ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! பழ.நெடுமாறன்
வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்...
பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்..
அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்..
(சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்திலே வாற அளவுக்கு பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது.. ரெயிலிலேயே வருகிறேன் என்று கூறினார்.. வயது முதிர்ந்த நேரத்திலும் அவரின் எளிமை எங்களுக்குப் பிடித்துவிட்டது...
அவருடன் ஆன அந்த அழகிய தருணங்கள் இதோ...
எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் ஈழத்தமிழர்களின் மேல் உண்மையான பாசமும் பற்றும் கொண்டு அவர்களின் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராடிக் கொண்டிருப்பவர் நீங்கள் மாத்திரம் தான் என்ற வகையில் ஈழத்தமிழர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி...
தம்பி, நன்றி தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் எமது சகோதரங்கள். சகோதரர்களுக்கிடையில் நன்றி தெரிவிப்பது அழகில்லை. (அழகாகச் சிரிக்கிறார்..)
ஈழத்திலே போர்க் கொடுமை நடந்தது. ஈழத்துக்கு அருகிலே 32 கிலோமீற்றர் தூரத்தில் இந்தியா உள்ளது. இங்கே 7 கோடித் தமிழர்கள் பார்த்துக் கொண்டு இருக்க... வெறும் 2 கோடி சிங்களவர்களால் 50000 தமிழ் மக்களை கொல்லக் கூடியதாக இருந்தது. அப்போதிருந்த போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?
நாம் கண்ணைக் கட்டி காட்டிலே விட்ட நிலையிலே இருந்தோம். எம்மால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளையும் நாம் செய்து கொண்டிருந்தோம். அத்தனை போராட்டங்களையும் செய்து கொண்டிருந்தோம்.
ஆனால் பதவி ஆசை பிடித்து வெறும் உப்புச் சப்பற்ற முதல்வர் பதவிக்காகவும் பணமீட்டுவதை மட்டும் கருத்தாகக் கொண்ட கருணாநிதி எங்களுடைய அத்தனை போராட்டங்களையும் மழுங்கச் செய்வதில் தன்னுடைய படை பலம் அதிகார பலம் அத்தனையையும் 100 வீதம் பாவித்து அதிலே வெற்றியும் கண்டார். ஆகவே இது எங்களுடைய தோல்வி அல்ல...
ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு யார் காரணம் என்று என்னைக் கேட்டால் அது இந்தியாவிலே இருக்கின்ற கருணாநிதி என்று தான் சொல்வேன்.
முத்துக்குமாரின் அந்த துக்க கரமான மரணத்தின் பின்பு தமிழகத்திலே ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு மாற்றத்தை எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லையே என்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் அமைப்புக்கள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
முத்துக்குமாரின் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து நாங்களனைவரும் போராட்டங்களுக்களிலும் முஸ்தீபுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேற்சொன்ன இதே கருணாநிதி தனது படை பலத்தை ஏவி முத்துக் குமாரின் சடலத்தை வெளியே எங்கேயும் வைக்க விடாமல் போலிஸ் பாதுகாப்பிலே புதைப்பதற்கான அத்தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ஏலாக் கட்டத்திலே நான் தம்பி வைகோ, போன்ற ஈழ ஆதரவாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் பெற்று அடக்கம் செய்யக் கூடியதாக இருந்தது. அதற்கு மேலே தமிழக அரசு ஒன்றும் செய்ய விடவில்லை. ஆகவே இதன் முழுக் குற்றச்சாட்டும் கருணாநிதியையே சென்றடையும்.
ஈழத்திலே இன்னொரு போராட்டம் சாத்தியமாகுமா? சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் முகாம்களில் வாடி இருக்கும் மக்களால் அப்போரை வழிநடத்தி செல்லக் கூடியதாக இருக்குமா?
சாத்தியமாக வேண்டும்.. அழுத்தமாகக் கூறுகின்றார்... தம்பி நீங்களே குறிப்பிட்டீர்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் போது தான் அதை உடைத்துக் கொண்டு வெளியே வரும் உணர்வு வரும்.. இவ்வளவு இழப்புக்களுடன் புலிகள் மாத்திரம் 30000 பேருக்கு மேலே வீரச்சாவடைந்துள்ள இந்த நேரத்திலே விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு பாதியிலே விட முடியும்.. ஆகவே விடுதலைப் போராட்டம் நடக்கும்..நடந்தே தீரும்..
நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்? அந்த அனுபவம் குறித்துக் கூறுங்கள்?
(அழகாகச் சிரிக்கிறார்...) அது ஒரு பெரிய கதை தம்பி 80 களில் சில ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க இளைஞர்கள் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருந்தனர்.
அந்த நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி அவர்களிலே யோகி மாஸ்டர் என்பவர் தான் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவரிடம் ஒரு நாள் நான் உங்களுடைய தலைவரைச் சந்திக்க வேணும் சந்திக்க என்னை அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டேன்.
ஒருநாள் அதே போல் என்னை ஒரு இடத்துக்கு அழைத்தும் சென்றார். ஆனால், அங்கே காணப்படுகின்ற இளைஞர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், தெரிந்தவர்கள். அப்போது நான் சொன்னேன் தம்பி நான் தலைவரைச் சந்திக்க வேணும், இவர்களைச் சந்திக்க வரவில்லை என்று கூறினேன்.
அப்போது அங்கே நின்ற ஒரு குள்ளமானவரை சுட்டிக் காட்டி இவர் தான் தலைவர் எனக் கூறினார். அப்போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் ஏனென்றால் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தவர்., என்னோடு ஒன்றாகச் சாப்பிட்டவர்.
ஆனால் அவர் தான் தலைவர் என்பது அன்று வரைக்கும் தெரியவில்லை. அப்போது பக்கத்தில் வந்த தலைவர் மன்னிக்க வேண்டும் ஐயா இது இயக்க இரகசியம் வெளியாலே சொல்ல முடியாது எனக் கூறினார்.
ஒரு மில்லியன் டொலர் கேள்வி அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?
இருக்கிறார். (அழகாகச் சிரிக்கிறார்...), மிகவும் பத்திரமாக இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறார். 5 ஆம் கட்ட ஈழப்போருக்கான அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் ஈழப்போர் வெடிக்கும். மிக விரைவில் தமிழீழம் மலரும்.
எதனடிப்படையில் நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அதாவது 2009 மே 15 நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவின் பின்னர் நீங்கள் பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
என்ன தம்பி கேட்கிறீர்.. மீண்டும் அதே சிரிப்பு... என்னுடைய தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்க்கப்படுகின்றது. நான் எங்கே இருக்கிறேன். எங்கே போகிறேன். நான் மலசலகூடத்துக்கு சென்றால் கூட அவர்கள் அங்கேயும் கண்காணிப்பு வைத்திருக்கின்றனர். ஆகவே இப்படிப்பட்ட 100 சத வீத கண்காணிப்பில் இருக்கின்ற ஒருவனோடு எப்படி தலைவர் பேச முடியும். இதனால் நான் பேசவில்லை...
உங்களுடன் பேசவில்லை என்கிறீர்கள்.. பிறகு எவ்வாறு அவர் உயிருடன் உள்ளார் என ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றீர்கள்?
எனக்குக் கிடைத்த தரவுகள், எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் உயிரோடு இருக்கிறார். மிகவிரைவில் ஈழப்போர் வெடிக்கும் . ஈழப்போருக்கான அடுத்த கட்ட முயற்சிகள், ஒருங்கிணைப்புக்கள் அனைத்திலும் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
அன்புச் சகோதரர்களே, துக்கம் வேண்டாம். நீங்கள் தனியே போராடிக் கொண்டிருந்தீர்கள், இப்போது உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு மத்தியிலே எடுத்துச் செல்லப்படுகின்றது.
உலகமெங்கும் வாழ்கின்ற சுமார் 10 கோடி மக்கள் உங்களுக்குப் பின்னால் நிற்கின்றார்கள். ஆகவே உங்களின் துயரத்தை விடுங்கள். துன்பத்தை விடுங்கள் நாங்கள் எப்போதுமே உங்களுடன் இருப்போம்...கை கூப்பி அழகாக முடிக்கிறார்...
Share100