ஐ.நா. மன்றத்தில் தமிழ் ஈழக்கொடி பறந்தே தீரும்
ஈழத் தமிழர்களுடைய பிரச்சனை என்பது என்ன? அதனுடைய பின்னனி என்ன? தனி ஈழம் (நாடு) கேட்கிறார்களே சரிதானா? அந்த நடிட்டினுடைய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு நிலைப்பாடுதான். நான் கேட்கிறேன். ஈழத்தமிழர்கள் தனிநாடு கெட்கிறார்கள் என்றால் அதன் வரலாறு என்ன?...
அவர்கள் அரசு அமைத்து வாழ்ந்தவர்கள் வரலாற்றின் வைகறைக் காலத்திலே இருந்து தனி அரசு அமைத்து> தனிக்கொற்றம்> தனிக்கொடி என்று வாழ்ந்தவர்கள். போர்த்துக்கீசியர்கள் நுழைந்தபின்பு. டச்சுக்காரர்கள் வந்தபின்பு பிரிட்டிஷ்காரர்களின் அதிகார எல்லைக்குள்ளே இலங்கை அரசு சிக்கியதற்குப் பிறகு சிங்கள இனம் தமிழ் இனம் இந்த இரண்டையும் அதிகார வளையத்துக்குள் பினைக்கின்ற வேலையிலே இந்த ஆங்கிலேயர்கள் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் வெளியேறிச் செல்லும்போது நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் சிங்கள இனத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டனர்.
அவர்கள் சென்றபின் முதல் வேலையாக 1948 பிப்ரவரி 4-ஆம் தேதி நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்று இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி அங்கே காப்பித் தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்கள் இரப்பர் தோட்டர்களை உருவாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்கள் பத்து இலட்சம் பேருடைய வாக்கு உரிமையைப் பறித்தார்கள். அந்த காலத்தில்தான் தந்தை செல்வா அவர்கள் “தமிழரசுக் கட்சி”யைத் தொடங்கினார். தங்களின் உரிமைகளை அறவழியில் அமைதி வழியில் மக்கள் ஆட்சியின் மூலம் நாடாளுமன்றத்திலே குரல் எழுப்பித் தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.
தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்று கருதிய காலத்தில் தரப்படுத்துதல் என்ற முறையில் கல்விக் கூடங்களுக்குப் பாடசாலைகளுக்கு போகிற தமிழ்ப் பிள்ளைகளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. கல்வியில் சிங்களவர்களுக்குத் தனிச்சலுகை கொடுக்கப்பட்டது. சிங்கள மாணவர்கள் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்வு பெறுவார்கள் - தமிழர்கள் 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். தமிழர் தங்களுடைய உரிமையைப் போராடிப் பெற வேண்டும் என்று கருதுகிற காலத்தில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆம் போலிசாரின் அடக்குமுறை முதலில் தடியடியில் தொடங்கி துப்பாக்கிச் சூடு வரையிலே வந்து நிற்கிறது. 1983-ஆம் ஆண்டு ஜீலை மாதம் வெளிக்கடைச் சிறையில் 56 தமிழர்கள் கோரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி ஜெகன் தங்கதுரை வெட்டிக்கொல்லப்பட்டார்கள். புத்தர் சிலைக்கு முன்னாலே ஓரடி உயரத்துக்கு இரத்தம் தேங்கி நின்றபோது உலகமே திடுக்கிட்டது. தமிழகமே ஆர்பரித்து எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் அனைத்து அரசியல் கட்சிகளும் குமுறிபெற உணர்ச்சிப் பெருவெள்ளமாகத் தமிழகம் மாறியது. “ஓர் இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள அரசு” என்று தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளை அம்மையார் இந்திராகாந்தியே கூறினாரே! “வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற தமிழர்கள் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்கள் - மண்;ணின் மைந்தர்கள் ஆவர்” என்றும் சொன்னாரே! ஆனால் இன்று மகிந்த ராஜபக்சே அதிபரான உடன் அதிர்ச்சி தரத்தக்க கருத்தைப் பேசுகிறார் தமிழர் தாயகம் என்பதே இங்கு கிடையாது. யாரும் எங்கும் போய்க் குடியேறலாம் என்கிறார். ஈழத்தில் திலீபன் உண்ணாவிரதம் இருந்ததன் அடிப்படையான கோரிக்கைகள் என்ன? தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் கொண்டுவந்து சிங்களக் காடையர்களைக் குடியமர்த்தி தமிழ்மக்கள் தொகையினுடைய எண்ணிக்கையை குறைக்கிறார்களே என்று தானே அவர் உண்ணாவிரதம் இருந்தார்? 12 நாள்கள் குடிநீரம் பருகாமல் மறைந்துபோனார்.
இலங்iயின் இறையாண்மையைப் பற்றி சொல்கிறீர்களே, அங்கே தமிழர்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த கொடுமைகளைப் பற்றி எண்ணினீர்களா? இங்கு தமிழன் மாமிசம் விற்கப்படும் என்று அறிவித்த கொடுமை நடந்ததே. தமிழ்ப் பெண்கள் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டு நூலில் கட்டித் தொங்கவிடப்பட்டதே இப்படிப்பட்ட கொடுமை உலகில் வேறு எங்கும் நடந்ததில்லையே! அதன் விளைவாகவேதானே அங்கு ஆயுதப்போராட்டம் மூண்டதாக வரலாறு!
இன்று, அங்கு அடுத்து என்ன நடக்கும்? என்று தெளிவுபடச் சொல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. போர் மூளப்கூடாது என்றுதான் விரும்புகிறோம். போர் திணிக்கப்படுகிறது. எனவேதான் நாதியற்றுப் போகவில்லை தமிழன் - நானிலம் முழுவதும் இருக்கிற தமிழனுக்கு உணர்வு உண்டு. ஈழத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் வதைக்கப்பட்டால் அவர்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு இராணுவ ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால், ஒடுக்கி விடலாம் என்று கருதுமானால் அதில் அவர்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணுவார்களேயானால் அது ஒருக்காலும் நடக்காது. அது பலிக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வு தமிழ் நாட்டிலே நீரு பூத்த நெருப்பாக இருக்கிற உணர்வு. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா? ஈழத்தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம். அவர்கள் மரணப் பூமியிலே போராடிக்கொண்டு இருக்கிறார்கள் - அவர்களுக்கு துணையாக நிற்போம். அய்.நா.சபைக்கு முன்னாலே ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஒவ்வொரு நாட்டினுடைய கொடி பறக்கிறதே, அதைப்போல எங்கள் தமிழ் ஈழத்தின் கொடி பறக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருக்காதா? இருக்கிறது. தமிழ் ஈழம் மலரும். அது காலத்தின் கட்டாயம்.
- வைகோ.
0 comments:
Post a Comment