தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2011

அன்பான தமிழ் மக்களே,

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.



பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.

போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல், பக்கச்சார்பானவையென்றும், உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பிற்குரிய தமிழக மக்களே,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.

எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP