இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்
இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.
இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை [^] எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .
பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment