அண்ணா நூற்றாண்டு மீட்சிப் பார்வை...
அண்ணா நூற்றாண்டு விழா கட்டுரை
அண்ணா என்று கழகத்தவர்களால் அன்பொழுக அழைக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவுகிறது. அரை நூற்றுக்கும் மேலாக ஒன்பதாண்டுகளே வாழ்ந்தார் அண்ணா. குறைவான வாழ்நாள் ஆனாலும் நிறைவான வாழ்வினைத் தமிழர்க்குக் கொடுத்திட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் சீரிய இயக்கத்தை ஆக்கிக்கொடுத்தார். பெரியாரின் கோட்பாட்டை உள்ளடக்கி மொழி, இனம், மானம், பண்பாடு என்ற நெறிப்பாடுகளை வகுத்து வைத்தார்.
அய்யாவின் சிந்தனைகளை அரசியல் வடிவமாக்கி அரசியல் இயக்கமாக தி.மு.கவை நடத்தினார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் செயல்பாடுகளும் தி.மு.க.வை ஆட்சியில் அமரச்செய்தது. அண்ணா முதலமைச்சரானார். சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆனது. தமிழ் நாட்டரசையே தன் ஆசான் பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிப் பெருமிதம் கொண்டார் அண்ணா.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று அரிய சிந்தனையைத் தமிழர்க்குக் கற்றுக்கொடுத்து அறிவியக்கம் கண்ட பெரியாரையே “தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்” என்று ஏற்று போற்றினார் அண்ணா.
தமிழர்க்கு நாடு, தமிழர்க்கு உயர்வு, தமிழர் வாழ்வுக்குச் செழிப்பு, சமதர்மம், சமூக நீதி என அடிப்படையான ஆட்சி வல்லமையை அண்ணா நடத்திட முயன்றார், நடத்திச் சென்றார்.
அண்ணா அண்ணா என்று இளையோரும் முதியோரும் பாசத்தோடு அழைத்தனர், அண்ணன் தம்பி உறவாக குடும்பப்பாசப் பொழிவாகக் கழகக் குடும்பத்தை அண்ணா நடத்தினார். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்று அரசியலில் புது நெறியைப் புகட்டினார். அண்ணாவின் நாவன்மைக்கு நாடே புகழாரம் சூட்டியது.
தமிழர் தலைநிமிர, தன்மானம் பெற்றிட அயராது உழைத்த அண்ணா நெடுநாள் நம்மிடம் நடமாடாமல் மறைவுற்றார். பின்னர் கழகமும் கழக ஆட்சியும் தொடர்ந்தன. வெகு விரைவிலேயே அண்ணாவின் குறிக்கோள்கள் கேள்விக்குரியதாயின. கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் அண்ணாவின் மந்திரச்சொற்கள் கட்டளைச் சொற்களாக்கப்பட்டன. மு.க. கட்டளைக்குக் கழகம் ஆட்பட்டது. நாம் கட்டுப்பாடு என்பதில் கட்டுண்டுக்கிடந்தோம்.
இதயத்தைத் தந்திடண்ணா இரவலாக என்று கவிதை பாடி தன் இதயத்தில் அண்ணாதான் இருக்கிறார் என்று மா கவிஞர் மு.க. சொன்னபோது ஏற்றோம். பின்னர் மாறன் மறைந்தபின் மாறன்தான் தன் இதயத்தில் முதலில் நிற்கிறார் என்ற உடன்பிறப்புக்களுக்கு உணர்த்தினபோது கழகத்தினர் ஏமாந்தனர். கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் குறிவைத்து எப்படியோ அதனைப் பெற்றுவிட்டார் மு.க.: மாண்பினைப் பெறுவதற்கு மரபுகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
பெரியார் உயிரோடு இருக்கும்வரை கழகத்தில் தலைவர் பொறுப்பு இல்லை. பெரியாரே அனைவருக்கும் தலைவர் என்று அண்ணா போற்றினார். ஆனால் பெரியார் இருக்கும்போதே தலைவர் பதவி தி.மு.க.வில் உருவாக்கப்பட்டு தானே தலைவரானார் இன்றைய முதல்வர் மு.க.
காங்கிரசை வீழத்திதான் கழகம் ஆட்சியேறியது. ஆதனை வீழத்தவே முதன்;முதலாகக் கூட்டணி அமைத்தவர் அண்ணா. அதே காங்கிரசுடன், மிசா காலச்சிறைக்கொடுமைகளால் கழகத்தவர்கள் துயருற்றபின்னும் கூட்டணி அமைத்து கைகோர்த்து கழக வரலாற்றில் கரும்புள்ளி வைத்தார் மு.க.
தி.மு.க.வை வெளியில் இருந்து எவராலும் அழித்திட முடியாது என்றார் அண்ணா. அண்ணனின் மறைவுக்குப்பின் கழகம் பிளவுபட வழிவகுத்தார்;. கழக வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஈகமறவர்களெல்லாம் வெளியேற்றப்பட்டனர், புறந்தள்ளப்பட்டனர்.
தனது தலைமைக்கும் தமது குடும்பத்தார் ஆதிக்கத்திற்கும் கழகத்தில் வழி ஏற்படுத்தப்பட்டன. மகனுக்கு இளைஞரணியும், மகளுக்கு மகளிரணியும் என்ற வகையில் கழக நிர்வாகம் சென்றுவிட்டது. மாநிலம் மண்டலங்களாக ஆக்கப்பட்டன. மகன்களுக்கும் பேரனுக்கும் மாண்புகள் சூட்டப்பட்டன. மகளும் மேலவைக்கு அனுப்பப்பட்டார். துணை முதல்வர் என்றோர் பதவியைப் புதியதாக உருவாக்கி மன்னர் பரம்பரைபோல் தன் மகனுக்கே சூட்டிவிட்டார். தனக்குப்பின்னும் தன் பரம்பரை ஆட்சி தொடர வழிவகை செய்துவிட்டார்.
சமூக நீதி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம் ஒரே சமூகத்தின் ஒரே குடும்பத்தின் ஆட்சிக்கு ஆட்பட்டுவிட்டது. சமதர்மம் பேசி வளர்ந்த இயக்கம் தமது குடும்பத்துக்குள் சமநிலைபெற வழிபெற்றுவிட்டது. மக்களாட்சி கேட்ட இயக்கம் தன் மக்களுக்கே ஆட்சி என்ற நிலைக்கு உட்பட்டுவிட்டது. தன்னாட்சி என்பது தனது குடும்ப ஆட்சி என்றாகிவிட்டது. இலவசங்கள் தமிழர்களுக்கு வசந்தங்கள் ஆகிவிட்டன. வாக்குகள் வாங்கப்படுகின்றன. கோடிகளைப்பெற கொள்கைகள் இழக்கப்பட்டன. ஊரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்நிலைமைகளெல்லாம் உருவானபின் கழக ஆட்சியின் கொள்கைகள் திசை மாறிபோயின. இனமானம், மொழி, பண்பாடு அனைத்துமே பின்னுக்குத்தள்ளப்பட்டன.
அண்மையில் நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க.வின் தற்சார்பு நிலைகளை உலகுக்குத் தோலுரித்துக் காட்டின.
ஈழத்து மண்ணில் இலட்சம்பேர் மடிந்தாலென்ன, இலட்சம்பேர் குருதி கொட்டினாலென்ன? இலட்சக்கணக்கானோர் நாடிழந்தாலென்ன? தமிழீழ நாட்டை மீட்டெடுக்க களம்கண்ட போர்ப்படைப் புலிகள் அழிந்தாலென்ன? இந்த துயர்கண்டு இனப்படுகொலையைக் கண்டு அகிலத்தின் குரலெல்லாம் குமுறினாலென்ன? நமக்குத் தேவை மகுடம், மகுடம் என்று கொஞ்சமும் ஈவிரக்கமின்றி காங்கிரசு கட்சியோடு கூட்டணித்தொடர்ந்தது கொடுமையினுங் கொடுமை.
நலிந்த நிலையிலும் நாற்காலி வண்டியில் ஊர்ந்து ஊர்ந்து டெல்லியில் வலம்வந்து ஆட்சி அதிகாரம் பெற்றிட முயற்சித்தோர் நடுவணில் காங்கிரசு ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கி இருந்தால் ஈழத்தில் போர் நன்றிருக்கும் அல்லது நேரிட்ட கொடுந்துயரமாவது குறைந்திருக்கும்.
நம் கண்முன்னே நம்மின மக்கள் அழிவதைப் பார்த்துக்கொண்டிருக்க இங்கு ஏன் ஓர் திராவிட இயக்க ஆட்சி தமிழராட்சி? 1958இல் அறிஞர் அண்ணா “டெல்லியின் அடிவருடிகள் தமிழ்நாட்டின் (காங்கிரசு) ஆட்சியில் இருக்குமட்டும் ஈழத்தமிழருக்கு விடிவேது” என்று புழுங்கினாரே, கழக ஆட்சிக்கும் அல்லவா அது பொருத்தமாகிவிட்டது.
கழகங்களின் பெயரால் தொடர்ந்து ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் அண்ணா காணவிரும்பிய சமுதாயம் அமையவில்லை. தமிழுக்கு வலிமை சேர்க்கவில்லை, ஆட்சிமொழிக்கான வழிகாணப்படவில்லை. தனித்தமிழ் தோற்றுப்போகிறது. அயல்;மொழி கலவாத பேச்சில்லை. ஆயிரம் பெயர்களில்; ஓர் பெயர் தமிழாய் தெரிகிறது. தமிழைச் சிதைக்க தொலைக்காட்சிகள், ஊடகங்கள், பண்பாட்டைச் சீர்குலைக்கும் ஆட்டம் பாட்டுகள், முடிவுறா தொடர்கள் என சமுதாயத்தைச் சீரழிக்கும் ஊடகங்கள் இவைகள் மலிந்துவிட்டன.
மொழிப்பற்று, இனப்பற்று, கொள்கைப்பற்று என்றாலே ஏளனமாய்ப் பார்க்கும் இளம் சமூகம் பெருகிவிட்டன. மதவழி சின்னங்கள் குறியாய்க்கொண்டாரெல்லாம் இன்றைக்குக் கழகங்களின் பொறுப்பாளர்களாக மிளிர்கின்றனர். மடாதிபதிகளும் அடியார்களும் கழகத் தலைவர்களின் வீடுகளுக்கே வந்து அற்புதத்தைச் செய்துகாட்டும் அவலங்கள் நடக்கின்றன. மூடத்தனங்கள் பெருகிவிட்டன. மண் சோறு உண்போரும் மண்டையில் தேங்காய் உடைத்து மண்டை உடைபடுவோரும் மலிந்துவிட்டனர். பெண் அடிமை தீரவில்லை, பெண்டிர்க்குக் கல்வி, அரசியல் விழிப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
இவற்றையெல்லாம் நாம் ஏன் எண்ணிப்பார்க்க வேண்டும்? கழகங்கள் பலவாறாகப் பிரிவுற்று விளங்கினாலும் கொள்கைப்பற்றால் இழந்தவைகளை மீட்க மீள்பார்வை பெற்றாக வேண்டும். இது அண்ணா நூற்றாண்டு. 1969 தொடங்கி 2009 வரையிலான 40 ஆண்டுகள் திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை ஆளுகின்றன.
சுயமரியாதையை அடிப்படையாக வைத்துத்தானே திராவிட இயக்கம் தோன்றியது. ஆரியத்தின் அடித்தளத்தையே அடித்து நொறுக்கத்தானே கழகங்கள் தோன்றின. மாறாக ஆரியமே திராவிடத்தை வீழ்த்துகிற ஊடுறுவல்கள் நடைபெற்றுவிட்டன. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புகின்ற முதன்மையான வேலையைச் செய்ய வேண்டிய கழகங்கள் அரசியலைச் சார்ந்து நிற்கின்றன.
எனவேதான் பெரியாரின் சிந்தனைகளிலிருந்து கிளர்ந்தெழுந்த சமூகநீதி, பகுத்தறிவு, இனம், மொழி, பண்பாடு, தன்னாட்சி இவைகள் சிறக்கவும்; சாதி, மதம், தீண்டாமை போன்றவை ஒழியவும் திராவிட இயக்கம் மறுமலர்ச்சியுற வேண்டும். அதற்கான களம் அமைத்து பயிற்சி பட்;டறைகளை உருவாக்க வேண்டும்.
இன்றைக்குத் திராவிட இயக்கம் ஆட்சியிலிருந்தாலும் கொள்கையளவில் வீழ்ச்சியுற்றுள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த திராவிட இயக்க வீழ்ச்சிக்கும் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சரே முழு பொறுப்பு.
தள்ளாத வயதிலும் சக்கரவண்டியில் அமர்ந்து சமுதாயப்பணியாற்றி வந்த பெரியாரின் தொண்டு எங்கே? கட்சிக்கும் ஆட்சிக்கும் தாமும் தமது குடும்பமுமே இருக்கவேண்டும் என்று சக்கரவண்டியில் ஊர்ந்துவரும் மு.க.வின் தொண்டு எங்கே! திராவிட இயக்க தமிழியக்கப் பற்றாளர்கள் சிந்திப்போமாக.
1916ல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தொடக்கத்தின் நோக்கமும், முனைப்பும் 90 ஆண்டுகட்குப்பின்னும் தேவைப்படும் நிலை நமக்கு நேரிட்டுவிட்டது.
அண்ணாவின் நுற்றாண்டில் மறுமலர்ச்சி பெறுவோமாக.
நன்றியுடன்,
தூ.சடகோபன்
மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்
புதுச்சேரி மாநிலம்.
1 comments:
ನಾನು ನನ್ನ ಕನಸಿನ ಚಿತ್ರೀಕರಣ ನವೆಂಬರ್ ಅಥವಾ ಡಿಸೆಂಬರ್ ಮೊದಲ ವಾರದಲ್ಲಿ ಆರಂಭವಾಗಲಿದೆ. ನನ್ನದೇ ಚಿತ್ರವನ್ನು ನಾನು ರೀಮೇಕ್ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದೇನೆ ಎಂದರು ಪ್ರಕಾಶ್ ರೈ. ರೀಮೇಕ್ ಚಿತ್ರಗಳನ್ನು ವಿರೋಧಿಸುತ್ತಿದ್ದ ಹಂಸಲೇಖ ಮತ್ತು ಬಿ ಸುರೇಶ್ ಈ ಚಿತ್ರವನ್ನು ಒಪ್ಪಿಕೊಂಡಿರುವುದು ವಿಶೇಷ. ಈ ಚಿತ್ರದಲ್ಲಿ ಸಾಕಷ್ಟು ಬದಲಾವಣೆಗಳನ್ನು ಮಾಡಿರುವ ಕಾರಣ ಚಿತ್ರವನ್ನು ಒಪ್ಪಿಕೊಂಡಿದ್ದೇನೆ ಎಂಬುದು ಅವರ ವಿವರಣೆ.
Krishna
(ದಟ್ಸ್ ಕನ್ನಡ ಚಿತ್ರವಾರ್ತೆ)
Post a Comment