சிங்களவனுக்காக கலைஞர் காணும் கனவு பலிக்காது - வைகோ


'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு விட்டது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:

''திராவிட நாடு கோரிக்கையைப் போலவே தனி ஈழக் கோரிக்கையையும் தவிர்த்து விட்டு, சிங்கள அரசுடன் அனுசரித்து நடந்து கொள்வதே நல்லது என முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?''


''திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன எனச் சொன்னார் அண்ணா. அது மட்டுமல்ல... திராவிட நாடு கோரிக்கையையும் ஈழக் கோரிக்கையையும் ஒப்பிடுவதே தவறு. இங்கே நமக்கு சம உரிமை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் குறைந்தபட்ச அடிப்படை சுதந்திரங்கள்கூட அப்பாவி தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், வழிபாடு, இலக்கியம் என அனைத்து அடையாளங்களுமே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களையும் கொட்டக்கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர், இப்போது சிங்களர்களோடு தமிழர்களை அனுசரித்து வாழச் சொல்கிறார். ஆயிரம் ஆயிரமாக உயிர்களைக் கொடுத்து, மலை மலையாக சடலமாகி... ஈழத்து மண்ணில் கலந்து கிடக்கும் ஆத்மாக்கள்கூட கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போயிருக்கும். என் தமிழினத்தை அழித்தவனை கூண்டிலேற்றச் சொல்ல வேண்டிய கடமைமிக்க முதல்வர் பதவியில் உள்ள ஒருவரே, சிங்களவனிடம் மண்டியிடச் சொல்லும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது..?

'தமிழர் பூர்வீகத் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன்' என ராஜபக்ச இப்போதும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குரூர வெறியை உலகுக்கு அம்பலமாக்கி, அவரைக் கூண்டிலேற்றி, 'இவர்தான் ஹிட்லரைவிடகொடூரமான இனவெறியர்' என்ற உண்மையை அடையாளப்படுத்த வேண்டிய கடமை, தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் கலைஞரின் வார்த்தைகள், 'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞரால் உருவாக்கப்பட்டு விட்டது. தமிழ் வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றுமொரு துரோகத்தை கலைஞர் கருணாநிதி செய்து விட்டார்.

கலைஞரின் மதுரமான எழுத்துகளும் மயக்க வைக்கும் பேச்சும் தமிழினத்தை அழிக்கவே முழுதாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பதவி என்ற கத்தியை கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர். நான் ஒருபோதும் கலைஞரின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் தவறாகச் சொன்னதில்லை. ஆனால், இதயத்து நரம்பு தெறிக்க தாங்க முடியாத வலியோடு இப்போது சொல்கிறேன்... நாளைய தமிழ் சமுதாயம் தமிழினத்துக்கு துரோகம் செய்தவராகவே கலைஞரை வரிசைப்படுத்தி வைத்திருக்கும்!'' என்றார் அவர்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP