பாவேந்தர் காட்டும் இலக்கியப் பெண் - ஆ. ஆனந்தன்

    பாலியல் வேறுபாட்டைக் கற்பித்திருக்கும் ஆண் ஆதிக்கச் சமுதயாத்தில் பெண் பாலியல் அடிப்படையில் ஒடுக்கப்படுவதும் அதிலிருந்து பெண் மீட்சிபெற முயல்வதை, பண்பாடுகளாலும் நாகரீக வளர்ச்சியினாலும் கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் காணமுடிகிறது. பெண் சமுதாயத்தில் அடிமைநிலையிக்கு தள்ளப்பட்டு இருந்ததை கண்ட பாரதி, பெரியார், பாரதிதாசன் போன்ற சிந்தனைவாதிகள், இந்நிலையை ஒழிக்க பாடுபட்டனர். மூடப்பழக்க வழக்கங்களால் பெண்களை அடிமைப்படுத்த விரும்பாத பெண்ணியவாதிகள் சமூகச் சிந்தனையாளர்கள் காலந்தோறும் போராடிவருகின்றனர். இத்தகைய நிலையில் தமிழ், தமிழுணவர்வு பெண்விடுதலை என திராவிட இயக்கச்சிந்தனைகளை ஒரு சேர சிந்தித்து அதனைத் தம் கவிதைகளில் கையாண்டு சமுதாயத்திற்கு கருத்துறைகளை வழங்கிய புரட்சிக் கவிஞரின் இலக்கியத்தில் பெண் என்பவள் எப்படி சித்திரிக்கப்பட்டுள்ளால் என்பதை ஆராயும்நோக்கிலே இக்கட்டுரை அமைகிறது.

    பாவேந்தரை புரட்சி கவிஞரென்றும், புதுவைக் கலைஞரென்றும் புதுமை அறிஞரென்றும் பலவிதமாகப் பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவருடைய புரட்சிக் கொள்கைகளை போற்றாதவர் யாரும் இல்லை. இவருடைய பெண் உரிமைக் கொள்கையில் பெண் சமுதாயமே விழித்தெழுந்தது. புலவர்களின் வர்ணணைக்கும், காதலுக்கும் மட்டுமே கருவியாகக் கிடந்த பெண் இனத்தை வாழ்க்கையின் வேரும் விழுதுமாய்க் காட்டியவர் பாவேந்தர்.
    பாவேந்தர், கவிதையைக் கண்காட்சிப் பொருளாகப் பார்க்காமல், களத்தில் எய்யப்படும் கணைகளாகவே எண்ணிப் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தெளிவான சமுதாயக் குறிக்கோளுடன் வெளிப்படுத்துகிறார். சாதிமத வேறுபாடுகளால் தவிக்கும் நாடு என்றைக்கும் இருட்டிலேயே இருப்பதுபோல், சமூகரீதியாகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணிணத்தை அடிமைகளாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் சமுதாயம் என்றைக்கும் விழிப்படையாது என்கிறார். எனவேதான்
“பெண்ணடிமை தீரு மட்டும் பேகம் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே”
என்று மனித நேயத்தால் விளைந்த புதிய சிந்தனையால்தான் தீர்க்க முடியும் என்று எண்ணிப் பெண்ணடிமைத் தனத்தை ஒழித்தால்தான் மண்ணடிமைத் தனத்தை ஒழிக்க முடியும் என்று தொடர்புப்படுத்தியும் காட்டுகிறார்.
    பெண்ணினத்தைப் போற்றுவதைக் காலத்தின் கட்டாயத்தால் செய்கின்றவர்கள் உள்ளனர். ஆனால் பாவேந்தரோ எந்தக் கட்டாயத்தாலும் அதைச் செய்யவில்லை, ஒரு சமுதாய நோயைக் குணப்படுத்தவேண்டும் எணும் வேட்கையே அவரது நோக்கம். எனவேதான் அவரது காவியப் படைப்புகள் பெரும்பாலானவற்றில் பெண்கள் ஆடவரைக் காட்டிலும் அறிவாளிகளாகவும், வீரம் மிக்கவர்களாகவும், வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
    இத்துறையில் தமிழகத்தில் மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, திரு.வி.க. முதலானோர் சிறப்பாகத் தொண்றாற்றியுள்ளனர். கவிதையுலகில் பாரதிதாசன் பெண்களின் கண்ணிரைப் படைத்ததோடு நில்லாமல் அதைத் துடைப்பதற்கான வழியினையும் காட்டியிருப்பது முற்றிலும் உண்மை.
    தந்தை பெரியார் பெண்விடுதலைப் பற்றிய தொலைநோக்கும், மிக முற்போக்கான கண்ணோட்டமும் உடையவர். பெண் விடுதலை பற்றி மிகத் தீவிரமான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு, விபச்சாரம் போன்ற ஒழுக்க வார்த்தைகள் ஆண்களால் ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்குப் போடப்பட்ட கொடுமைiயான பலமான அடிமைச் சங்கிலிகளே என்பதைப் பெரியார் உணர்த்தினார். உண்மையான பெண்கள் சுதந்திரம் வேண்டுமானால், பெண்கள் தங்கள் கர்பப்பையை எடுத்துவிடவேண்டும். கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது, நிலவும் திருமணமுறை ஆண்களுக்குப் பெண்களை நிபந்தனைகளற்ற அடிமைகளாக்குவது என்ற அளவுக்கு முற்போக்காகப் பெரியார் பிரச்சாரம் செய்தார்.
    இவர் வழிவந்த பாரதிதாசன், தந்தைப் பெரியாருடைய புரட்சிக் கோட்பாட்டினையும், பகுத்தறிவு நெறியையும், தன்மானக் கொள்கையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைத்தவராதலால் அவரின் படைப்புகள் இன்றுவரை நின்று விளங்குகின்றன. பெண்ணின் பெருமையைப் பாடுவதையும், இழிவைப் போக்கவும் உலக நலனுக்காகவும் அவர் பெண் கல்வியை வற்புறுத்தினர்.
“பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பெணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே
பெண்கட்டுக்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே”
என்று பெண் கல்வியால் வீடு, நாடு, உலகம் ஆகிய அனைத்தும் உயர்வுபெறும் என்று அறியுறுத்துகிறார். பெண்களின் உயர்வைப் பாடும் பாவேந்தர் கல்விபெறும் உரிமையை அவர்களுக்கு முழுமையாக வழங்கவேண்டுமெனக் கூறினார். பெண் கல்வி இல்லை என்றால் சமூகத்தில்
“கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை”
எனக் கூறுகிறார்.
    ஓர் ஆடவர் கற்றால் அவனளவில் அக்கல்வி நன்மை தரும். ஆனால் பெண் கற்றால் அவள் தன் குடும்பமே சார்ந்து விளங்கும் என்றும் எதிர்காலச் சமுதாயத்தின் முதல் ஆசிரியர் தாயே என்கிறார். கற்ற பெண்கள் சமுதாயத்தின் கண்கள் நல்ல பெண்கள் நல்ல சமுதாயத்தின் அடிப்படை ஆகும். ஆண்களோடு போட்டியிட முடியும், ஆடவர் செய்து முடிக்க முடியாதவற்றைப் அவரது படைப்புக்களில் ஒவ்வொரு வகையான புதுமைப் புரட்சியைச் செய்யும் பெண்களைச் சந்திக்க முடியும். மேலும் அவரது தனிப்பாடல்களிலும், குறுங்காவியங்களில் புதுமைப் பெண்களை நடமாட விட்டுப் புரட்சிகளை விளைவிக்கிறார்.
    பெண்களை உயர்வாகப் போற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட பாரதிதாசன் அடிமைப்படுத்த எண்ணம் கொண்ட ஆண்களை எச்சரிப்பதுடன், பெண் அடிமையை எதிர்க்கிறார். நீதி வழங்காத சமுதாயத்திலிருந்து விடுதலை மேற்கொள்ளச் சொல்லிப் பெண்ணுக்கு வழிகாட்டுகிறார். பெண்ணினத்தைக் கீழாகக் கருதிக் கொண்டு பெரும் பிழைகள் செய்கின்ற ஆண்கள் கூட்டம் பெண்ணை உயர்வாகக் கருதும் நாள் எந்நாளோ? அந்நாளில் மன்னர்களும் தானாக ஏற்றுக்கொள்வர். அப்பொழுது மடமையெல்லாம் ஒரு நொடியில் தொலைந்துபொகும் என்று பெண்ணியத்தைக் கருதிவந்த பெருமையெல்லாம் இவ்வையகம் காணும் என்று எண்ணி பெண்களின் நிலையை உயர்த்திக்காட்டி பெண்கள் செயலாற்றும் திறனொடு ஆணுக்கு நிகரான ஆற்றலுடன் மிளிரவேண்டும் என்று தம் படைப்புக்களில் படைத்துக்காட்டுகிறார்.
    “எதிர்பாராத முத்தம்” குறுங்காவியத்தின் தலைவி பூங்கோதையை பெண்ணின் மொத்த உருவமாகப் படைத்து எழில் ஓவியமாக நடமாடவிட்டிருக்கிறது.
“சஞ்சிவி பர்வதத்தின் சாரல்” என்னும் கதைக் கவிதையில் இடம்பெறும் வஞ்சி, அவள் காதலனான குப்பனை வழிநடத்துகிறாள். அச்சமும், மடமையும் கொண்ட சமுதாயத்தின் குறையைக் கண்டிக்கிறாள். அவள் அவனுள் நிறைந்திருக்கும் அறியாமை இருட்டை அகற்றி அறிவு விளக்கேற்றி வழிநடத்துகிறாள். இவற்றை நடப்பியல் உலகில் பெண்கள் அவமதிக்கப்படும் நிலைமையை மாற்றுவதற்காக நிமிர்ந்த ஞானச் செருக்கோடு பெண் மாந்தரை படைத்திருக்கிறார்.
“புரட்சிக் கவி” என்ற காவியத்தில் அமுதவல்லியும் ஒப்பற்ற பெண்ணாகவே உருவாக்கப்பட்டிருக்கிறாள். தலைகவிழ்ந்து நிலம் பார்த்துத் தடுமாறிப் பேசுகின்ற அப்பாவிப் பெண்ணைப் பாவேந்தர் மாற்ற எண்ணியே இப்படி ஓர் கற்பனைப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.
    பெண்மை நலம் பாராட்டும் பெரும்புலவரான பாவேந்தர்;, பெண்மையின் குன்றாப் பெருமையினைப் பறைசாற்றும்போது தருவாகத் திகழ்பவன் கணவன் என்றும், வேராக விளங்குபவன் மனைவி என்றும் குறிஞ்சித்திட்டில் குறிப்பிட்டு
“வேரை மரம் வெறுத்தால் விழுந்துடு மன்றோ குடும்பம்”
என வினவுகிறார்.
    சாதியை ஒழிக்க எந்த அளவு பாடுபட்டாரோ அந்த அளவுக்குத் தீவிரத் தன்மையுடன் பெண்ணடிமையையும் எதிர்த்துநின்று சமூக இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று எண்ணி நம்நாட்டில் பெண்கள் நிலையானது, மிகவும் கவலைக்கிடமானது என வேர் தொடங்கி உச்சிக்கிளை வரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும் என்று “பெண்களின் சமத்துவம்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
    அடிமை மணமுறை ஒழிக்கப்பட்டு பதிவு மணம் வேண்டும், இன்ப துன்பங்களில் சமபங்கு வேண்டும், உள்ளம் வேறுபட்டால் மடவர் பிற ஆடவரை மணக்கவும், வேறோர் அனங்கை ஆடவர் மணக்கவும் உரிமைவேண்டும் என்கிறார்.
    பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்கள்படும் கொடுமைப் போன்றவற்றை பற்றி பேசும்போது
        “கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே கிங்கு
        வேரில் பழுத்தபலா! மிக்க
        கொடிய தென் றெண்ணிடப்
        பட்ட தண்ணே-குளிர்
        வடிகின்ற வட்ட நிலா.
என்று பெண்டிர்க்காகக் கண்ணீர் வடித்திட்ட பேரன்புத் தாயுமானவர் அவர். சிறுமை நிலையில் இறாமல் பெண்கள் விழிப்புற்றுச் சிலிர்த்தனர் என்பதைக் கேட்டுப் பாரதிதாசன் “கோடியுள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்க” எனக் கூறுவதில் பெண்ணின் விடுதலை அறிந்து மகிழ்வதையும் காணமுடிகிறது.
    கணவரை இழந்த பெண்களின் நிலையைப் பற்றி புறநானூறும் கூறுகிறது. பாரதியும் கண்டிக்காத இச்சமுதாயக் கொடுமையைப் பாரதிதாசன் கண்டுகடிவதோடு, அவர்களுக்குப் புதிய வாழ்வளிக்க வேண்டிப் புரட்சியாய்ப் பாடுகிறார். மறுமணம்புரிய கெடுப்பவர்களை பிணங்கள் என்றும், சிறுமை என்றும், குறுகிய மதி உடையவர்களை பழிக்கிறார். எனவே பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறுதுணை தேடிச் செல்லலாம் என்று புவியின்மேல் முழங்கி சமத்துவம் கற்பிக்கிறார்.
    இதுபோன்ற சமுதாயச் சீர்கோடுகளை களைந்து இழிநிலையிலிருந்து பெண்களை மீட்டும் விதவை மணம் பல்கிப் பெருகிட வேண்டும் என்றும் பெண் அறிவாற்றலால் கல்வி கற்று மணத்திண்மை கொண்டு தன்னைத் தான் காத்துக்கொள்ளும் தகுதி படைத்திட வேண்டும் என்றும், வீரமும் ஆற்றலும் விவேகமும் செயல்திறனும் கொண்டு தன்னைச் சார்ந்தவரையும் பேணிக்காத்து நலம் செய்திட வேண்டும் என்றும் புதுமைக் கருத்து மலர்களைத் தூவிப் பெண்ணினத்தை மலரச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தம் எழுத்தாற்றலால் பெண் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்ட காரணமாயிருந்தார் என்பதை இவரது படைப்புகள் மூலம் காணமுடிகிறது.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP