நஞ்சு யார்? நம்பி கெட்டது யார்? - தூ. சடகோபன்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ‘ஜனநாயகம் என்பது மக்கள் அரசுமுறை என்பதோடு முடிந்துவிடவில்லை. புதுவாழ்விற்கான நல் அழைப்பும் அது. பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரி சமமாகப் பங்கிட்டுக்கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக்கூடமும் அதுவே! ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோளை அடைந்திடச் செயலாற்றிட வைத்திடும் பெருநோக்கம் கொண்டதே ஜனநாயகம் எனப்படுவது’ என்று அரிய பல சிந்தனைகளை அதில் அடக்கியுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவராக, தமிழினத்தின் தலைவராக, தி.மு.க.வின் நிரந்தரத் தலைவராக, ஆட்சியின் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் ஜனநாயகம் புலப்படாது. என்னவெனில் ‘பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக் கூடம் ஜனநாயகம்’ என்று அண்ணா அளித்த விளக்கம், கலைக்கூடம் என்பதையும் அதன் உட்பொருளையும் தன் குடும்பக் கூடம் என்பதாகப் புரிந்துள்ளது.

அண்ணாவின், கழகத்தின் உண்மைத் தம்பிகளுக்கு புரிந்ததெல்லாம் ‘ஒவ்வொரு’ மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோள்’ என்பது தான்.இதுதான் கழகம் என்னும் தி.மு.க. குடும்பத்தில் நிலைத்திருக்கும் என்று நம்பியதுதான் குற்றம். அந்த நம்பிக்கையை நஞ்சாக்கியது யார்? எண்ணற்ற கழக முன்னணித் தலைவர்களை வெளியாக்கியது யார்? அறிவாலயத்தில் மின்தூக்கிக் கூடுக்குள் தலைவர் போகும்போது அவர்மீது ஓர் தூசும் விழாது பார்த்திருந்து விழித்திருந்த மாசற்ற மனிதனாய் இன்று உயர்ந்து நிற்கும் வைகோ அவர்களை வெளியேற்றியது யார்? எல்லாம் கலைஞர் கருணாநிதியே!இன்றுவரை ‘மைனாரிட்டி’ என்றே எதிர் கட்சிகளால் அழைக்கப்படும் ஆட்சியும் பலமானதாக இல்லை. தி.மு.க.வும் பலமானதாக இல்லை. எல்லாம் தானே! தன் குடும்பமே! தம்மக்களே என்ற நிலை கட்சியிலும் ஆட்சியிலும் நிலையானபோது அண்ணாவின் ஜனநாயகம் நிலையாமல் போனது. கழகங்கள் பலவாகிவிட்டன. திராவிட இயக்கம், கொள்கைகள் சிதறிப் போயின.
செம்மொழி மாநாட்டையொட்டி ‘திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் கலைஞர் கருணாநிதிக்கு திராவிட இயக்கங்கள் உடைவதற்குத் தாமே காரணம் என்பது மறந்து போயிற்று.

அறிஞர் அண்ணாவின் தம்பி என்றும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் என்றும் கூறிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் நாகரிகம் மட்டும் மறந்து போயிற்று. செம்மொழி மாநாட்டுக்கு வாருங்கள் என்று உடன்பிறப்புக்கு எழுதும் மடலில் ஓர் வரியைப் பாருங்கள்.
‘எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறதா? ஏதோ ஒரு விலங்கின் ‘காம்போதி’ என்பார்களே! அந்தக் காம்போதிதான் கேட்கிறது’ கழுதைக்கு ஒப்பிட்டு ஓர் கட்சியின் தலைவரை, ஆட்சிக்குத் தலைமையாய் இருந்தவரை இழிவுபடுத்துவதை எண்ணிப்பாருங்கள். சகிக்கமுடியாத சொல் அல்லவா இது. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை;கும் மணமுண்டு’ என்ற அண்ணாவின் இதயம் இப்படி எழுதுமா? ஆட்சி மன்றத்தில் அண்ணா முதலமைச்சராக இருந்து ஆற்றிய உரையையும் பாருங்கள். ‘இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை. ஆகையால் மாற்றம் வேண்டும் என்று அண்ணாதுரை பேசுகிறானே, இவனுக்குத் திருமணம் ஆகி வருஷங்கள் இருபது ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஒரு குழந்தை கூடப்பிறக்கவில்லை. அப்படியானால் அவன் மனைவி ராணிக்கு வேறு ஒரு கணவனைத் தேடலாமா? என்று கூறும்போது அண்ணா கண்களில் கண்ணீர் தளும்ப சற்று பேச்சினை நிறுத்திவிட்டு ‘சகித்துக்கொண்டிருந்தேனே’ என்று அண்ணா கூறியது சகிப்புத்தன்மைக்கே உச்சம்.

மனித மனத்துக்கே அடித்தளமான நாகரிகம். இந்த நாகரிகத்தை கலைஞர் கருணாநிதியிடம் பார்க்கமுடியாது.
செம்மொழி மாநாடு, தமிழுக்கு மாநாடு! நடத்துவது கலைஞர் கருணாநிதியானாலும் அரசு மாநாடு. தமிழ்நாட்டரசு மாநாடு. மாண்புகள் காக்கப்பட வேண்டிய மாநாடு. உலகத் தமிழரெல்லாம் உற்று நோக்கும் மாநாடு. ஊலகமொழி அறிஞர்கள் ஆய்வாளர்கள் பார்வைக்குண்டான மாநாடு. அதற்கு அழைப்பதில் அநாகரிகச் சொல். தொல் நாகரிகத்தைப் பண்பாட்டை கொல்லும் சொல். இனிய தமிழ்ச் சுளைகளை கலைஞர் கருணாநிதியா கொடுக்கப் போகிறார்?
நெஞ்சில் நஞ்சு
எண்ணு தமிழ் நாடே
நம்பிக் கெடாதே!

தூ. சடகோபன்
மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்,
புதுச்சேரி.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP