சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வாழும்போது உலகத்தமிழ் மாநாடு எதற்கு?ஜெ.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு எதற்கு? 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

’’1995ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக எந்த நாடுமே ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன் வராததற்குக் காரணம், தமிழ் உலகமே கலக்கத்தில், பெருங்குழப்பத்தில், அமளியில் இருந்து வருவது தான்.

உலகத்தில் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க கருணாநிதி என்ன செய்தார்? கருணாநிதியின் கட்சி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது வாய் மூடி மவுனியாக இருந்தது குறித்து கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு ஏற்பாடு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக 1981ம்ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் கருணாநிதியும், அவரது திமுக கட்சியும் கலந்துகொள்ளவில்லை.


நான் முதலமைச்சராக இருந்தபோது 1995ஆம் ஆண்டு எனது அரசின் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் இதே நிலையைத்தான் கடைபிடித்தார் கருணாநிதி.

இதுபோன்ற அரசியல் நாகரீகத்தை உலகத் தமிழ் மாநாடுகளில் புகுத்திய கருணாநிதி, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து, கோயம்புத்தூரில் தான் நடத்தும் கேலிக்கூத்தான மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவ்வாறு அவர் எதிர்பார்த்தால் அது அவர் செய்யும் மிகப் பெரிய தவறாகும்’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP