப்பதிவுகள்

வைகோ பயோடேட்டா
பெயர் : வையாபுரி கோபால்சாமி (வை.கோ)
வயது : 65
தந்தை : வையாபுரி
தாய் : மாரியம்மாள்
கல்வி : எம்.ஏ. பி.எல்.,
பிறந்த கிராமம் : கலிங்கப்பட்டி (நெல்லை மாவட்டம்)
சகோதரிகள் : மூன்று பேர்
சகோதரர் : ரவிச்சந்திரன் (இளையவர்)
மனைவி : திருமதி. ரேணுகாதேவி
மகன் : துரை வையாபுரி
மகள்கள் : ராஜலெட்சுமி, கண்ணகி
பிடித்த விளையாட்டு : கால்பந்து
பொழுதுபோக்கு : நல்ல திரைப்படங்கள் பார்ப்பது, பழைய பாடல்கள் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது.
பிடித்த நடிகர் : சிவாஜி கணேசன்
வகித்த பதவிகள் : 25ம் வயதிலேயே (1970) கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர், பிறகு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்.
_ திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கித் தலைவர்.
_ தி.மு.க. மாநில, மாணவரணித் துணைச் செயலாளர்.
- 1976 ஜனவரி 31 முதல் 77 பிப்ரவரி வரை எமர்ஜென்சி காலத்தில் பாளையங்கோட்டை, சேலம் சிறை வாசம்.
- தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர்.
- தி.மு.க. தொண்டர் அணியை உருவாக்கினார்.
1978 - முதன் முதலில் மாநிலங்களவை உறுப்பினர்.
1984 - இரண்டாவது முறை
1990 - மூன்றாவது முறை. மொத்தத்தில் 18 ஆண்டுகள்.
1994 - முதல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்.
1998 - பிப்ரவரி - சிவகாசி தொகுதி எம்.பி.
1999 – அக்டோபர் – இரண்டாவது முறை சிவகாசி தொகுதி எம்.பி.
அரசியலுக்கு முன் வழக்கறிஞர்
சட்டக் கல்வி முடித்ததும் – சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பிறகு பதவி வகித்த ரத்தினவேல்பாண்டியனிடம் ஜூனியராக வேலை பார்த்தார் வைகோ. பணிபுரிந்த இடம் – திருநெல்வேலி.
‘வைகோ’ ஆனார்!
‘வை.கோபால்சாமி என்ற பெயர் இனிமேல் ‘வைகோ’ (Vaiko) என்றுதான் அழைக்கப்படும்’ என்று 1998 ஜனவரி 14ம் தேதி இந்திய அரசிதழில் செய்தி வெளியானது. தன் பெயரை ‘வைகோ’ என்று மாற்றும்படி வைகோ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார்.
வை.கோ. எழுதியுள்ள புத்தகங்கள்
கனவு நனவாகியது
இதயச் சிறகுகள்
வீரத்தின் புன்னகை
பரவட்டும் தமிழிசை
வெல்வோம்
நாதியற்றவனா தமிழன்?
சங்கநாதம்
அண்ணாவின் அகல்விளக்கு
Clarion Call
வை.கோவின் தொகுதி முகம்
சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ அந்தத் தொகுதியை ‘மாதிரி தொகுதி’ என்கிற அளவுக்கு மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தொகுதி முழுக்க போலியோவினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தானே முன் நின்று நிவாரண முகாம்கள் நடத்தி ஆபரேஷன்கள் நடக்க உதவியிருக்கிறார் வைகோ. கோவில்பட்டியில் மட்டும் மூன்று மேம்பாலங்கள் கட்ட உதவி. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்காக நுழைவுத் தேர்வு எழுத ஐந்து இலவச மையங்களைத் துவக்கியிருக்கிறார்.
சங்கரன்கோவிலில் உள்ளாறு நீர்ப்பாசனத் திட்டம்.
கட்டபொம்மன், கல்கி, ஓமந்தூரார், குமாரசாமிராஜா, இரட்டைமலை சீனிவாசன், மருதுபாண்டியர், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோருக்கு அஞ்சல் தலை வெளியிட ஏற்பாடு.
தொகுதி நிதியைத் தானே நேரடியாகப் போய் பள்ளிக் கூடங்கள், குடிநீர்த் திட்டங்களுக்கான தேவைகளை ஆய்வு செய்து நிறைவேற்றியிருக்கிறார்.
சிவகாசியில் தொகுதிப் பிரச்னைகளைக் கவனிக்க மட்டும் கணிப்பொறி வசதியுடன், மூன்று உதவியாளர்களுடன் அலுவலகம்.
யாழ்ப்பாணத்துக்கு ரகசியப் பயணம்



பிரபாகரனுடன் வைகோ
தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, 1989ம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார்.
அச்சமயத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும்போது இந்திய அமைதிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். பின்னர் வைகோ விடுவிக்கப்பட்டார்.
வைகோவைக் காப்பாற்ற படகிலிருந்த விடுதலைப்புலிகள் போராடினர். வைகோவைக் காப்பாற்றும் போராட்டத்தில் சரத் என்கிற பீட்டர் கென்னடி மரணமடைந்தார்.
தனக்காக உயிர் துறந்த பீட்டர் கென்னடியின் புகைப்படத்தை தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் வைகோ. அண்டை நாட்டிற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக வைகோ, கட்சித் தலைவர் கலைஞரிடம் மன்னிப்புக் கோரினார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே உறவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு
2000ம் ஆண்டுவாக்கில் இந்திய அரசின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டார் வைகோ. லண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டனில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, வைகோ பதவி விலக வேண்டும் என்று அப்போது கோரினார்.
ஒரு உறையில் இரண்டு வாள்கள்



தமிழீழ ஆதரவுக் கூட்டத்தில் கலைஞருடன் வைகோ
“விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து.’’
“வை. கோபால்சாமிக்கு சாதகமாக புலிகள் என்னைக் கொல்ல நினைக்கிறார்கள்.’’
“மத்திய உளவுப்பிரிவு எனக்கு அனுப்பிய தகவல் இது.’’
“தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்படிச் சொன்னபோது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பலரும் இதை நம்பத் தயாராக இல்லை. அப்போதே தி.மு.க.வில் இன்னொரு பிளவுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. இது நடந்தது 1993, அக்டோபர் 3ம் தேதி.
தி.மு.கவின் போர்வாள்
தி.மு.க.வில் அதுவரை வைகோ படுவேகமாக வளரும் இளம் தலைவராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களிலெல்லாம், வைகோவின் இடிமுழக்கம் போன்ற பேச்சைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் கூடினர். “தி.மு.க.வின் போர்வாள்’’ என்றே கலைஞர் பெருமிதத்துடன் வைகோவைக் குறிப்பிட்டு வந்தார். வைகோ முறையான அனுமதியில்லாமல் இலங்கை சென்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து வந்ததால் பிரச்னை ஏற்பட்டபோதும் கூட கலைஞர் அவரை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. பின்னர் ஏன் இந்த மாற்றம்? எதற்காக வைகோவினால் தன் உயிருக்கு ஆபத்து என்று கலைஞர் சொன்னார்?
வாரிசு அரசியல்
இதற்குக் காரணம் தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்று எழுந்த சிக்கல்தான். கலைஞர் தன் மகன் ஸ்டாலினை வளர்த்து விட முயல்கிறார் என்றும், வாரிசு அரசியல் நடத்துகிறார் என்றும் வைகோவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
‘தலைவரின் உயிருக்கு உலைவைக்கும் வைகோ.வை நீக்க வேண்டும்’ என்றும் ‘வைகோ நிரபராதி’ என்றும் கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
வைகோ விவகாரத்தை ஆலோசிக்க 93 அக்டோபர் 5ம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. மொத்தம் 31 பேர் கலந்து கொண்டனர். அதில் 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு ஆதரவாக இருந்தனர். கட்சி உடைந்தது.
“கழகத்தின் அடுத்த தலைவர் பதவிக்கு வைகோ முயற்சி செய்கிறார்’’ என்றார் கலைஞர். (8.10.1993)
“ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ -_ இதுவும் கலைஞர்தான் (16.10.1993). இந்த பேச்சுகளுக்கெல்லாம் வைகோவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளவு பெரிதாகிக் கொண்டே போனது.
“சங்கொலி’’
ம.தி.மு.கவின் கட்சிப் பத்திரிகையான ‘சங்கொலி’ வார இதழ் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் 2.2.96ல் வெளியானது. ஆசிரியராக வைகோவும், பொறுப்பாசிரியராக க. திருநாவுக்கரசும் பொறுப்பேற்றார்கள். சங்கொலி, வெளியீட்டு விழா ஜனவரி 26, 1996ல் சென்னையில் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யா, ‘இந்து’ ராம், நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலர்ந்தது ம.தி.மு.க.
இனி கலைஞர் எனக்குத் தலைவர் இல்லை என்று வைகோ பகிரங்கமாக அறிவித்தார். வைகோவுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தி.மு.க. தொண்டர்களிடமிருந்து குரல்கள்; ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள். இதன் உச்சக்கட்டமாக வைகோவை ஆதரித்து ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர்.
நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்த பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட பிளவு நிரந்தரமாகிவிட்டது. தீக்குளித்து இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் வைகோ பேசிய பேச்சுக்களில் தீப்பிழம்பு!
இந்நிலையில் 29.12.93 அன்று தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி வைகோ தரப்பிலிருந்து உடனே வந்தது. தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு முன்பே 16.12.93 அன்று வைகோவின் ஆதரவாளர்கள் திருச்சியில் பொதுக்குழுவைக் கூட்டினர்.
கலைஞர், பேராசிரியர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, சாதிக் பாட்சா ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக திருச்சியில் வைகோ ஆதரவாளர்கள் அறிவித்தனர்.
திருச்சியில் பொதுக்குழு
திருச்சியில் நடந்த பொதுக்குழுவில் 447 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்தம் உள்ள 825 உறுப்பினர்களில் இது பெரும்பான்மை என்றும் வைகோ அணி அறிவித்தது.
கட்சியின் அமைப்பு முறையும் அண்ணா காலத்தில் இருந்தது போல் மாற்றியமைக்கப்பட்டது. பொதுச் செயலாளராக வைகோ, அவைத்தலைவராக எல். கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (அவைத் தலைவர் பதவியை உருவாக்கியவர் அண்ணாதான்.)
இதன்பிறகு தி.மு.க. பொதுக்குழு 29ம் தேதி சென்னையில் கூடியது. இதில் 903 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்த உறுப்பினர்கள் 1112 பேர் என்றும் கூறப்பட்டது. இரண்டு அணிகளும் பெரும்பான்மை வலு தங்களிடம் இருக்கிறது என்று கூறியதால் வைகோ அணியை திமுக (கோ) அணி என்றும் கலைஞர் அணியை திமுக(க) அணி என்றும் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
மயிலாப்பூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தது. எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்ற சிக்கல் வரவே - உதயசூரியன் சின்னம் கேட்டு வைகோ தேர்தல் ஆணையத்திடம் சென்றார். ஆனால், கறுப்பு-சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.வுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
பிறகு _
வைகோ அணி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றிக் கொண்டது. தி.மு.க. கொடியின் கறுப்பு வண்ணத்திற்குமேல் இன்னொரு சிவப்பைச் சேர்த்து தங்கள் கொடியாக்கிக் கொண்டனர். மயிலாப்பூர் பெருந்துறை இடைத்தேர்தலில் குடை சின்னம் கிடைத்தது.
இணைந்த இரு துருவங்கள்



ஜனநாயக மக்கள் கூட்டணியின் பொதுக்கூட்டம்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்து 1996ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.
அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.
தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ. கூட்டணி.
ம.தி.முக., சி.பி.ஐ(எம்)., ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மக்கள் ஜனநாயகக் கூட்டணி.
ம.தி.மு.க. மதுரையில் “தேர்தல் சிறப்பு மாநாடு’’ நடத்தியது. இம்மாநாட்டில் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், ஜி.ஏ. வடிவேலு போன்ற கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
அதேசமயம் புதுவையிலும் தேர்தல் வந்தது. ம.தி.மு.க. அங்கும் தேர்தலில் போட்டியிட தயார்படுத்திக் கொண்டது.
தமிழகத்தில் மொத்தம் 179 சட்டமன்றத் தொகுதிகளிலும், 23 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ம.தி.மு.க. போட்டியிட்டது தேர்தல் சின்னம் குடை.
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும், சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். தேர்தலில் ம.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 93ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.முக. கணிசமான இடங்களைப் பிடித்தது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த நம்பிக்கையுடன் அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 98ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் ம.தி.முக. வென்றது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க இடம் பெற்றது. ம.தி.முக. வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஜெயலலிதா விதித்த சில நிபந்தனைகளால் மத்திய ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குறியானது. இந்தச் சமயத்தில் ம.தி.மு.க. தன் அழுத்தமான ஆதரவை பா.ஜ.க. அரசுக்குத் தெரிவிக்க, அ.தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்குமான உறவில் லேசான விரிசல்.
புகழ்பெற்ற டீ பார்ட்டி



வாஜ்பாய், கலைஞருடன் வைகோ
ஒரு புகழ்பெற்ற ‘டீ பார்ட்டி’ நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஜெயலலிதா, பா.ஜ.க. அரசுக்கான தன் ஆதரவைத் திரும்பப் பெற்றார். இதனால் வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் யாரும் எதிர்பாராதவிதமாக தி.மு.க. தன் ஆதரவை பா.ஜ.கவுக்கு வழங்கியது. ம.தி.மு.க.வும் வாஜ்பாய்க்கு ஆதரவாகச் செயல்பட்டது.
ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மத்திய அரசு கவிழ்ந்தது. பதிமூன்றே மாதங்களில் நாடு இன்னொரு தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது.
இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைத்த அணி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், அ.தி.மு.க. ஒரு அணியாகவும், த.மா.கா., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ (சிவகாசி), செஞ்சி ராமச்சந்திரன் (திண்டிவனம்), கண்ணப்பன் (திருச்செங்கோடு), கிருஷ்ணன் (பொள்ளாச்சி) ஆகிய நான்குபேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள்.
ம.தி.மு.க. மத்திய அமைச்சர்கள்
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்திய ஆட்சி அமைந்தது. இந்த அமைச்சரவையில் ம.தி.மு.க. பங்கேற்றது. ம.தி.மு.க. பொருளாளரான கண்ணப்பன், மரபு சாரா எரிசக்தித் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சராகவும், ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
தனித்துப் போட்டி
மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. ஆனால் தனித்து இந்தத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
கலைஞருக்கு வைகோ நோட்டீஸ்
என் பெயருக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கோ அல்லது அரசின் தலைமைச் செயலகத்திற்கோ எழுதும் கடிதங்கள் உரிய நேரத்தில் என் கைக்கு கிடைக்காத காரணத்தால் தயவுசெய்து இனிமேல் கடிதம் எழுதுவோர் என் வீட்டு முகவரிக்கே எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’- முதல்வர் கலைஞர் 24.12.1997 ‘முரசொலி’யில் இப்படி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று வைகோ முதல்வருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் முதல்வரின் அலுவலக முகவரிக்குத்தான் அனுப்பப்பட்டது.
தாயகம் அமைந்தது
கட்சி தொடங்கி ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ம.தி.மு.க.வுக்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. 141, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை எனும் முகவரியில் அமைந்த அலுவலகத்திற்குத் ‘தாயகம்’ எனப் பெயரிட்டார்கள்.
96ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ‘தாயகம்’ திறப்பு விழா நடைபெற்றது. அப்போதைய ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன் தலைமை தாங்கினார். அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் வைகோ.
இந்த நிகழ்ச்சியோடு பெரியார், அண்ணா பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
‘எழும்’ என்பதால் எழும்பூரில் ம.தி.மு.க.



தாயகம் திறப்பு விழாவில்
இந்த இயக்கம் வீழ்ந்து விட்ட இயக்கமென்று சொன்னார்கள். இனி எழப் போவதில்லை என்று சொன்னார்கள். எழும் - வீழ்ந்த வேகத்தோடு எழும் - உறுதியுடன் எழும் - லட்சியத்துடன் எழும் - அண்ணாவின் கொள்கை காக்க எழும் - அண்ணாவின் தம்பிமார் பட்டாளத்தை அழிப்பதற்கு எந்தச் சக்தியும் இல்லையென்று கம்பீரமாக அணிவகுத்து எழும் - அப்படி எழும் என்பதற்காகத்தான் எழும்பூரிலே எங்கள் கட்டடம் எழுந்து நிற்கிறது.’’
(‘தாயகம்’ திறப்புவிழாவில் வைகோ பேசியது)
தாயகம் தூவிய பாசமலர்!



ஜெயல்லிதாவை வரவேற்கும் வைகோ
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்திற்கு ஜெயலலிதா வந்தபோதுதான் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்துக்கான அடித்தளம் அமைந்தது. “தாயகம் உங்களைப் பாசமலர் தூவி வரவேற்கிறது’’ என்று ம.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வரவேற்றனர். “தாயகத்தில் எனக்கு மகிழ்ச்சியான அன்பான வரவேற்பை ம.தி.மு.க.வினர் அளித்தனர்’’ என்று ஜெயலலிதா மகிழ்ந்தார். கடைசியில் வைகோ, மறுமலர்ச்சி தி.மு.க. - அ.தி.மு.க. இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
போராட்டப் பாதையில்..
கட்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை பல போராட்டங்களை ம.தி.மு.க. நடத்தியுள்ளது. அதில் சில..
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைப் பயணம்



நடைபயணத்தின்போது தொண்டர்களுடன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ நடைப்பயணம் சென்றார். 14.5.97 அன்று திருவைகுண்டத்தில் தொடங்கி 16.5.97 தூத்துக்குடியில் முடிந்த இப்பயணத்தில் ஆயிரக்கணக்கில் ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
‘ஈழத் தமிழரைக் கொல்லாதே’ வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்



ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்
இலங்கையில் ஈழத் தமிழர்களைச் சிங்கள ராணுவம் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் 30.5.97 அன்று சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளராக இருந்த மு. கண்ணப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்ட முடிவில் கண்டன உரையாற்றினர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை: குஜ்ரால் - வைகோ சந்திப்பு
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தக்கோரி அன்றைய இந்தியப் பிரதமர் குஜ்ராலிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
30.7.97 அன்று டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. வைகோவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்தார்.
மாநில சுயாட்சி மாநாடு



மாநாட்டின்போது வைகோ
ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு மாநில சுயாட்சி மாநாடாக 1999 ஜூலை 24, 25 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் கலைஞர், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநில சுயாட்சி பற்றிய ம.தி.மு.க.வின் பிரகடனத்தை அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே வெளியிட்டார்.
‘தமிழக எழுச்சி மாநாடு!’
மறுமலர்ச்சி தி.மு.க.வின் ஈரோடு மாவட்ட முதல் மாநாடு தமிழக எழுச்சி மாநாடாக நடத்தப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி, தமிழக முதல்வர் கலைஞர், அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அன்றைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், மின்துறை அமைச்சராக இருந்த மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Read more...

புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.

இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.

இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.

வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?

போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.

தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?

எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!

Read more...

சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி, சீனாவுக்கு ஒரு பிலிம் காட்டவும் அத்தோடு நின்றுவிடாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் காங்கிரஸ் சொல்லிவந்தது. அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்த ஏற்பாடாகிவருகிறது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், அதனைத் தொடர்ந்து கனடா, இப்போது ஆபிரிக்கர்கள் என எல்லா விளையாட்டு வீரர்களும் இந்தியா செல்லப் போவது இல்லை என அரிவித்துவருகின்றனர். ஏன் தெரியுமா ? இதற்காக அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, உட்பட தங்கும் விடுதிகள் கூட, ஒரு தரத்தில் இல்லை என்பது மட்டுமல்லாது, சுத்தமாக இல்லை என்றும் குறைகூறப்படுகிறது. இதனை ஏன் இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றது ?

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் அவை 3ம் திகதிக்கு முன்னர் முடிந்துவிடுமா என்று இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. போதாக்குறைக்கும் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று உடைந்து விழுந்துள்ளது. அவசர அவசர மாகக் கட்டப்படும் கட்டிடங்களும், தொடர்மாடிகளும் எப்போது இடிந்து விழும் என்ற ஏக்கமே இங்கு உரையோடிப்போய் உள்ளது.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. இதனைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸார் விட்டதால், பிரச்சனை பூதாகரமாகி பி.பி.சி, சி. என். என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் எல்லாம், இந்தியா விளையாட்டு வீரர்களுக்காக அமைத்திருக்கும் தங்கும் அறைகளை போட்டோ எடுத்துக்காட்டி மானத்தை கப்பல் ஏற்றியுள்ளது. இதனைப் பார்வையுற்ற பல விளையாட்டு வீரர்கள் தாம் இந்தியா செல்லப்போவது இல்லை என தற்போது அறிவிக்க, அவ்வப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி, அவற்றை நாம் சர்வதேசத்தின் தரத்திற்கு உயர்த்துவோம் என கெஞ்சுவதும் வழமையான விடையமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கோ இதனைப் பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது. காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன எனக் கூறப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர்.

பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லையாம் நம்புவீர்களா இதை ? அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர். இதுதான் மேம்படுத்தலா. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துச் செல்கிறதே.

டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றிலும் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன. இது இவ்வாறிருக்க விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசிந்து முற்சந்திவரை வந்துவிட்டது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா ? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா ? காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?

Read more...

கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம் - வைகோவின் பதிலடி

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்..

Read more...

புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து

புதுச்சேரி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாநில அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

புதுவையைச் சேர்ந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில்,

புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள மாணவர்கள் [^] கல்வியில் பின்தங்கியுள்ளனர்.

இதையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு புதுவை அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும், மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள 75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3 ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநில மாணவர்களோ அல்லது புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரிவுக்கு எதிரானது. எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று மீண்டும் இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

அனைவரும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.

அந்த நேரத்தில் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்படவில்லை.

அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதை இந்த ஆண்டே உடனடியாக அமல்படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு புதுவை அரசு உள்ளாகியிருக்கிறது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP