முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்-வைகோ

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார்.

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத் தூணுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய க்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், இது போன்ற நினைவுத் தூண்கள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நிறுவப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல. வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத் தூண் அமைக்கப்பட்டதில்லை என்ற வகையில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.

இங்கு நினைவுத் தூண் மட்டுமல்லாமல் நினைவு மண்டபமும் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மே 17ம் இதன் தேதி திறப்பு விழா நடைபெறும். இதில் தீக்குளித்த 18 பேரின் பெயர், ஓவியங்கள் இடம் பெறும்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையில் 5வது கட்ட ஈழப்போர் தொடங்கும்போது நாம் துணை நிற்க வேண்டும். அங்கு தமிழ் ஈழம் மலரும் என்றார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலை வரலாறு, இந்தியா செய்த துரோகம், உலக நாடுகளின் மெளனம் இவை அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்.

முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத் தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழ வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைக்கு எதிரான அனைத்தையும் நடத்தியது இலங்கை அரசு. ஈழத் தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம், அங்கு நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.

சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.

நல்லக்கண்ணு பேசுகையில், 21ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் நடைபெறாத கொடூரமான இனப் படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை செய்த ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்தது மனிதகுல பிரச்சனை. அதை ஆதரிக்கக்கூடிய எந்த அரசையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்க முடியாது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை விட ராஜபக்சே அதிக கொடுமை செய்துள்ளார் என்றார்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP