விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள்: வைகோ பேச்சு
தேனி மாவட்டம் சின்னமனூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
’’முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான பாதுகாப்பு உத்தரவாதத்தை உடைத்து எரிவதற்கு கேரள அரசு முயல்கிறது. அதற்கு மத்திய அரசும் துணை போகிறது.
1979-ம் ஆண்டிலிருந்து அணைக்கு ஆபத்து என்றும் அதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கேரளத்தில் திட்டமிட்ட விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தினை கேரள அரசு செய்து வருகிறது.
2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தவில்லை.
கேரளத்தில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் இந்திய பிரமதரை 5 முறை சந்தித்து அணை உடைந்துவிடும் என்று இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பச்சைப் பொய்யை கூறினார். அதற்காக அவர் கொடுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அணை உடைவது போலவும், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரில் மூழ்கி சாவது போலவும் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை வடிமைத்து லட்சக்கணக்கான சி.டி.க்கள் தயாரித்து மாநிலம் முழுவதும் இலவசமாக வழங்கினார்கள்.
முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். பசுமையாக இருக்கும் தென் தமிழகம் பாலைவனமாக மாறும்.
பெரியாறு அணை விஷயத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி தும்பை விட்டு வாலை பிடிக்கிறார். மத்திய மந்திரியை எதிர்த்து மதுரையில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 2 தினங்களில் அந்தர்பல்டி அடித்து தற்போது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களை ஏமாற்றும் கபட நாடகம்.
மத்தியில் தேவையான மந்திரி பதவிகளை பெறுவதற்கு டெல்லியில் முகாமிட்டு கேட்டு பெற்றவர்கள் பெரியாறு அணை விஷயத்தில் டெல்லி சென்று பிரதமரை வற்புறுத்த ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்.
ம.தி.மு.க.வில் தன்னலம் கருதாது உழைக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தை விட்டு விலகி சென்றவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள்’’என்று பேசினார்.
0 comments:
Post a Comment