தொடரும் தமிழனப்படுகொலை...
போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் நடத்திய கடும் தாக்குதலையடுத்து மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வெளியேறிய இரண்டே முக்கால் இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மாணிக் பண்ணை என்றழைக்கப்படும் நலன்புரி முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், வயிற்றுப் போக்கு காரணமாகவும், தூய குடி நீர் இன்மையால் தண்ணீரால் பரவும் வியாதிகளாலும் பாதிக்கப்பட்டே பெரும்பான்மையானவர்கள் உயிரிழக்கின்றனர் என்று தங்களுடைய பெயரை குறிப்பிட விரும்பாத தன்னார்வ அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாக தி டைம்ஸ் கூறியுள்ளது.
தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த முகாம்கள் நலம்புரி முகாம்கள் (welfare camps) என்று கூறப்பட்டாலும், தேவையான அடிப்படை வசதிகள் அளிக்கப்படாத, போதுமான அளவிற்கு உணவு வழங்கப்படாத இம்முகாம்கள் இரண்டாவது உலகப் போரின் போது நாஜிக்கள் நடத்திய வதை முகாம்களாகவே (concentration camp) உள்ளன என்று கூறியுள்ள அந்த நாளிதழ், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மிகக் குறைவாகவே உணவுப் பொருட்களும், மற்ற நிவாரணங்களும் அளிக்கப்படுவதாகவும், அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ அமைப்புக்களை தொடர்ந்து முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், கடந்த வியாழக் கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் முகாம்களுக்கு அனுமதிக்க இராணுவம் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது.
கொழும்புவில் இருந்து இயங்கிவரும் சர்வோதயா சிராம்தான சங்கமயா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், பல பத்தாயிரக்கணக்கான சிறுவர்கள் சத்துணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
“மாணிக் முகாம்களில் மட்டும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பலர் நோயாலும், போரில் பட்ட காயங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் சத்துணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ள இத்தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் மருத்துவர் வின்ய ஆரியரத்னா, “சர்வதேச தரத்தின் படி 20 பேருக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும், ஆனால் இங்கு 70 பேர் ஒரு கழிவறையை பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
முகாம்களில் கழிவறை வசதியும், கழிவு நீர் போக்கு வசதிகளும் மேம்படுத்தப்படாமல் இந்த நிலைத் தொடருமென்றால் தென்மேற்கு பருவமழை துவங்கும் போது நோய் பரவும் அபாயம் உருவாகும் என்று வேர்ல்ட் விஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பார்லட் எச்சரித்துள்ளார்.
மானிக் முகாமில் தங்களுடைய பணியை குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சிறிலங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்த இந்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது என்றும், வியாழக் கிழமை இரவோடு தங்களின் இரண்டு அலுவலகங்களை செஞ்சிலுவைச் சங்கம் மூடிவிட்டது என்றும் டைம்ஸ் செய்தி கூறுகிறது. இந்த அலுவலகங்களில் ஒன்று, திருகோணமலையில் இயங்கி வந்தது. அங்கு போரினால் காயமுற்ற 30,000 பொது மக்கள் கடல் வழியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அலுவலகம் மட்டக்களப்பில் இயங்கி வந்தது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கடத்தல்களும், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளும் நிகழ்ந்து வருவது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்தே அங்கிருந்தெல்லாம் இப்படிப்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றுகிறது என்று டைம்ஸ் செய்தி கூறியுள்ளது.
1 comments:
வயிற்றுப் போக்கு காரணமாக
:-((((((((
Post a Comment