மகிந்த அரசை வழிக்குக் கொண்டுவர 'றோ' வின் திட்டம்
ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது.இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.
இதன் ஒரு பகுதியாகத்தான் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் தமிழர்களை உடனடியாக மீளக்குடியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள இந்தியா, கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியப் படையைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவையும் அவசரமாக அனுப்பிவைப்பதற்கு முன்வந்திருக்கின்றது.
இலங்கையில் தற்போது ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நம்பகரமான கட்சிகளோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்களோ எதுவும் இல்லை என்று கருதியே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை பயன்படுத்துவதற்கு இந்தியா தற்போது திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் இருந்து செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் நட்புச் சக்தியாகக் காட்டக்கூடிய கட்சிகள் எதுவும் இலங்கையில் இதுவரையில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விநாயகமூர்த்தி முரளிதரன் விலத்தப்பட்ட காலப்பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு வந்திருந்தனர்.
இணைந்து பணியாற்றுவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவையடுத்து ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினர் வெளியேறிச் சென்றுவிட்டனர்.
'றோ' வகுத்திருந்த திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த சிலர் இரகசியமாக கிழக்கு மாகாணத்துக்கு வந்து விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைந்ததாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவை தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதற்காக 'றோ' மேற்கொண்ட முயற்சிகளும் பெருமளவுக்கு வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.
வடக்கு - கிழக்கில் தற்போது செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரையில் அவை அனைத்தும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனேயே செயற்படுகின்றன.
இந்நிலையில் 'றோ' வின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது தமது இருப்பையே கேள்விக்குறியாகிவிடும் என இந்த அமைப்புக்கள் கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவின் கைகளில் விழாமல் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு 'றோ' தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது.
ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் தலைவர் பரந்தனைச் சேர்ந்தவர். அத்துடன், இந்தியப் படையினர் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இந்த அமைப்பு கிளிநொச்சியை மையப்படுத்தியே தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அப்போது அமைந்திருந்தன.
மீண்டும் கிளிநொச்சியை மையப்படுத்தி ஈ.என்.டி.எல்.எப் கட்சி செயற்படும் விதமாக 20 ஆயிரம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பது இந்தப் பின்னணியில்தான். இதற்காகத்தான் அவசர அவசரமாக இந்தியப் படை முதற்கட்டமாக கண்ணிவெடிகளை அகற்றப் போகிறது. இதற்காக இந்தியப் படை கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றனர்.
இந்த முயற்சியை நோக்கமாகக் கொண்டு ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்களை மீள ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
கிளிநொச்சியில் 20 ஆயிரம் மக்களை மீளக்குடிமயர்த்தும் போது, தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் என்ற பெயரில் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்களில் சிலரையும் கிளிநொச்சிக்கு அனுப்ப முடியும். அத்துடன், ஈ.என்.டி.எல்.எப். அமைப்பு ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதன் செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசினால் தடுத்து நிறுத்த முடியாது.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்களை மீறி மகிந்த அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதால் மகிந்த அரசை வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்துவதற்கு 'றோ' திட்டம் வகுத்திருக்கின்றது என புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் கருதுகின்றன. ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் வருகை மேலும் குழப்பங்களை ஏற்படுத்துவதாக மட்டுமே அமையும் என்றே கூறவேண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர் போராட்டத்தினை மேலும் முன்னெடுப்பதற்கு இந்தியாவின் உதவியை வேண்டி நிற்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment