தமிழர்களை ஒன்றுபடுத்தவே அரசியல் கட்சி: சீமான்
தமிழர்களை ஒன்றுபடுத்தவே நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுகிறது என்று அந்த இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கூறியுள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் தமிழின எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் மே 18ல் நடைபெறுகிறது. இது தமிழர்களுக்கான அரசியல் கட்சியாகத் தொடங்கப்படுகிறது.
இந்திய தேசியம்,திராவிடம் என்ற பெயர்களில்தான் இதுவரை தமிழகத்தில் கட்சிகள் உள்ளன.தமிழினத்திற்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
ஈழத்தில் முன்பிருந்ததைவிடவும் அதிகமாக தமிழன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். உலகம் முழுவதும் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழனுக்கு உதவ முடியவில்லை.
இலங்கை கடல் படையினால் நாள்தோறும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சித்திரவதை அனுபவிக்கின்றனர். இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய,மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவாக எச்சரிக்கை விடுவதற்குக்கூட அரசுகள் முயலவில்லை.
பல்வேறு உலக நாடுகள் இலங்கை அரசு போர்க் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.ஆனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ் இனத்திற்கென்று, மொழிக்கென்று அரசியல் கட்சி அமைக்க வேண்டியது அவசியம். தமிழர்களை ஆள்பவர்கள் தமிழன் துயரப்படும்போது உதவவில்லை. எனவே, தமிழரைப் பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி தேவை.
இந்தக் கட்சியின் கொடி அறிமுக விழா (சனிக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது. நாங்கள் வசதியாக வாழ்வதற்காகக் கட்சி தொடங்கவில்லை.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அப்படியொரு நிலை ஏற்பட்டால், கட்சியைக் கலைத்துவிட்டு திரைத்துறைக்குச் சென்று விடுவேன். தமிழின அமைப்புகள் விரும்பினால், அவர்களைத் தேர்தலில் சேர்த்துக் கொள்வோம்.
கட்சி தொடங்கிய பின்னர்,ஊர் ஊராகச் சென்று இளைஞர்களிடம் தமிழின உணர்வுகளைப் பரப்புவோம். அரசியல் வகுப்புள் நடத்தி, இளைஞர்களை வழி நடத்துவோம். பெரியார், பூலித்தேவன், ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தமினத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களில் படிப்பகங்களைத் தொடங்குவோம்.
உடல் பயிற்சிக் கூடங்களை அமைத்து,இளைஞர்களைத் தனித்திறன் மிக்கவர்களாக வார்த்தெடுப்போம். இளைஞர்களை மது,புகையிலை போன்ற தீயசெயல்களில் இருந்து மீட்டெடுப்போம் என்றார்.
0 comments:
Post a Comment