கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகும் ஆத்மாக்கள் மன்னிக்காது: இந்து மக்கள் கட்சி
குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இராஜதந்திரம் என்கிற பெயரில் நாடகமாடும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை வெளியிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் நேர்காணல் பகுதி வருமாறு:
''தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத் தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவது சட்டப்படி தவறு. எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இதனை மனதில் கொள்ள வேண்டும். மீறினால், சட்டப்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்!'' - திடீரென இப்படியரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
வருகிற விநாயகர் சதுர்த்தியை 'தமிழீழ விநாயகர் சதுர்த்தி' தினமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகி இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யை இந்த அறிவிப்பு கொந்தளிக்க வைத்திருக்கிறது.
அக்கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத்தை நாம் சந்தித்தபோது, ஆவேசமும் ஆதங்கமுமாக முதல்வர் கருணாநிதியை பொசுக்கி எடுக்கத் தொடங்கினார்.
''ஈழத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர் கருணாநிதி. அவருடைய பாராமுகத்தை பயன்படுத்திக் கொண்டு மொத்த சதிராட்டத்தையும் முடித்து, ஈழத்தையே இழவுக்காடாக்கி விட்டது சிங்கள இராணுவம். தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமற்றும் கருணாநிதி இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத்து தமிழினம் நாதியற்றுப் போய்க் கிடக்கிறது. ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், திடீரென மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு!
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. ஆனாலும், அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி, மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?
அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை. ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது!'' என சீறத் தொடங்கிய அர்ஜுன் சம்பத் அடுத்த கட்ட ஆதங்கங்களையும் கொட்டத் தொடங்கினார்.
''தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க 'எழும் தமிழ் ஈழம்' என்கிற பெயரில் 'கட்-அவுட்'களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார்... திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது... பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது... கருணாநிதியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? நெடுமாறன், அமீர், சீமான் போன்றவர்களை மிரட்டத்தான் அரசின் அறிவிப்பா? திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை பொறுமை காத்து அதன்பிறகு திடீர் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? சமீபத்தில்கூட விடுதலைச் சிறுத்தைகள் 'எழும் தமிழ் ஈழம்' என்ற பெயரில் பாடல் சி.டி-க்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 'எழும் தமிழினம்...' என்கிற உணர்ச்சிப் பாடலை திருமாவளவனே எழுதி இருக்கிறார். கருணாநிதிக்கு இது கவனத்தில் படவில்லையா?
ஆரம்பம் தொட்டே அடக்குமுறை நடவடிக்கைகளாக வைகோ, அமீர், சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்டோரை எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த கருணாநிதி, திருமாவளவன் விவகாரத்தில் மட்டும் இன்றுவரை வாய்மூடிய மௌனியாக இருப்பது ஏன்? இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளின் பின்னணிகள் யாருக்கும் புரியாமல் இல்லை... ஈழத்துக்கான எழுச்சியை ஒரேயடியாக நீர்த்துப் போகச் செய்ய இருவரும் திட்டம் போட்டுச் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரால் ஈழ விவகாரம் பெரிதாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திருமாவளவனை தூண்டிவிட்டு ஒப்புக்குச்சப்பாக பிரசாரம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
திருமாவளவன் என்றைக்கு காங்கிரசுடன் கைகோத்தாரோ, அன்றைக்கே ஈழத்தைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தை ஏமாற்றவும், காங்கிரஸை மிரட்டவும் திருமாவளவன் என்கிற அஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இராஜதந்திரம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் நாடகமாடும் கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது!'' என படபடத்துத் தீர்த்தார் அர்ஜூன் சம்பத்.
'எழும் தமிழ் ஈழம்' என்கிற பெயரில் சி.டி. வெளியிட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை நிலையச் செயலாளரான வன்னியரசுவிடம் இது குறித்துக் கேட்டோம். ''தமிழ் ஈழ எழுச்சிக்கான பாடல்களைத்தான் சி.டி. வடிவில் தயாரித்து வெளியிட்டிருக்கிறோமே தவிர, இந்திய இறையாண்மையை பாதிக்கும் விதமாகவோ, பயங்கரவாதமாகவோ நாங்கள் ஏதும் செய்யவில்லை. ஈழ விவகாரத்தில் சாயம் வெளுத்துப் போனவர்களுக்கு மத்தியில், இன்றளவும் எள்ளளவும் பின்வாங்காமல் போராடி வருவது சிறுத்தைகள் இயக்கம் மட்டும்தான். தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை இன விடுதலை அரசியல் மாநாடாக நடத்த விடாமல், பொலிஸ் எங்களுக்கு உண்டாக்கிய நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும், தனிஈழக் கோரிக்கையை உறுதியான பிடிப்போடு மேற்கொண்டு வரும் நாங்கள், பிறருடைய மிரட்டலையோ குற்றச்சாட்டுகளையோ பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை!'' என்றார் வன்னியரசு.
வீடியோ நன்றி - குண்டுமணி
2 comments:
டேய் லூசு உனக்கு வேற வேலையே இல்லையா உன் வீட்டில் உன் தெருவில் உன் ஊரில் இருக்கும் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விட்டதா?
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை சோறு வஞ்சனை இல்லாமல் கிடைக்கிறதா
முதலில் அதற்க்கு வழி செய்ய முடிந்தா செய் இல்லை என்றால பொத்தி கிட்டு போடா பொறம்போக்கு
சும்மா இலங்கை புலின்னு பிணாத்திகிட்டு போடா
பெயரைக்கூட வெளியிடாத நீ கண்டிப்பாக தமிழ்நாட்டில் இலவசத்தைப் பொறுக்கித்திண்ணும்
தி.மு.க. நாயாகத்தான் இருக்க வேண்டும்...
Post a Comment