ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.




ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP