புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து

புதுச்சேரி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாநில அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

புதுவையைச் சேர்ந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில்,

புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள மாணவர்கள் [^] கல்வியில் பின்தங்கியுள்ளனர்.

இதையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு புதுவை அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும், மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள 75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3 ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநில மாணவர்களோ அல்லது புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரிவுக்கு எதிரானது. எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று மீண்டும் இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

அனைவரும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.

அந்த நேரத்தில் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்படவில்லை.

அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதை இந்த ஆண்டே உடனடியாக அமல்படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு புதுவை அரசு உள்ளாகியிருக்கிறது.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP