மீண்டும் வைகோ விசுவரூபம்

மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார் என, நாஞ்சில் சம்பத் பேசினார்.

ம.தி.மு.க.வின் 18வது ஆண்டு தொடக்க விழா கோவை மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பேசுகையில்,

அட்சய திருதியை நாளில் எதை தொடங்கினாலும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் ம.தி.மு.க.வின் 18ம் ஆண்டு விழாவும் நன்மையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தொண்டர்களிடம் எந்த ஒரு சலிப்பும், தவிப்பும் இல்லை. மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. தாய் மகன் உறவு போல் வைகோவுக்கும் தொண்டர்களுக்கும் உறவு நீடித்து வருகிறது.

முக்கிய கால கட்டத்தை மே 13ல் கடக்க இருக்கிறோம். தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லலாம் என்ற கனவில் கல் விழுந்து விட்டது. இதனால் உடைந்து போனது உண்மைதான். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலாவது போட்டியிடலாம் என நினைத்தோம். அவ்வாறு போட்டியிட்டால் மும்முனை போட்டி ஏற்பட்டு காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதால் போட்டியிடவில்லை.

சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது எந்த கோபமும் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் மீது அனுதாபமாக உள்ளனர். மே 13ந் தேதிக்கு பிறகு இளைஞர்கள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை வைகோ தொடங்கி வைப்பார் என்றார்

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP