தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-
மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை
இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.
நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.
"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.
இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)
கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்
கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார்.
வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.
இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.
இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.
இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.
மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.
இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.
இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.
கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.
எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்
0 comments:
Post a Comment