ராஜா டிஸ்மிஸ் - வைகோ
அமைச்சர் ராஜா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கோபாலபுரத்திற்கு தகவல் வந்ததால்தான் ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளது திமுக மேலிடம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
ராஜா விலகல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ.ராசா வரலாறு காணாத இமாலய ஊழலில் சிக்கி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.
14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும், ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பேசினார் இந்த அமைச்சர். எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், முதல்வர் கருணாநிதி [^] அறிக்கை வெளியிட்டார்.
அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யாவிடில், டிஸ்மிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கை கோபாலபுரத்துக்கு வந்ததன் விளைவாகத்தான் அமைச்சர் ஆ.ராசா பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அலைவரிசை ஒதுக்கீட்டில், ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 381 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளையே தான் பின்பற்றியதாக, ஆ.ராசா காரணம் சொல்லுகிறார்.
ஆனால், 2001 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே, 2008, 2009 ஆம் ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்ததன் மர்மம் என்ன? என்ற கேள்வியை பாரதீய ஜனதா கட்சி எழுப்புகிறது.
யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் திடீரென உருவான நிறுவனங்கள் ஆகும். ஒரு அறிவிப்புப் பலகையை மட்டும் ஒரு அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்ட கம்பெனிகளுக்கு, அலைவரிசை உரிமத்தை அமைச்சர் ராசா வழங்கினார்.
அந்த உரிமத்தைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த உரிமத்தை அந்த நிறுவனங்கள் விற்றுக் கொள்ளை அடித்து விட்டன.
இந்த இமாலய ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் [^] மத்திய அரசு [^] க்கு கண்டனம் தெரிவித்தது. இன்று 15ஆம் தேதி அதுகுறித்த விசாரணை நடப்பதால் மேலும் பலத்த கண்டனம் வரக்கூடும் என்ற பயத்தால் வேறு வழி இன்றி காங்கிரஸ் அரசு ராசாவை பதவியில் இருந்து வெளியேற்றுமாறு தி.மு.க.வுக்கு நிர்பந்தம் தந்தது.
1,76,000 கோடியும், ஆ.ராசா குடும்பத்துக்கே போய்ச் சேர்ந்து இருக்க முடியாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் உண்மைப் பயனாளிகள் யார்? பங்கு போட்டவர்கள் யார்? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. இந்தக் கொள்ளையில் தி.மு.கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குப் பங்கு உண்டு என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.
1987ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்னை நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ததில் தி.மு.க.வுக்கும் பங்கு உண்டு. தி.மு.க. ஊர்வலங்களில் போபர்ஸ் பீரங்கி வடிவ வண்டிகளைக் கொண்டு சென்றதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.
இந்திய வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழலில், தி.மு.க. அமைச்சர் திரட்டிய பணம்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செலவழிக்கப்பட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் அந்தப் பணத்தைத்தான் தி.மு.க. வைத்து இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முன்னாள் அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment