தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது
புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!
அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment