அயல்வீட்டில் அழுகுரலும் சாம்பல்மேடும் ஆனால், அக்கினி குண்டத்தில் செம்மொழி மாநாடு?

உணர்வாரா கலைஞர்?:
தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் இப்போது அதன் தலைவராக இருப்பவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.

(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009 ம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

இது சம்மந்தமாக பல்வேறுவிதமான வாதபிரதிவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு அதனை பார்ப்பதற்கு முதல் உலகத் தமிழ் மாநாட்டின் பின்னனி பற்றியும் அதன் பெருமை பற்றியும் ஒரே கட்டுரையில் ஆழமாக பார்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக இக்கட்டுரை வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள. ஸ்தாபகர்கள் இல்லாத காலத்தில் கருணாநிதி போன்றோர் இதனை தமதும் தமது குடும்பத்தினதும் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற தீர்க்க தரிசனம் மிக்க பார்வை இருந்ததாலோ என்னவோ? இதுவரை தமிழகத்தை ஆண்ட எல்லாத் முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியுள்ளனர் தமிழின் காவலன் என் அவரது பக்கவாத்தியங்களால் புகழப்படும் கருணாநிதியைத் தவிர இவ்வாறு சொல்வதானது அவர் மீதான கோபம் என கருதிவிட வேண்டாம்.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கின்றேன் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 16-04-1966 ம் ஆண்டு காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் அரங்கிலே மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். முதலாவது மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாநாட்டிற்குப் பின் அவற்றினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியிட்டனர். அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு 03-01-1968 ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் இந்தியாவின் அன்றைய ஜனாதிபதி கலாநிதி ஜாகீர் உசேன் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். இதில் முன்நாள் முதலைமைச்சர்களான கு. காமராசர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உற்பட அப்போதைய தமிழக எதிர்கட்சியினரும் கலந்துக்கொண்டனர். மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்சில் 15-07-1970 அன்று தொடங்கியது. பாரிஸ்சில் நடைப்பெற்றதால் நிறையப்பேர் கலந்துக்கொள்ளவில்லை எனினும் 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் அதில் கலந்துக்கொண்டனர் அதில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. யாழில் நடைப்பெற்ற மாநாடு பற்றி சற்று விரிவாக பார்ப்பதன் வாயிலாக சிங்கள பேரினவாத அரசு அந்தக் காலம் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டிருக்கின்றாhகள்; என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அப்போது இலங்கையில் பிரதமர் ஆட்சியே இருந்தது. அன்றைய பிதமராக திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவி வகித்தார். யாழ் மண்ணில் மாநாட்டை நடத்த சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் அங்கே மாநாட்டினை நடத்தினால் இலங்கைத் தமிழர்களின் மொழித்திறன் நாகரீகம் பண்பாடு போன்றவற்றினை மாநாட்டிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்துக்கொள்வர்கள் என்ற பயம் காரணமாகவும் அரசியல் ரீதியாக தமிழர்கள் பலம் பெறக் கூடும் என்பது போன்ற காரணங்களால் இலங்கை பேரினவாத அரசு இலங்கையில் நடத்த அனுமதியளிக்கவில்லை. இறுதியாக திருமதி. சிறிமாமோவோ பண்டாரநாயக்காவிற்கு அரசியல் நெருக்கடி வராது என உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே பேரினவாத அரசு அனுமதியளித்தது. மாநாட்டிற்கு வருகை தரவிண்ணப்பித்தவர்களில் ஏராளமானோருக்கு வீசா வழங்குவதை இழுத்தடித்த போதும் 20 நாடுகளில் இருந்து 197 பேராளர்கள் கலந்தக்கொண்டனர்.

இலங்கை அரசு சார்பில் ஒருவர் கூட பங்குபற்றவுமில்லை எதுவித உதவியினையும் செய்யவில்லை. நடந்து முடிந்த 8 மாநாட்டிலும் அரச ஆதரவுமின்றி அரச தரப்பின் பங்கு பங்குபற்றலும் இல்லாமல் நடந்த ஓரேயொரு மாநாடு 4வது மாநாடு மட்டுமே தமிழர் ஆராய்ச்சிக் கழகமே தனித்து நின்று நான்காவது மாநாட்டினை நடத்தியது. 03-01-1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அருட்திரு. தனிநாயகம் அடிகள் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் மாநாடானது தமிழரசுக்கட்சியின் மாநாடென்றும் அரச எதிப்புச் சக்திகளின் மாநாடு என்றும் அன்றைய அமைச்சராக இருந்த தமிழரான சூரியகுமார் மற்றும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றோர் பிரச்சாரம் செய்தும் கூட யாழ் மண்ணில் உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி களிப்பில் யாழ்நகரையே அலங்கரித்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது; நடக்க இருக்கும் விபரீதம் பேரினவாத அரசிற்கும் தமிழர்களாய் பிறந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளையும் தவிர வேறு யாருக்குத் தெரியும்? மாநாடு நடப்பதற்கு எல்லா வழிகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்தியும் அது வெற்றிகரமாக நடந்ததை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாத அரசின் பணிப்பின் பேரில் அந்தக் கோரச்சம்பவம நடந்தேறியது. மாநாட்டிற்கு வந்தவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகள் 10 ம் திகதி செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இதற்கென அரங்கு பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் மைதானத்தின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடமிருந்து கடிதம் கொண்டுவந்தால் மட்டுமே வாசலை திறக்க முடியுமென கிளிபிள்ளையைப் போல் காவலாளி பதில் சொல்லி விட்டார். அல்பிரட் துரையப்பாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலையில் இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக மேடை ஒன்று அமைக்கப்பட்டது. 50000 மக்கள் கூட்டம் குழுமியிருந்தது பேராசிரியா நெய்னார் முகமது உரையாற்றிக்கொண்டிருந்தார். இரவு 8 மணிக்கு போலிஸ் உதவி அத்தியட்சகர் போலிஸ் பட்டாளத்தோடு வந்து மக்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். குழப்பம் செய்ய வேண்டாம் அமைதியான முறையிலேயே தாம் கூட்டம் கூட்டுவதாக மக்கள் கேட்ட உடன் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தி மக்கள் மீது தடியடி தாக்குதலை போலீசார் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் கூட்டம் கலைந்தோடியதில் ஏராளமானோர் காயப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்த்தால் மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் 2 பேர் நசுங்கிச் செத்தனர். நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த காவற் துறை அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது.

மக்களே போலீசாரை தாக்கினர் என திருமதி. சிறிமா பாராளுமன்றத்தல் அறிவித்ததுடன் இறந்தவர்களுக்காக மரியாதை நிமித்தமேனும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஐந்தாவது மாநாடு ஆபிரிக்காவிலே நடாத்த திட்டமிட்டிருந்த போது அன்றைய தமிழக முதலைமைச்சர் எம். ஜி. ஆர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக மாவட்டங்களில் ஒன்றான மதுரையில் 04-01-1981 அன்று அன்றைய தமிழக ஆளுனர் ஜனாப். சாதிக் அலி தொடங்கிவைத்தார். 20 நாடுகளில் இருந்து 800 பேராளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி 5வது மாநாட்டிலே கலந்து கொண்டிருந்தார். தமிழகத்தின் பலம் பொருந்திய முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர் உலகத் தமிழர் மாநாட்டை தமிழத்திலே நடத்தும் படி உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைக் கேட்டாரே தவிர கருணாநிதி செய்தது போல உலகத் தமிழ மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆறாவது மாநாடு மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் 19-11-1987 அன்று மலேசிய பிரதம மந்திரி மகாதீர் அகமது தொடங்கிவைத்தார். இதில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொள்ள சென்றவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

6வது மாநாட்டிலே 2000 பேராளர்கள் கலந்து கொண்டனர் 250 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 650 பக்கம் கொண்ட விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. எழாவது மாநடு மொரீஷியஸ் தீவின் தலைநகரான லூயிலில் 04-12-1989 அன்று நடைப்பெற்றது. 7வது மாநாட்டில் மொரீஷியஸ் பிரதமர் அனுரூட் ஜெகந்நாத் கலந்து கொண்டார். 28 நாடுகளில் இருந்து 300 பேராளர்கள் கலந்தக் கொண்டனர். 7வது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 81 கட்டுரைகள் தனித் தனித் நூலாக 8வது மாநாட்டிலே வெளியிடப்பட்டது. எட்டாவது மாநாடு தமிழக நகரங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தல் 01-01-1995 அன்று நடைப்பெற்றது. 8வது மாநாட்டில் அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர் நாராயணன் மற்றும் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் கலந்துக் கொண்டார். 8வது மாநாடு தமிழகத்தின் அன்றைய முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில் நடந்தது. ஆக மொத்தத்தில் தமிழத்தை ஆண்ட எல்லா முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் கலைஞர் கருணாநிதியைத் தவிர. இந்த நிலையிலேயே உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.

கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சசக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது.

* ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடாத்த முனைந்ததானது.......?

அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருக்கின்றது. அவரது அரசியல் மற்றும் பண பலத்தின் மூலம் அவரது செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கலாம்.

தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம.; இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்;து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செமமொழி மாகாநாட்டை விமர்சித்துள்ளது.

* ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்மே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செமமொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கின்றார். உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association of Tamil Reasearch) துணைத் தலைவராக இருக்கும் கலாநிதி வா.செ.குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி செமமொழி மாநாட்டை நடத்த முயல்கிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க செயற்படுகிறார்கள். தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி “தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என பி.பி.சி தமிழோசைக்கு பேட்டியளித்திருந்தார். அதன் பின்னர் பங்குபற்ற போவதாக ஊடகங்களுக்கு சொல்லியுள்ளார். செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அவர் எவ்வாறான முடிவை எடுக்கப் போகிறார் எனத் தமிழ் உலகம் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளது.

ஏலவே உலகத் தமிழர் மாநாட்டிற்கு சென்ற பேராசிரியார் கார்த்திகேசு சிவத்தம்பியை பார்வதியம்மாவை போல புலி ஆதரவாளர் என விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டதை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு அறிவுரை கூறும் அருகதை எமக்கு இல்லை. எனினும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தாழ்மையோடும் அதே வேளை உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கலாம் என கருதுகிறேன். கடந்த 30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. செம்மொழி மாநாடு நடத்தும் அவர்களுக்கு வெப்சைட் ஈ;-மெயில் தபால் போன்ற சொற்களுக்கு இருக்கும் அழகிய தமிழ் சொற்கள் தெரியாது போலும். அதனை விட்டுவிடுவோம் நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருக்கிறது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா? யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது ஏ.ஆர் ரகுமானை வைத்து செம்மொழி மாநாட்டிற்கு பாட்டிற்கு இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடாத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே?

கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே?

தமிழகத்தைச் சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள இவ் வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருப்போம். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவரது பக்கவாத்தியங்களும் இருக்கின்றார்கள்.

* தமிழகத்தில் செம்மொழி மாநாட்டை புறக்கனிக்கும் தமிழக உறவுகளோடு உலகெங்குமுள்ள உறவுகளே கைகோருங்கள். தான் செய்த வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முற்படும் கருணாநிதிக்கு சாரளம் வீசுகின்றவர்களை புலம்பெயர் நாடுகளில் நடைபெரும் வைபவங்களுக்கு அழைக்காமலிக்க திடசங்கட்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

* வன்னி போர் வெற்றியினைக் கொண்டாட சின்னத் திரையுலகினரை இலங்கை அரசிற்கு ஒழுங்கு செய்து கொடுத்த தன்னை அன்பு அறிவிப்பாளர் என அழைத்துக் கொள்ளும் பி.எச. அப்துல்ஹமீதே செம்மொழி மாநாட்டினை தொகுத்து வழங்க போகிறார். தமிழை வளாப்பதாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி; மற்றும் அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழால் அவர்களே வளர்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகும்.

* தமிழகத்தின் மேடைகளில தமிழில் முழங்கி பணம் உழைக்கும் அப்துல் ஹமீத்திடம் ஈழப்போர் பற்றி சின்னத்திரை நடிகர்கள் கேட்டபோது அது ஒரு மூளையில் நடக்கிறது நாம் ஒரு மூளையில் இருக்கின்றோம் என்று சாவசாதரரணமாக பதில் அளித்துள்ளார் இவ்வாறானவாகளையும் செம்மொழி மாநாட்டிலே பங்கெடுப்பவாகளையும் உலகத் தமிழர்கள் ஓரம் கட்டும் படச்சத்தில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பச்சோந்திகளை தலையெடுக்காமல் தடுக்கமுடியும்.

தென்னாசியவிலிருந்து இளையவன்

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP