முட்டுச்சந்தில் திணறும் மூவரணி – மீனகம் இளமாறன்

கடந்த ஏப்ரல் 27ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம். வேலை நிறுத்தத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அவசிய பொருட்களின் விலைஉயர்வு, முக்கிய குற்றச்சாட்டாக இந்த அடைப்புக்கு காரணம் சொல்லப்பட்டது. அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு நாடுதழுவிய அளவில் பெரும் ஆதரவு இல்லை என கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சி குழுமங்கள் மாறி மாறி செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தன.உண்மையிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அறிவிப்பதற்கு கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு உண்மை விளம்பி தேவைப்பட்டார். அவர்கள் தேடி சென்ற இடம் வீரமணி. திராவிடர் கழக பொதுச்செயலாளரான வீரமணி, கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம், தமிழ்நாட்டில் பாலும் தேனும் செழித்து ஓடுகிறது. இங்கே, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலாவது விலைவாசி உயர்வால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. கலைஞர் ஆட்சி என்பது பொற்கால ஆட்சி. குப்தர்களின் காலம் போலவே, கலைஞரின் காலமும் பொற்காலம். ஆகவேதான் மக்கள் எதிர்கட்சிகளின் எந்த குரலையும் கேட்க தயாராக இல்லாமல், அவரவர் இயல்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறதா? தமிழ்நாட்டில் விலைவாசி உயரவில்லையா? தமிழ்நாட்டு மக்களெல்லாம் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எல்லாம் நாம் அவரிடம் திரும்ப கேட்க முடியாது. கலைஞர் எதை செய்தாலும் அதை மிக சிறப்பாக செய்வார் என்று சொல்லக்கூடிய ஒரு உளவியல் கட்டுஅப்பாட்டிற்கு தமது திராவிடர் கழகத்தை அவர் கொண்டுவந்து விட்டார். எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலக்கட்டம். எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக கலைஞர், மிக மிக கீழிறங்கி பேசிக் கொண்டிருந்த காலநிலை. ஒருவேளை கலைஞர் பேசிய பேச்சுக்களை, கலைஞரே எடுத்து திரும்ப வாசித்தால் அவரே வெட்கப்படுவார்.

ஆனாலும்கூட, அமெரிக்க மருத்துவமனையில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆரின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றது. அப்போது இத்தேர்தல் வெற்றியைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களில் வீரமணி அவர்களின் விமர்சனம் மிக சிறப்பு வாய்ந்தது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது மாலைமுரசு நாளிதழில் அந்த விமர்சனத்தை படித்ததாக நினைவு. வரிக்கு வரி அவை எமது நினைவில் இல்லை என்றாலும், அவர் சொல்லியதின் உள்ளடக்கம் கலைஞர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இவ்வளவு கீழிறங்கி பேசி இருக்க வேண்டாம் என்பதுதான்.

உண்மையிலேயே வீரமணியின் நேர்மையைக் குறித்து நாங்கள் எல்லாம் வியந்தோம். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலையைக் குறித்தும், தமிழீழத்தின் ஆளுமையைக் குறித்தும் அலசும் ஒரு நடுவமாக திராவிடர் கழகம் அமைந்திருந்தது. நாங்கள் அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு அவர்களின் அந்த அரங்குக் கூட்டங்களில் செவிகளை வேறு பக்கம் திருப்பாமல், அவர்கள் சொல் கேட்டு வியந்து கொண்டிருப்போம். ஆனால் காலநிலை மாற்றம் எவ்வாறெல்லாம் அவர்களை அடித்துப்போகிறது என்பதை சிந்திக்கும்போது, இப்போது வேதனையாக இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பரிணாம வளர்ச்சி, செயலலிதாவிற்கு வீராங்கணை பட்டம் வழங்கும் அளவிற்கு, அளவில்லா உயர்வை கண்டது. அதற்கான காரணங்களும் அளவிட முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அரியணைக்கு வந்தவுடன், திராவிட கழகத்தின் குரல் அறிவாலயத்திற்கு ஆதரவாக எழுந்து நிற்க தொடங்கியது. அது திமுகவுக்கும் தேவையாக இருந்தது.

இறுதியாக, எமது அன்னை, சென்னைக்கு மருத்துவ தேவைக்கு வருவதை தடுத்து, திருப்பி அனுப்பிய செய்தியை எப்படி திட்டமிட்டு, அது ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு அரசு செய்ததைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்த முனைப்புக் காட்டினார்கள் என்பது இன்றுவரை விளங்காத புதிராக இருக்கிறது. இதை மாற்றுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. காரணம், அவர்களுக்கு அவர்களின் கல்வி நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு கட்டாயமாக ஆட்சி அதிகாரத்தின் துணை தேவைப்படுகிறது.

இவர் நிலை இப்படி. விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலைஞருக்கு விருது வழங்கிய விழாவில் கீழ்கண்டவாறு பேசியிருக்கிறார்.உங்களோடு சேர்ந்ததால் என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி இருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்ததால் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அதற்கு காலா காலத்திற்கும் உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று கூறியதோடு திருமா முடித்திருக்கலாம். ஆனால் ஆறாவது முறையாக கலைஞரை அரியணையில் அமரவைத்து அழகுபார்க்க வேண்டும் என்று சொல்லியதில் நமக்கு வியப்பு மேலிடுகிறது. காரணம், சுவர்கள் எல்லாம் 2011 சிறுத்தைகளின் ஆண்டு என்று வரையப்பட்டிருக்கிறது. சிறுத்தைகள் இயக்கத் தோழர்களும், ஒடுக்கப்பட்டவர்களின் ஆட்சி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தடம்புரலாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் கலைஞரை அரியணையில் அமர்த்துவது என்றால், சிறுத்தைகளின் ஆண்டு தள்ளிப்போகிறதா என்பதை அறிய விரும்புகிறோம்.

தலைவர் கலைஞர் என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்த திருமாவைக் கேட்கிறோம், கலைஞர் தங்களுக்கு மட்டும் தலைவரா? இல்லை தங்களை நம்பி தமது வாழ்வை ஒப்படைத்துள்ள ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கும் தலைவரா? என்பதை நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை. புகழ்வதற்கு என்னவெல்லாம் வார்த்தைகள் வேண்டுமோ அத்தனை வார்த்தைகளையும் தோண்டி எடுத்து வாழ்த்தியிருக்கிறார். தமிழர் மரபு வாழ்த்தவேண்டும். வாழ்க என்று சொல்வது சிறந்ததொன்றுதான். ஆனால் மனசாட்சியைத் தொட்டு நீங்கள் சொல்லுங்கள் திருமா, நீங்கள் அடைந்த சட்டமன்ற, மக்களவை உறுப்பினர் பொறுப்புகள் கலைஞர் போட்ட பிச்சையா? கடந்த 25 ஆண்டுகாலமாக தாங்கள் ஆற்றிய கடும் பணி, தங்களின் தலைமையின்மீது நம்பிக்கைக் கொண்டு, அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்படுத்திய ஈக வெளிப்பாடு.

ஒரே வரியில் சொல்வதென்றால், அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் குருதி கொடை தான் உங்கள் உறுப்பினர் பதவி. அவர்களின் தோளின் மீதேறிதான் தாங்கள் இந்த சிகரத்தை தொட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் அவர்கள் இன்னமும் அந்த சேரியில் இருந்து வெளிவரவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தங்களை தமது மானசீக தலைவராக இந்த இளைஞர்கள் ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக சே குவேரா, தேசிய தலைவர், பிடல் என்று புரட்சிகர தலைவர்களோடு எல்லாம் தங்களை ஒப்புமைப்படுத்தி வெட்டுருக்களாக பதிவு செய்து வைத்திருக்கிறார்களே? அந்த மதிப்பீடுகள் இவ்வளவு விரைவில் சரியும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் கடந்த காலங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு முற்றிலும் மாறாக நிற்பதை நினைத்துப் பார்க்கும்போது, உங்கள் மீசை அல்ல, வார்த்தைகளும் மடங்கிப் போனது எப்படி என்ற வருத்தம் எங்கள் மனங்களை சிதைக்கிறது.

அடங்கமறு, அத்துமீறு, திமிறிஎழு, திரும்ப தாக்கு என்ற அடிப்படை தத்துவம் எங்கே போனது. இந்த வார்த்தைகள் தானே ஏழை இளைஞர்களை உங்கள் பக்கம் ஓடோடிவரச் செய்தது. அன்று பேசிய பேச்சு, எங்களுக்கான உரிமைகள் பெறுவதற்கு உங்களின் கடைக்கண் பார்வை வேண்டும் என்று கலைஞரிடம் யாசித்து நிற்கும் அளவிற்கு திருமா தாழ்ந்து போனது எப்படி? ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சுற்றி வந்த திருமாவால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி அங்கீகாரம் தமிழகத்திலே கிடைத்தது என்பதை மறுத்துரைக்க முடியுமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆ.சக்திதாசன், வை.பாலசுந்தரம், சுந்தர ராஜன், செ.கு.தமிழரசன், மருத்துவர்.சேப்பன், பூவை.மூர்த்தி என பல்வேறு தலைவர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் ஆற்றிய பணிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கூட்டணி சேர எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த தலைவராக உங்களை அடையாளம் காட்டியது, உங்களுக்காக உயிரைக்கூட இழக்க தயாரான அப்பாவி ஏழை குடிசைவாழ் இளைஞர்கள் என்பது உங்களுக்கு தெரியும் தானே? போர்குணம் மிக்க அந்த தலித் இளைஞர்கள் தங்களின் சொல் கேட்டு களமாடியதால் கிடைத்த வெற்றிதானே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தங்களை அனுப்பியது. கலைஞரின் கூட்டத்திலே நின்று, அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, உங்களை அழைத்துவந்தா இப்பொறுப்புகளை கலைஞர் கொடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை வளர்த்தெடுக்க தாங்கள் இழந்த இழப்புகள், தாங்கிய வலிகள், பெற்ற அவமானங்கள் நினைத்துப் பாருங்கள். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை வாழ்த்தி பேசுவது வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கலாம். ஆனால் இன்றுவரை சாதிய ஒடுக்குமுறை கலையாத ஒரு நிலைப்பாட்டைக் கண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இது பொறுத்தமானதா? என்பதை மெத்த பணிவுடன் தங்களிடம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒருவேளை தங்களால் பலன் பெற்ற இயக்கத் தோழர்கள் கொதிப்படையலாம். ஆனால் இதிலிருக்கும் உண்மையை அவர்களால் மறுக்க முடியுமா? என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். போராட்டங்களின் மூலமே வெற்றி என்பது நமக்கு புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லித் தந்த பாடம் அல்லவா? புலிகளை அல்ல, ஆடுகளையே பலி கொடுப்பார்கள் என்ற புரட்சியாளரின் வார்த்தைகளுக்கேற்ப நீங்கள் திமுகவிடம் சிறுத்தைகளை அல்லவா பலி கொடுக்கிறீர்கள். இது சிறந்ததா? என்பதை தாங்கள் எப்போதாவது யோசித்தீர்களா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 26ந் தேதி தேசிய தலைவரின் தாயாரை மீண்டுமாய் சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்துவர மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு கலைஞரிடம் சென்றிருக்கிறார்கள், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரப்பாண்டியன் ஆகியோர். முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்து, செய்தியாளர்களிடம் பேசும்போது, தேசிய தலைவரின் தாயார் சென்னையில் தங்கி சிகிச்சைப்பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால் அதற்கான அனுமதியை நடுவண் அரசிடமிருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பதை வலியுறுத்தவே தாம் கலைஞரை சந்தித்ததாக கூறினார்கள்.

கலைஞரும் இதற்கான உறுதி அளித்ததாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இதைப்போன்ற சந்திப்புகளை இயல்பு நிலைக்கு மீறி திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவே உணர்கிறோம். உலகம் தழுவிய அளவில் கலைஞரை மதிப்பீடு தமிழ் மக்களிடம் மிகத் தாழ்ந்து போயிருக்கிறது. இதை தூக்கி நிறுத்த இப்படிப்பட்ட தலைவர்களின் தேவை கலைஞருக்கு இருக்கிறது. ஆகவே, கலைஞர் திட்டமிட்டு இவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கலைஞருக்கு இவர்கள் பயன்படுகிறார்கள். கலைஞரா? இவர்கள் பயன்பெறுகிறார்கள்.

இனிமேல் அந்த முதிய தாய், தமிழ்நாட்டில் வந்து சிகிச்சைப்பெற வேண்டுமா? உலகெங்கும் தமிழர்களுக்கான முகவரியைத்தந்த அந்த வீர மகனை பெற்றதை தவிர, வேறென்ன பாவம் செய்தார் அந்த தாய். முடங்கிப்போன தமிழர்களின் வீரத்தை வெளிகொணர்ந்த அந்த புலிகளின் தலைவனை இந்த மண்ணிற்கு அறிமுகம் செய்ததைத் தவிர, பெரிதொன்றும் செய்துவிட வில்லையே.

மானமுள்ள தமிழினத்தை இந்த மண்ணிற்கு அடையாளம் காட்டுவதற்காக, தம் வாழ்வையே அர்ப்பணித்த மகத்தான மாண்புமிகு தலைவனை தம் கருவில் சுமந்ததைத் தவிர, வேறென்ன காரணம் சொல்லி அவரை திருப்பி அனுப்பினார்கள். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த முழக்கம் யாருக்கு எதிராக? நடுவண் அரசுக்கு எதிரானதா? நடுவண் அரசு என்பது திருமா உட்பட ஆதரவு தரும் ஒரு அரசு தானே? அந்த அரசை எதிர்க்கிறார்களா? இல்லை திமுக அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டமா? திமுக அரசை இவர்கள் பகிரங்கமாக எதிர்க்க முடியுமா? தமிழக மக்களை திசை மாற்றும் அரசியலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

செயலலிதாமீது நமக்கு விமர்சனம் உண்டு. செயலலிதாவிற்கு நாம் எந்த காலத்திலும் நாம் பக்கத்தில் இருக்க விரும்பவில்லை. அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதையும் நமக்கு அடிப்படையிலே விருப்பம் கிடையாது. ஒருவேளை நாம் இப்படி எழுதும்போது ஏதோ நாம் செயலலிதாவின் ஆதரவாளர்கள் என்பதைப்போன்ற ஒரு நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம். செயலலிதா தமிழ்தேசிய அடையாளத்தின் எதிரி என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். செயலலிதா எந்த நிலையிலும் தமிழர்கள் பக்கம் நின்று குரல் எழுப்பும் பண்பற்றவர் என்று எவராலும் சொல்ல முடியும். ஆகவே, அவர் நமது இன எதிரி என்பது நமக்கு எள்ளின் மூக்களவு கூட சந்தேகம் இல்லை. ஆக, எதிரியைக் குறித்து நாம் அதிக அக்கறைக் கொள்ள தேவையில்லை. காரணம் கண்ணுக்கெதிரே அவர் எதிரி என்பது நாம் அறிந்ததுதான்.

ஆனால் இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலையை ஆதரிப்பது போலவும், தமிழீழ விடுதலையை எதிர்ப்பவர்கள் அணியில் இருந்துகொண்டு இயங்கிக் கொண்டிருப்பது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழியை அல்லவா நினைவுப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் கோபாலப்புரம் வீட்டிற்குள் போய் முடங்கிப் போகிறார்கள்.

இவர்கள் அறிவாலயம் எனும் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டு திணறுகிறார்கள். இந்த அரசியல் என்ன அரசியல் என்பதை இவர்களாக வெளிவந்து விளக்கினால் ஒழிய, யாருக்கும் எதுவும் புரியப்போவது கிடையாது.

ஆகவே, தோழர் சுப.வீ., தொல்.திருமா, வீரமணி போன்றோர் தெளிவாக ஒன்றை அறிவிக்கட்டும். தமிழீழ விடுதலைக்கு அவர்கள் ஆதரவாளர்களா? எதிர்ப்பாளர்களா? என்பதை. ஆதரவாளர்கள் என்றால், தமிழீழ விடுதலையை ஒடுக்கி எமது தமிழ் உறவுகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, அவர்களின் குருதியில் குளித்த காங்கிரசை பகிரங்கமாக வெளியில் வந்து எதிர்க்கட்டும். காங்கிரசை தலையில் சுமக்கும் திமுகவை அம்பலப்படுத்தட்டும். அதைத்தவிர்த்து, கலைஞர் சிறந்த தலைவர்தான், ஆனாலும் என்ன செய்ய? காங்கிரசோடு அவருக்கு உறவு தேவைப்படுகிறதே என்று சாக்கு சொல்வார்களாயின், தமிழின வரலாறு தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருக்காது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

— மீனகம் இளமாறன்

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP