மனித நேயப் பொங்கல் - தூ. சடகோபன்

பொங்கல் விழா! தமிழருக்கென்று தமிழரெல்லாம் கொண்டாடிவரும் தனிப்பெருவிழா, உழைப்பை, பண்பாட்டை, நன்றிப் பெருக்கைத் தன் இனத்தேக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாள விழா. தமிழர்கள் தம் அகமெலாம் மகிழ்வுறக் குடும்பம் குடும்பமாகக் கூடிக் குலாவி குதூகளித்து இன்புறும் விழா. ஆன்றோர், சான்றோர்களால் ஏற்றிப் போற்றப்படுகிற விழா. நம் திராவிட இயக்கமும் தமிழ் இயக்கங்களும் முதன்மைப்படுத்திய விழா.

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட விழா. அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதி, அதுவே இறுதி கடிதமாக அமைந்துவிட்ட கடிதத்தில் பொங்கல் பற்றி கூறிடும் ஒவ்வொரு செய்தியும் அதன்பாங்கும் விழாவின் மாண்பினை உலகுக்கெல்லாம் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. உடல் நலிவுற்ற நிலையிலும் பொங்கலைப் போற்றும் விடத்து மனித நேயத்தை வலியுறுத்தும்விதம் இக்காலத்துக்கும் அப்படியே பொறுத்தமாக விளங்குகிறது. அண்ணா எழுதுவதைப் பாருங்கள்,
“வேறெல்லா விழாக்களும் போகும் இடத்திற்காக: பொங்கல் புதுநாள் இருக்கும் இடத்திற்காக” என்று நம் தமிழ் நாட்டிற்கான மாண்பினை எடுத்துரைக்கிறார். மேலும் கூறுகிறார், பொங்கல் புதுநாளை ஒட்டி தம்பி! உன்னால் இயன்ற அளவிற்குத் தமிழரின் தனிச்சிறப்புகளைக் குறித்து எடுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று நமக்கு அன்பாகப் பணிக்கிறார்.
மடலை முழுவதுமாக ஊன்றிப்படிக்கப் படிக்க என்னென்ன உணர்வுகளையெல்லாம் அண்ணா கொண்டிருந்தார், எப்படியெல்லாம் நம் தமிழ் சமுதாயம் மிளர்ந்திருந்தது, பண்பாட்டைப் பறை சாற்றியது என்பதையெல்லாம் அறிய தோன்றுகிறது. அறிந்ததை வெளிப்படுத்தவும் தூண்டுகிறது.



இதோ தமது இலக்;கை அண்ணா கூறுகிறார்: “மனிதத்தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். மனிதத்தன்மை நிகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே இந்த மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சனையும் மனிதத்தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது”.
இந்தப் பகுதிகளைத் திரும்பத் திரும்ப படித்துப்பார்க்க தூண்டுகிறதல்லவா! திராவிட இயக்கப் பற்றாளருக்கு மொழி, இன மான உணர்வாளர்களுக்கு உரமூட்டும் சொற்களாக அல்லவா தோன்றுகிறது. அண்ணா ஆட்சியிலிருக்கும்போது முதலமைச்சராக வீற்றிருந்தபோது எழுதிய மடலன்றோ, இது.
இன்றைய நிலையென்ன? அண்ணன் தோற்றுவித்த இயக்கத்தின் தொடராக ஏற்பட்ட ஆட்சியும் மாட்சியும் நிலவுகிற இக்காலத்தே நம் கண்முன்னே நம் அண்ணா காண விரும்பிய மனிதநேயம் மடிந்துபோனது. ஈழத்துமண்ணில் தமிழ் மைந்தர்கள் இலக்கம்பேர் கொன்று குவிக்கப்பட்டபோது நடுவண் ஆட்சிக்கும் மாட்சிக்கும் துணைபோனதே: மீளாப்பழிக்குத் திராவிட இயக்கம் ஆளானது: அம்மட்டோ: பண்பாட்டுச்சீரழிவை ஊடகங்கள் வளர்க்கின்றன. தமிழின் தனித்தன்மை அழிகிறது.
அண்ணாவின் கூற்றுப்படி பொங்கல் புதுநாளில் இவற்றையெல்லாம் அலசிப்பார்ப்பதும் மரபுகளை, பண்பாட்டை, மொழிவழி இனவழி சிந்தனைகளைப் பரப்புவதும் புதுப்புது களங்களை அமைப்பதும் நமது கடமையாகும்.
தமிழர் வாழ்வு அறிவியல் சார்ந்த வாழ்வு. இயற்கையோடு இயைந்த வாழ்வு.
தமிழரது சமூக வாழ்க்கையை முழுநிர்வாணப் பார்வையோடு பகுத்துப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாயததைத் திருத்தி உலகிலுள்ள மற்ற உயர்ந்த சமூகத்தார்க்கு இணையாக மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக ஆக்குவதுதான் தனது வேலையென்று தமது வேலைத் திட்டங்களைத் தொடங்கினார். அவைதான் நம் தமிழர் சமுதாயத்தின் தலையாத் திட்டங்களாக இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் தேவையானத் திட்டங்களாக சிந்தனைகளாக அமைந்துவிட்டன.
தமிழர் அறிவு: அறிவாசான் பெரியார் கூறுகிறார்:
“அறிவு என்றால் இயற்கை
அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன்”
இவ்வாறு இயற்கையை அறிந்த அறிவாளியாக பழங்காலத்தில், சங்ககாலத்தில் தமிழர் வாழ்ந்தனர். அவரது வாழ்க்கை முறை அப்படி அமைந்திருந்தது. முழுமையானத் தமிழராக கலப்படமற்ற பண்பாட்டுக்கு உரியவராக அன்றைக்குத் தமிழர் வாழ்ந்தனர். அதற்குப்பின்னர்தான் ஆரியர் வருகையும் ஆரியத்தாக்கமும் தமிழரிடையே நிலைகொண்டது. இன்றைய நிலைக்குத் தமிழர் ஆட்;பட்டனர்.
அன்றையத் தமிழர் வாழ்வு இயற்கையோடு இயைந்த வாழ்வாக பண்பாடுடைய வாழ்வாகத் தழைத்திருந்தது என்பதனைச் சிறிது காண்போம்.
மனம் உடையவன் மனிதன் என்பார்கள். மனிதன் அறிவு உடையவன், சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். தமிழன் இத்திறனைப் பெற்றிருந்தான். இயற்கையை ஆராய்ந்தான். அதில் வாழும் உயிரினங்களை ஆராய்ந்தான். நெறியான வாழ்க்கைக்கும் சமூக அமைப்புக்கும் உரித்தான கட்டுப்பாடுகளை ஒழுங்குமுறைகளை ஆராய்ந்தான். அவைகளையெல்லாம் தன் வாழ்க்கை முறைகளில் பதிப்பித்து வாழ்ந்தான் இவற்றையெல்லாம் நமக்குச்சங்க இலக்கியங்களாகிய அரிய நூல்கள் சான்றாகத் தருகின்றன.
இயற்கையை ஆராய்ந்த தமிழன், உயிரினங்களைப் பகுப்பு செய்து தமது அறிவால் அறிவினை ஆறாகப் பகுத்தான்.
தொட்டால் உணரக்கூடியது – ஓர் அறிவு
தொடுதலோடு நாவினால் சுவைத்துணரக்கூடியது - ஈரறிவு
தொடுதல் சுவைத்தல், மோர்ந்துணர்வுடன் கூடியது - மூவறிவு
தொடுதல், சுவைத்தல், மோர்ந்தலுடன் கண்டுணர்வது - நாலறிவு
தொடுதல், சுவைத்தல், மோர்ந்தல் பார்த்தல்
இவற்றுடன் செவியால் கேட்டுணர்வது - அய்ந்தறிவு
தொடுதல், சுவைத்தல், மோர்ந்தல், பார்த்தல்
கேட்டல் ஆகிய இவைகளால் அறிந்தவற்றைப்
பகுத்து பார்த்து கூறுவது - ஆறறிவு
ஆவ்வாறே நீர் நிலங்களையும், செடி கொடிகளையும், மலைகளையும் வகை வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் வாழ்க்கை முறையினையும் தமிழர் பதித்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், திரிபால் ஆகும் பாலை என நிலங்களை வகைப்படுத்தினான்.
மனிதனை உயர்தினை என்றும்.
மனிதனல்லாதவற்றையெல்லாம் அஃறினை என்றும் பிரித்தனர்.
ஆண்பால், பெண்பால் என வகுத்தானர், தமிழரின் அறிவியலுக்கு இவைகள் எடுத்துக்காட்டுகளாகும்.

தமிழர் வாழ்க்கை:

மனிதமனம் மாறும் இயல்புடையது. சமூகச்சிக்கல்களுக்கு உட்பட்டது. நெறிமுறைகளைச் சிதைக்கக்கூடியது. அதனால் கட்டு;ப்பாடுகளையும் நெறிமுறைகளையும் தமிழர் வகுத்தானர். வாழ்க்கையை அகவாழ்க்கை, புறவாழ்கை என வகைப்படுத்தினார்.
அகவாழ்க்கையைக் கற்பு ஆக்கினர். கற்புக்கு விளக்கமாக தொல்காப்பியம்
‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்’ என்று கூறுகிறது.
பெற்றோரும் மற்றோரும் கற்பித்த நல்லுரைகளை
மறவாது பின்பற்றுதல்
காதலனிடம் அன்பு காட்டுதல்
நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ளுதல்
இளகிய நெஞ்சுடன் பொறுமை காட்டுதல்,
இரகசியங்களை ஒருவருக்கும் உரைக்காமல்,
உள்ளத்திலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளுதல்.

இயன்றவாறு விருந்தினர்களை உபசரித்தல், தன்னைச் சூழ்ந்திருப்போரையும், சூழ்ந்திருக்கும் பொருள்களையும் பாதுகாத்தல் இவைகளெல்லாம் இல்லாளுக்கு வேண்டிய இன்றயமையாத குணங்கள். இதுவே சிறந்த கற்பாகும் என்கிறார் (நூல், தொல்காப்பியத்தமிழர்) சாமி சிதம்பரனார்.
இன்றைய கற்பு விளக்கம் பாலியல் சார்ந்ததாக மட்டுமே கொள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மண வாழ்க்கை இன்றியமையாதது. சமூக ஒழுக்கத்துக்கு மிகவும் அடிப்படையானது. மனம் மெய் தொடர்பானது, இவற்றில் வழுவிருத்தல் கூடாது. இதனை ஓர்ந்தே அக்காலத்து நிலவி வந்த களவு ஒழுக்கத்தை ஏற்றனர். கள்ள ஒழுக்கத்தைத் தீது என்றனர். வரைவு முறையை வரைப்படுத்தினர்.
இதனை,‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப’
எனும் தொல்காப்பியச்சான்றால் அறியலாம்
பொய்மையும் குற்றங்களும் ஏற்பட்ட காரணத்தால் அய்யர் எனும் பெரியோர்கள் சான்றோர்கள், அறிஞர்கள் சில சடங்கு முறைகளை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.

இயற்கையைத் தழுவிய வாழ்க்கை:

குமரிப் பெண்கள் சிலம்பு அணிந்தனர் திருமணத்தின் போது அச்சிலம்பு கழற்றப்படும். மனமானப் பெண்களே பூ சூடினர். குமரி பூ சூடுவதில்லை, பூ சூடிய பெண் மணமானவள் என்றும் சிலம்பு பூட்டியவள் குமரி என்றும் சமூகத்துக்கு அடையாளபடுத்தப்பட்டனர் பெண்கள். கன்னியர் பூ அணிதல் கூடாது, எதனால்? பூ பொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையானது, கைக்கு அழகியது, மணம்பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்குத் தூதாவது என அனையப் பெருஞ்சிறப்பும் உடையது பூ என்று முனைவர் வ.சுப.மாணிக்கம் ‘தமிழ்க்காதலில்’ பதிவு செய்கிறார்.
பூவினை போர் ஒழக்கத்துக்கும் அடையாளப்படுத்தினர் அக்காலத் தமிழர்.

ஆநிரைகளைக் கவர வெட்சிப் பூ
கவரப்பட்டவற்றை மீட்க கரந்;தைப் பூ
பகைமேற்படையெடுப்புக்கு வஞ்சிப் பூ
பகை ஏற்கும் எதிர்ப்பில் காஞ்சிப் பூ
கோட்டை முற்றுகையில் உழிஞைப் பூ
முற்றுகை முறியடிப்பில் நொச்சிப் பூ
களத்தின் கை கலப்பில் தும்பைப் பூ
வெற்றியில் வாகைப் பூ
என பூக்களை அணிந்து போர்க்களம் கண்டனர் முடியுடை மூவேந்தர்களும் பூக்களை உரிமையாக்கிக் கொண்டனர்.
சோழர் ஆத்திப்பூவும், பாண்டியர் வேப்பம்பூவும், சேரர் பனம்பூவும் அணிந்தனர். கடவுளுக்கும் பூக்களை வனகப்படுத்தினர். விரிக்கின் பெருகும்.
பூவின் பருவத்தை நனை, (போந்தை) அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ என ஏழு வகையாகவும், ஒரு மலரின் உறுப்புகளாக காம்பு, புல்லி, அல்லி, சூலகம், மகரம், தாது, தேன் என பகுப்பு செய்த தமிழரின் கூர்த்த மதியை எண்ணி வியக்கலாம்.

பருவங்கள் பகுப்பு:
காலங்களை வகைப்படுத்தினர்.
ஆண் பெண் பருவங்களை வகைப்படுத்தினர்.
பாலன், மீளி, மறலோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என ஆண்கள் ஏழு பருவங்களாகவும்.
பேதை, பெதும்பை மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என் பெண்கள் ஏழு பருவங்களாகவும் பகுக்கப்பட்டனர்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஏழுபிறப்பை 18ம் நூற்றாண்டில்:

1. கர்ப்பத்தில் அய்ந்துமாதம் வரையில் குழவியாய் இருப்பது.
2. ஆவயவாதி உற்பத்திக்காலம்.
3. பிண்டம் வெளிப்பட்ட காலம்.
4. குழந்தைப் பருவம்.
5. பாலப்பருவம்.
6. குமரப்பருவம்.
7. விருத்தப்பருவம்.
என பிறப்பை ஏழாகக் காட்டுகிறார்.
ஏழு பிறப்பும் தீயவை தீண்டா’ எனும் குறள் மொழிக்கு ஏழு பிறப்பும் இதுவாக இருக்குமோ என பகுத்தறிவு அடிப்படையில் அறிஞர்கள் ஆய்வு செய்யல் வேண்டும்.

தமிழை இயல், இசை, கூத்து என மூவகைப்படுத்தினர்.
இசையை ஏழு வகைப்படுத்தினர்.
ஏழிசைக்கு ஏழ்வகை பூக்களின் மணத்தை ஒப்புமை செய்தனர்.
ஒவ்வொன்றாய் விளக்கமளிக்க நீளும். இயற்கையோடு இயைந்து அறிவுசார் ஆய்வுக்குட்பட்ட தமிழர் அறநெறி வாழ்க்கையையும் மேற்கொண்டனர்.
அந்தணர் (அறவோர்) அரசர், வணிகர், வேளாளர் என்ற தொழில் முறையில் செயல்முறையில் மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட்பாட்டில் வாழ்ந்தனர். மேலோர், தாழ்ந்தோர், தீண்டாதார் என்ற வேற்றுமையில்லா மக்கள் சமுதாயம் நிலவிய காலம் அது.

அறநெறி வாழ்க்கை:

வறியோர்க்கு உறையுள், கல்வி பயில்வார்க்கு உணவு, அறுவகைச் சமயத்தார்க்கு உண்டி,ஆவிற்கு வாயுறை, சிறைப்பட்டார்க்குச் சோறு, அய்யமிடுதல், குழந்தைக்குத் திண்பண்டம், சோறுகொடுத்தல், மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால் தருதல், அறவைப் பிணஞ்சுடுதல், அற்றார்க்கு ஆடை கொடுத்தல், வண்ணாரால் ஆடை ஒலிப்பித்துக் கொடுத்தல், மயிர்வினைஞரால் வறியவர்க்கு மயிர் அகற்றுதல், தருமணஞ்செய்து வைத்தல், பூண்நூல் பூட்டுதல், நோய்க்கு மருந்து கொடுத்தல், முகம்பார்க்க கண்ணாடி அமைத்தல், காதுவளர்க்க ஏழை மகளிர்க்கு ஓலை தருதல், கண்ணுக்கு மருந்திடுதல், தலைக்கு எண்ணெய் கொடுத்தல், காமவின்பத்திற்குப் பொது மகளிரைச் சேர்த்தல், வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தருதல், பிறர்; துயர் காத்தல், தண்ணீர் பந்தல், திருமடம், தடாகம், இளமரக்காஅமைத்தல், ஆவுரிஞ்சி தறி ஆங்காங்கு அமைத்தல், ஆவுக்குக் காளையிடுதல், கொலைக்கு செல்லும் ஆடு மாடுகளை விலைகொடுத்து வாங்குதல் என 32 அறநெறிகளைக் கொண்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று மறைமலை அடிகளார் கூறுகிறார்.
இவ்விதமாக வளமான வாழ்வைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதை சங்ககாலத்தமிழ் நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
அண்ணா விரும்பிய மனித நேயம் தமிழர்வாழ்வில் விளக்கமுற காண முடிகிறது. அதனாற்றான் பொங்கல் விழாவை இருக்கும் இடத்திற்கான விழா என்று அண்ணா கூறினார்.
தமிழர் வாழ்வில் ஆரியம் புகுந்தது. தமிழர் நான்கு வருணங்களாக்கப்பட்டனர், அடிமைகளாய், தீண்டத்தகாதாராய் ஆனார்கள். மடமைக்கும், மூடத்தனங்களுக்கும் ஆட்பட்டனர். மானம் அற்று, வளமற்று கிடந்தனர்.
இக்காலக்கட்டத்தில்தான் தந்தை பெரியார் அறிவியக்கமாக சுயமரியாதை இயக்கத்தைக் தோற்றுவித்து தமிழரின் மறுவாழ்வுக்கும் மானமும் அறிவும் பெற்ற வாழ்வுக்கும் தன் வாழ்நாள் காலமெல்லாம் உழைத்தார்.
நம்மைப்பார்த்து பெரியார் கேட்டார். ‘உலகத்தில் மானமற்ற மக்கள், ஈனம் உற்ற மக்கள் சுயமரியாதை இன்னதென்று உணராத மக்கள் என்பவர்கள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் யார்? என்பதைச் சற்று நிதாமனமாகத் தேடிப்பார்த்தால் உங்களைத் தவிர வேறுயாரையாவது கண்டுபிடிப்பீர்களா? போதும் போதும், இனியாவது உங்கள் முயற்சியைச் சற்று சுயமரியாதைப் பக்கம் திருப்புங்கள்” என்று.

இன்றைக்கும் இக்கேள்வி நம்மைத் துளைத்தெடுக்கிறது. “உருவில் மனிதனாகவும், செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனிதத்தன்மையுடைய மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் என்று பெரியார் (1970)ல் கூறுகிறார். ஒரே காலக்கட்டத்தில் பெரியாரும் அண்ணாவும் ஒன்றியிருப்பதை பாருங்கள். பெரியாரும் அண்ணாவும் காண விரும்பிய சமுதாயத்தை எப்படி நாம் அமைப்பது. அறிவார்ந்த வளமான தமிழின மீட்புக்கு என் செய்வது. பொங்கல் புதுநாளில் அதற்கான செயல்களை வடித்தெடுப்போம்.

அறிவை விரிவு செய்
அகண்டமாக்கு
விசால பார்வையால்
விழுங்கு மக்களை
எனும் புரட்சிக் கவிஞர் வரிகளை
மனதில் நிறுத்துவோம்.

அண்ணாவின் மறுவடிவாய் அத்துணை குணங்களையும் கொண்டு விளங்கும் வைகோ வழிகாட்டுதலில் அணி வகுப்போம். மனிதநேயப் பொங்கலிட்டு ஈழத்தமிழர் துயர் துடைப்போம்.

- தூ. சடகோபன்
மதிமுக மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்
புதுச்சேரி.

1 comments:

Anonymous,  February 11, 2010 at 5:03 AM  

correcting statistical infection oversees contractions closures agricultural flags petlad cases ultraviolet
lolikneri havaqatsu

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP