தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்
“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.
ஊழலில்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல்மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது என்று செந்தமிழன் சீமான் கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் தெரிவித்தார்.
“இத்தாலியிலே பிறந்த சோனியா காந்தியை அன்னை என்று மொழியலாம், பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத-கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது” – என்று கேள்வி எழுப்பிய சீமான் -
“ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு பொருதியிருந்தால் இதுவரைக்கும் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்களுக்குப் பொருத வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும்” – என்று தெரிவித்தார்.
எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்வு
சாவின்றி உயிர்வாழும் சத்திய தேவதைகளாம் மாவீரர் வணக்கநாள் முதல்நாளாக நேற்று புதன்கிழமை ரொறன்ரோ பெருநகரத்தில் வெகு உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
ஸ்காபரோ நகரத்தில், கென்னடி-பிஞ் சந்திப்பில், பிஞ் வீதியில் அமைந்துள்ள மெற்றோபொலிற்ரன் மண்டபத்தில் அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளத்தில், ‘செந்தமிழன்’ சீமானின் சிறப்பு வருகையோடும் ஒரு எழுச்சி விழாவாக, மாவீரரை உள்ளத்தால் நினைந்து விழிநீர் பெருக்கி நின்றதென்றால், தமிழர் வரலாற்றை எழுதும் இன்றைய நாட்கள் அது இளைஞர் கைகளிலேயே உள்ளது என்பதை பறைசாற்றிய நிகழ்வாக இது அமைந்து கொண்டது.
கனடா, தமிழ்மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்கலை பயிலும் மாணவ மாணவிகள் தமிழீழ தேசத்தைத், தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற சத்தியத்தை நிரூபித்த விழாவாக அமைந்திருந்தது.
மிகக் கட்டுப்பாடாக, பாதுகாப்பு வழங்கி, துரிதமாக இயங்கி, மண்ணின் துயரங்களை வெளிக்கொணரும் வகையாக கலை நிகழ்வை நடத்தி மாணவர்கள் இயங்கிய விதத்தைப் பார்த்தால் தமிழர் சமுதாயம் என்றும் குனியாது நிமிர்ந்து எழும் என்பதை உறுதி செய்த விழாவாகவும் இது அமைந்து கொண்டது.
விழா தொடங்குவதற்குப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவேதான் விழாவுக்கான இடத்தின் அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் அறிவிக்கப்பட்டபோதும் அரங்கு மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.
இசை, நாடகம், மாணவர் தலைவர்களின் பேச்சுக்கள், ஏனைய பல்கலாச்சார மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், பலதரப்பட்ட பல்கலைக்கழங்களின் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் வழங்கிய உரைகள் என சபைஉணர்ச்சிப் பிழம்பாக மாறியது.
விழா ஆரம்பத்தில், தமிழீழத் தேசியக்கொடி, கனடியத் தேசியக்கொடி என இருநாட்டுக் கொடிகளும் ஏற்றப்பட்டன. கனடியத் தேசிய கீதமும், தமிழீழத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. ‘இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாகக் காண்போமே மாவீரரே’ என்ற பாடலுக்கு எழுந்து நின்று வணக்கமும், மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இதனைஅடுத்து, தொழிலதிபர் பாபு மற்றும் மாணவர் தலைவர்களோடும் சீமான் அவர்கள் அரங்கத்தில் நுழைந்தார். சிதைக் கோவிலில்,போராளி உறவினரால் ஈகச் சுடர் ஏற்றலும், ‘செந்தமிழன்’ சீமான் அவர்களால் மலர்க்கொத்து இட்டு அஞ்சலியும் இடம்பெற்றது. வரவேற்பு நடனம், கிரிசாந்தி வதை நாடகம், மண்ணின் துயர், இசை, நடனம், என மாணவர்களின் பங்களிப்பு உள்ளத்தை உருகவைத்தன.
விழாவில் செந்தமிழன் சீமானின் உருக்கமான, உணர்ச்சியான, எழுச்சியான, யாதார்த்தமான உணர்வலைகள் நிரம்பிய பேச்சால் மௌனித்திருந்தது சபை. அவரது கருத்தாடல் மிக்க பேச்சுக்களால் கைதட்டி ஆர்ப்பரித்தது சபை. ஓரு மணித்தியாலமாக அரங்கத்தை வீரச்சுரங்கமாக மாற்றிய செந்தமிழன் சீமான், தேசியத் தலைவன் பிரபாகரன் தனக்குப் பணித்திருந்த வழியிலேயே தான் செல்வதாகக் கூறினார்.
இறுதியாக அனைவரும் எழுந்து நின்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுக்குக் கரமிசைத்து நிமிர்வு கொண்ட காட்சி இதயத்தை ஈர்த்துக் கொண்டது.
0 comments:
Post a Comment