ஈழம் ! - அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்


ஈழம் ! - அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், (09/12/2008)கடந்த செவ்வாய்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது:

இங்கிலாந்து அரசு விட்டுச் சென்ற வரலாற்றுப் பிழையினாலேயே தமிழர்கள் இத்தனை துன்ப, துயரங்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. எனவே இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்சினையில் தலையிடவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து தெரிவித்துள்ளார்.

ஈழம் அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 09/12/2008 செவ்வாய்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தோழர்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழம் அறியவேண்டிய உண்மைகள் என்ற நூலை புதுவை மாநில முன்னாள் அமைச்சரும்,ம.தி.மு.க மாநில அமைப்பாளருமான நா.மணிமாறன் வெளியீட, விடுதலை சிறுத்தைகள் அமைப்புச் செயளாளர் சு.பாவாணன் பெற்றுக் கொண்டார்.

மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து கருத்தரங்க சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், ஈழப்பிரச்னை, ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு, இது தமிழ்நாட்டு பிரச்னையாக இருப்பதால், இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. ஈழப்பிரச்னையை தமிழகத்தை கடந்து இந்தியப் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும்,கடமையும் தமிழர்களாகிய நமக்கு உள்ளது.

1948- பெப்ரவரி 4 ந்தேதி, இங்கிலாந்து அரசு, இலங்கையின் அரசுரிமையை சிங்களவர்களின் கையில் கொடுத்துச் சென்றது மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. அப்பிழையினாலே தமிழர்கள் இத்தனை துன்ப,துயரங்களுக்கு ஆளாக நேரிட்டது. தான் செய்த பிழையை திருத்திக் கொள்ளும் விதமாக, இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்னையில் தலையிடவேண்டும். இங்கிலாந்து பாராளுமன்றம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கருத்து பரப்பல் என்ற நோக்கில் "ஈழம் அறியவேண்டிய உண்மைகள்" நூல் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது. போரை நிறுத்து ! என்ற வாசகத்துடன் கூடிய டி-சர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

<< BACK

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP