ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ
ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வரலாறு படைக்கும் தீர்மானம் ஒன்றை தமிழர்கள் நிறைவேற்றவுள்ளனர். இதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தற்போது சென்னையில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பெல்ஜியம் சென்றுள்ளார்.
சற்று முன்னர் அவர் பிரசில்ஸ் நகரில் இறங்கியுள்ளதாகவும், ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அறியப்படுகிறது. பிரித்தானியா தமிழர் பேரவையின்(BTF solidarity group) கருத்தாதரவுக் குழு குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றும் நிகழ்வு, ஐரோப்பிய பாராளுமன்றில் பல நடாளுமன்ற உறுப்பினர்கள் முந் நிலையில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மூன்று மாபெரும் கட்சிகளை உள்ளடக்கி, பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர்களுக்காக இணைத்து, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பிரித்தானியாவில் இருந்து ராஜதந்திர மட்டத்தில் பல நகர்வுக்ளை பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பல அமைப்புகள் நகர்த்திவந்தது. இவ்வமைப்பு அரசியல் மட்டத்தில் பலம்பொருந்திய அமைப்பாகத் திகழ்வதோடு, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதிக்கவும் தமிழர்களின் நலன்கள் குறித்து பேசவும் பேருதவியாக அமைந்தது.
அது பிரித்தானியாவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்து தமிழர்களுக்கான அனைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழு என்று ஒரு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்து ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வாகக் கருத்தப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் பல கட்டங்களில் பல ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை கருதி இதுபோன்ற ஒரு பாரிய நகர்வையும் தமிழர்கள் மேற்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டிய விடையமாக உள்ளது. இக் குழுவை நியமிப்பதன் மூலம் ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கவுள்ளது என்பது நிச்சயமாகியுள்ளது என்றே கூறவேண்டும். பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம்தான் என்ற மன நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழுமையான தரவுகளோ இல்லை அதுகுறித்த செய்திகளோ தெரியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறு தமிழர்களுக்கு என்று ஒரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைவதால், தமிழர் தரப்பு அவர்களோடு நெருங்கிய உறவைப் பேண முடிவதோடு நடைபெறும் அநியாயங்களையும், நடந்து முடிந்த கொடூரங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த முடிவதோடு தமிழர்களுக்காக குரல்கொடுக்க அவர்களை தயார்ப் படுத்தவும் முடியும். இதுபோன்ற குழு ஒன்று அமையவுள்ளதும், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளமையும் இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக அறியப்படுகிறது. முடிந்தவரை இதனைத் தடுக்க இலங்கை அரசு பெரும் பிரயத்தனத்தை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் சிறப்புரையாற்ற வைகோவும் வந்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்தாதரவுக் குழு(BTF solidarity group) குழு முன்னேடுத்துள்ள இந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.