இலங்கையை காப்பாற்ற இந்தியா ஆயுதம் கொடுத்தால்,தமிழ் ஈழம் அமைய இங்குள்ள தமிழர்கள் உதவி செய்வார்கள்: வைகோ
அனைத்துலகத்தின் மனசாட்சியும் தட்டி எழுப்பப்பட வேண்டும்.
‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பிட்ட இந்த நூல் ‘I Accuse ’ எனும் தலைப்பில் ஏற்கனவே வெளியில் உலவியபோதிலும் அதில் புதிதாக சில அத்தியாயங்கள் இணைக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான் விரும்பியபோது எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டுவந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கும் தமிழீழ விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கும் என் இனிய சகோதரர்களுக்கும் என் உள்ளம் எல்லாம் நிறைந்திருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குற்றமற்ற டிரைஃபஸ் அவன் சதிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு வஞ்சகமாக சதிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அவன் பூதத்தீவு என்கின்ற டெவில் தீவில் சிறைவைத்து இருந்த காலத்தில், நீதிக்காகப் போராடிய தலைசிறந்த எழுத்தாளர் எமிலி ஜோலா தன் நாட்டு மக்கள் மத்தியில் அக்கிரமக்காரர்களைக் கூண்டில் நிறுத்துவதற்காக அவன் வெளியிட்ட பிரசுரத்தின் தலைப்புதான் ‘I Accuse’ ‘குற்றம் சாட்டுகிறேன்’ இலட்சக் கணக்கான பிரதிகள் பிரெஞ்சு நாட்டுவீதிகளில் எல்லாம் வலம்வந்தது. அந்தப் பிரசுரத்தை வெளியிட்டதற்காகவே எமிலி ஜோலா மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆனால், மாதங்கள் கரைந்து ஓடின. அவன் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபிக்கப்பட்டது. பூதத்தீவில் சிறைவைக்கப்பட்டு இருந்த எலும்பும் தோலுமாக உருமாறிப் போயிருந்த டிரைஃபஸ் மீண்டும் அழைத்துவரப்பட்டு, அதே இராணுவத் தளபதியின் உடைகள் அவனுக்கு அணிவிக்கப்பட்டு அவன் ஏந்திய உடைவாளையும் கையில் பெற்றுக்கொண்டு, அவன் தலைநிமிர்ந்து நடக்கவும், சதிகாரர்கள் கூண்டில் அடைக்கப்படவுமான காட்சியாக அது மாறியது.
ஆகவே, ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் இந்தத் தலைப்பிலே வைக்கப்பட்டு இருக்கிற நூலில் தொடுக்கப்பட்டு இருக்கிற குற்றச்சாட்டுகள் எங்கள் இனத்தைக் கருஅறுப்பதற்கு தமிழ் இனத்தை ஈழத்தில் கருஅறுக்க வேண்டும் என்று திட்டமிட்ட கொடியவன் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு செய்திருக்கக்கூடிய மன்னிக்கமுடியாத உதவிகளான துரோகத்தை இந்த இனத்தின் வருங்கால இளைஞர்களுக்கும், இன்றைய தலைமுறைக்கும் எடுத்துவைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில்தான் இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2004 ஆம் ஆண்டு இந்திய இலங்கை இராணுவ கூட்டு ஒப்பந்தம் போட வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டது. அதை அறிந்த நாளில் இருந்து அதைத்தடுப்பதற்கு முயன்று போராடி போராடி - மன்றாடி மன்றாடி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று அவர்கள் எங்களிடத்தில் உறுதிமொழி கொடுத்தபோதிலும்கூட அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று அன்றைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கொழும்பில் சென்று பேசியபோது அடுத்த நாள் மீண்டும் நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் இப்படிச் சொல்லி இருக்கிறாரே என்று பத்திரிகை ஆவணங்களைக் காட்டியபோது பிரதமர் ‘அது அவர் தனிப்பட்ட கருத்து’ என்று செப்பிடு வித்தையாக கூறியதை அன்றைக்கு நான் நம்பினேன்.
அதன்பிறகு பலாலி விமானதளம் புதுப்பிக்கக்கூடாது இந்திய இராணுவத்தின் செலவில் இந்திய விமானப்படையின் உதவியோடு என்று, எங்கே? ரேஸ்கோர்ஸ் சாலை 7 ஆம் நம்பர் வீட்டில் பிரதமரிடத்தில் - ஜன்பத் 10 ஆம் நம்பர் வீட்டில் சோனியாகாந்தியிடத்தில் அப்படி எல்லாம் - எங்களுடைய முறையீடுகளை கோரிக்கைகளை எடுத்து வைத்த பின்னரும்கூட, அந்தப் பலாலி விமானத்தளம் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது. அந்த விமான தளத்துக்குச் சர்வதேச செய்தியாளர்களை அழைத்துக் கொண்டுசென்ற டொமினிக் பெரேரா இது இந்திய நாட்டு விமானப்படையின் துணையோடு இந்திய அரசின் செலவில் அவர்களுடைய பணத்தில் நிதியில் இது புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது என்று பகிரங்கமாகச் சொன்னார்.
ரேடார்கள் கொடுக்கக்கூடாது அது ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு பயன்படும் ராஜபக்சே கரங்களுக்குப் போய்ச்சேரும் என்றபோது பாகிஸ்தானும் சீனாவும் தந்துவிடக்கூடும் என்று அதற்கொரு விளக்கத்தைக் கொடுப்பதற்கு முன்வந்தார்.
அண்ணன் நெடுமாறன் அவர்கள் கூறியதைப்போல, தமிழர்களை அழிப்பதற்குப் பயன்படுமே அப்படியானால் தமிழர்கள்மீது குண்டுவீசுகிறபோது அதைத்தடுப்பதற்கு நீங்கள் தமிழர்களுக்கு வேறு என்ன சாதனங்களைத் தரப்போகிறீர்கள்? என்று கேட்டபோது,அதற்குப் பதில் சொல்லமுடியாத இந்தியப் பிரதமர் அப்படி ஓர் போர்மூளுமானால் ரேடார்களைத் திரும்பி வாங்குவோம் என்றார். அவர் சொன்னதை நான் உடனடியாக ஏடுகளுக்கும் செய்தியாகத்தந்தேன்.மறுநாள் சென்னைக்குவந்த அண்ணன் நெடுமாறனைச் சந்தித்து பிரதமருடன் நடந்த உரையாடலையும் குறிப்பிட்டேன்.இவை எல்லாம் கடந்துபோன செய்திகள். நான் காலத்தின் அருமைகருதி அதற்குள் அதிகமாகச் செல்லவிரும்பவில்லை.
இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற துயரநிலையைப்பற்றி நம் சகோதரர்கள் மனதில் நம்முடைய துன்பங்களை தெரியப்படுத்துகிறவிதத்தில் எடுத்துச் சொன்னார்கள். இவ்வளவு ஆயுதங்களையும் கொடுத்து ரேடார்களைக் கொடுத்து, எறிகணை ஏவுகணைகள் மல்டிபர்பஸ் ராக்கெட் லாஞ்சர்ஸ், பீரங்கிகள், ஃபோபர்ஸ் வழக்கில் சிக்கிய அந்தப் பீரங்கிகள் உள்பட இத்தனை ஆயுதங்களையும் அள்ளிவழங்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தையும் கொடுத்து,அதன்மூலமாக இங்கே அண்ணன் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல உலகத்தின் பல தேசங்களில் இருந்து பாகிஸ்தானிலும், சீனாவிலும், ஈரானிலும், இஸ்ரேலிலும், ரஷ்யா நாட்டில் இருந்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஆயுதங்களை பெருமளவில் வாங்கி குவித்து வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான போரை அவர்கள் நடத்தினார்கள்.
இவ்வளவு ஆயுதங்களை இந்திய அரசு தந்து கொண்டு இருக்கிற வேளையில் ஓயாத அலைகளில் - அக்னி அலைகளில் வெற்றி முரசு கொட்டிய விடுதலைப்புலிகள் இந்த பன்னாட்டு ஆயுதபலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்ற துயரக்குரல் தமிழகத்தில் எழுந்து அதன் பிரதிபலிப்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்புக்குரல் பதிவுசெய்யப்பட்ட பிறகும்கூட கடைசிநிமிடம் வரையிலும் இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லவில்லை. இறுதிவரை சொல்லவில்லை. ஒப்புக்குக்கூட சொல்லவில்லை.
ஆகவே, இந்தப் புத்தகத்தில் நான் மிகத்தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் பிரதமரிடத் தில் தமிழன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள் பொறுப்பாளி. ஒவ்வொரு தமிழன் தமிழச்சியும் சாவுக்கும் உங்கள் அரசு பொறுப்பாளி என்று கூண்டில் நாங்கள் நிறுத்துவோம் என்று எழுதியிருக்கிறேன். ஆகவே, ராஜபக்சேவை கூண்டில் நிறுத்த வேண்டும். சர்வதேச குற்றவாளிக் கூண்டில் அவன் நிறுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிற நேரத்தில், இந்திய அரசு செய்த துரோகத்தினால் இன்றைக்கு விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டு இருக்கிற பின்னடைவுகளுக்கு இந்திய அரசு செய்த துரோகம் காரணம்.
இதற்கு என்ன நோக்கம்? இன்றல்ல, நேற்றல்ல தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் உபகண்டம் என்று நம்முடைய கவிஞர் இன்குலாப் இங்கே எடுத்துச் சொன்னார். இந்தத் துரோகம் இன்று நேற்றல்ல 1987 இல் தொடங்கியது. அன்றைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டது. அன்றைக்குத் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே சுதுமலை கூட்டத்தில் பிரபாகரன் சொன்னார் ‘சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் மகத்தான தியாகங்களைச் செய்து நாங்கள் கட்டியெழுப்பி இருக்கக்கூடிய எங்கள் விடுதலைக் கோட்டைகளை உடைத்து நொறுக்குகின்றார்கள். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்டார்.
அன்றைக்கு அப்படித் துரோகத்தைச் செய்து ஒப்பந்தத்தை திணித்து திலீபனின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப் படை தளபதிகளின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. ஏன் திலீபன் உண்ணா விரதத்தைத் தொடங்கும் முதல்நாள் இரவு இந்தியாவின் தூதராக கொழும்பில் இருந்த தீட்ஷித் இந்திய இராணுவத்தின் மதிக்கத்தக்க தளபதியாக இருந்த ஹர்கரத் சிங்கிடம் ‘நாளையதினம் பிரபாகரன் உன்னைச் சந்திக்க வருகிறார் சுட்டுப்பொசுக்கிவிடு’ என்று கூறினார்.
அதிர்ச்சி அடைந்த இந்தியத் தளபதி இந்தத் துரோகத்தை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறியதற்கு இது என்னுடைய உத்தரவல்ல. தில்லியின் கட்டளை இராஜீவ்காந்தியின் உத்தரவு என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை அதை எழுதிய ஹர்கரத் சிங்கும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். ஆக, ஸ்ரீபெரும்புதூர் சம்பவங்களுக்கு முன்னால் இது. திலீபனின் உண்ணாவிரதத்துக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம்.
திலீபனின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப் படை தளபதிகளின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. அதன்பிறகு தூதராக அனுப்பிய ஜானியைச் சுட்டுக்கொன்ற துரோகத்தை செய்த இந்திய அரசு. இந்து மாக்கடலில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமான இந்திய அரசு. அந்தத் துரோகங்களின் தொடர்பாகத்தான் கடைசிக் கட்டத்தில் 2004 ஆம் ஆண்டுக்குப்பிறகு திட்டமிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்று ராஜபக்சேவோடு சேர்ந்து சோனியா காந்தியின் ஆலோசனையின்படி இந்திய அரசு திட்டம் வகுத்தது.
பிரச்சனை முடிந்து விடவில்லை. அப்படித் திட்டம் வகுத்ததன்விளைவாகவே, இந்தப் போரை நடத்தியதற்குப்பிறகு தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையை அழித்துவிட வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். அதற்காகத்தான் இவ்வளவு உதவிகளையும் செய்தார்கள். இது மன்னிக்கமுடியாத துரோகம். இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் மனதில் நாங்கள் விதைத்துக் கொண்டே இருப்போம்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல - சட்டத்தை ஏவலாம் - இங்கே தமிழகத்தில் இருக்கிற அரசு சட்டத்தைப் பயன்படுத்தி எங்களை காராகிருகத்தில் பூட்ட முயற்சிக்கலாம். பூட்டி இருக்கிறது கடந்த நாட்களில். தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுக்கிறது இந்திய அரசு என்கிறபோது துடிக்காதா தமிழன் இரத்தம்? எங்கள் சொந்தச் சகோதரர்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறபோது கொன்றுகுவிக்கப்படுகிறபோது அவனுடைய உள்ளம் வேதனைத்தணலில் வெந்துதவிக்காதா? அப்படித்துடித்ததின் விளைவுதானே இதோ வீரத்தியாகி முத்துக்குமார். அவனோடு சேர்ந்து 14 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்தத் தணல் எங்கள் நெஞ்சில் அணையவில்லையே,அப்படிப்பட்ட உணர்வோடு இந்திய அரசு செய்கிற துரோகத்தைக் கண்டு மனம் கொதித்துப்போன நிலையில் அங்குள்ள தமிழர்கள் - எங்களுடைய சொந்தச் சகோதரிகள் நாசமாக்கப்பட்டு கொன்றுகுவிக்கப்படுகிறபோது - தமிழனின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டு இருந்தநிலையில் இவ்வளவும் செய்துவிட்டு இந்திய அரசு கடைசிநிமிடம் வரையில் போரைநிறுத்து என்று சொல்லவில்லை. இப்பொழுது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் செல்லும் என்று சிவசங்கரமேனன் பகிரங்கமாக அறிவிக்கிறார்.
நான் பிரதமருக்குச் சொல்வேன் இந்திய அரசுக்குச் சொல்வேன் நீங்கள் மறைமுகமாக பல உதவிகள் செய்தீர்கள் - ஆயுதங்கள் வழங்கினீர்கள் - அப்படி ஆயுதங்கள் வழங்குகிற போது தமிழனை கொல்வதற்கு இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் தமிழன் தடுப்பதற்கு முயற்சிக்க மாட்டானா? அதுவும் எங்கள் தமிழ்நாட்டு வீதிகளில் செல்கிறது ஆயுதங்களை தாங்கிய வண்டிகள் என்றசெய்தி பரவுகிறபோது அவர்களது உள்ளம் தணலாக மாறித் துடிக்காதா? மத்திய அரசு அலுவலகத்துக்குமுன்பு மாநில அரசு அலுவலகத்துக்கு முன்னால் மறியல் செய்கிறோம். அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்.
சட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் - கைது செய்கிறீர்கள் - சிறை செல்வதைப்பற்றிக் கவலைப்படவில்லை - அதைப்போலத்தான் பெரியார் திராவிடர் கழகத்தினரும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் - தமிழ் உணர்வாளர்களும் கோவை மாநகரில் வாகனங்களில் ஆரோகணித்து செல்கிற ஆயுதங்கள் நமது தமிழனின் உயிர்குடிக்க என்று கருதிக் கொண்டு கோவை இராமகிருஷ்ணனும் மற்ற தோழர்களும் சென்று தடுத்தார்கள். அதற்குப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவினாரே,சீமான்மீது - கொளத்தூர் மணி மீது - நாஞ்சில் சம்பத் மீது பாதுகாப்புச் சட்டம்.அந்தப் பாதுகாப்புச் சட்டம் தவறானாது. பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வந்ததற்குப்பிறகு, பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் நான் வாதாடினேன். என் வாதத்தை ஏற்றுக்கொண்டு மாட்சிமை தங்கிய நீதிபதிகள் நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் இரத்துசெய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. அவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு நான் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவன் அல்ல, ஆனால், எங்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது. நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு இருக்கிறது. நீதி கேட்கிறேன் என்றொரு முறையீட்டை வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் சட்டவல்லுநர்களை கலந்து ஆலோசித்து தேசப்பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்பட்டு இருக்கிறது தமிழ்நாட்டில். அது இரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டார். (பலத்த கைதட்டல்)
இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் ஆனால், சட்டவல்லுநர்கள் தந்த ஆலோசனையின்படி தமிழ்நாட்டு தி.மு.க.. அரசு கோவை வழியாக ஆயுதங்களை ஏந்திச் சென்ற வாகனங்களை தடுக்கமுயன்ற ஒரு இயக்கத் தொண்டன்மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் தவறானது அது இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது. இது தி.மு.க. அரசின் கன்னத்தில் அறைந்த செயல் என்பதை மறந்துவிடக்கூடாது. (பலத்த கைதட்டல்)
ஆனால், இதற்குப் பின்னரும் எங்கள் தோழன் வேலாயுதத்தின்மீது நான்கைந்து தினங்களுக்கு முன்னால் பாதுகாப்புச் சட்டம் ஏவப்படுகிறது. அதைப்போலவே தமிழர் உரிமைக்குப் போராடிய இன்னொரு இளைஞன்மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்படுகிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிமலை வெடித்தது. திருப்பூரில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் தீயில் தூக்கிப் போடப்பட்டார்கள். தமிழகமே கொந்தளிக்கும் கடலாயிற்று அதன்பின்னர் அண்ணா முதலமைச்சராக வந்து அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றார்.
1968 இல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தபோது சென்ட்டிரல் இரயில்நிலையம் தீப்பற்றி எரிந்தது. இரயில்பெட்டிகள் கொளுத்தப்பட்டன. சட்டமன்றத்தில் விநாயகமும், ...... அண்ணாவிடத்தில் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறதா என்று கேள்வி எழுப்பினார்கள் சட்டமன்றத்தில். அதற்கு அண்ணா சொன்னார் இரயில் பெட்டிகள் எரிந்தால் நாம் மீண்டும் செய்துகொள்ளலாம் ஒரு மாணவனின் உயிர்பறிபோகுமானால் அந்த உயிர் திரும்பப்பெறமுடியாது என்று சொன்னார்.
உணர்ச்சியின் அடையாளமாகத்தான் அந்தப் போராட்டம். தமிழ் இன உணர்வின் அடையாளமாக. ஆனால், இங்கே இப்பொழுது இருக்கின்ற அரசு மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை அழிப்பதற்காக அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழக அரசு போர்க்கோலம் பூண்டு இருந்தால் தடுத்து இருக்கலாம். அண்ணாவின் உணர்வு இருந்திருந்தால். அண்ணாவின் கல்லறை ஒரு போதும் கருணாநிதி அவர்களை மன்னிக்கப் போவதில்லை.
எங்கள் இனத்துக்காரனைப் படுகொலை செய்யாதே நெருங்காதே ஆயுதம் கொடுக்காதே போரை நிறுத்துகிறாயா இல்லையா சொல் என்று இந்த அரசு முடிவெடுத்து சொல்லி இருக்குமானால் மன்மோகன் சிங்குக்கு நிச்சயமாக இந்தத் தைரியம் வந்திருக்காது. இந்திய அரசுக்கு இந்தத் தைரியம் வந்திருக்காது. தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக வெடித்துவிடாமல் தடுப்புச் சுவராகப் பயன்படுவேன் - என் எழுத்தும் பேச்சும் பயன்படும் என்றவகையில் அவைகளைப் பயன்படுத்தினார் கலைஞர்.
ஆகவே, இவ்வளவு பெரிய கொடுந்துயரம் நேர்ந்துவிட்டது - எவராலும் வீழ்த்த முடியாத புலிகள் இந்தப் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். போரில் புலிகளுக்கு நிகரான வீரர்கள் இல்லை. உணர்வுகள் விதைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் ஈழ உரிமைப் போர் முடிந்துபோய் விடவில்லை. அதுமேலும் வீறுகொண்டு எழப்போகிறது என்ற நிலைமையில் ஒரு புதிய பரிணாமம்தான் இன்றைக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
இங்கே இருந்து கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இராணுவத்தை அனுப்புவது அயோக்கியத்தனமான நடவடிக்கை. நீ யார் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு. எங்கள் இளைஞர்களைத் தேடித்தேடி கொல்வற்கா? எங்கள் புலிப்படைத் தோழர்களைத் தேடித் தேடி படுகொலை செய்வதற்கா? உலகநாடுகளின் ஆயுதங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தமிழர்களைக் கொன்றுகுவித்தான், முள்வேலிக்குள் அடைத்துவைத்துக் கொண்டு 3 இலட்சம் தமிழர்கள் இன்றைக்கு வதைபடுகிறார்கள்.
இங்கே இருக்கிற இந்து ராம்கள் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் .கொழும்பில் இருக்கிற இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர் நேரடியாகப் பார்த்துவிட்டுச் சொன்னார் ,மோசமான நிலைமை இருக்கிறது என்று- இதற்கு என்ன பதில்?
கைக்கூலியாக இருந்த ஒருவன்கூட நேற்றைக்கு கதறியதாக இன்றைக்குப் பத்திரிகை போடுகிறது. சிங்களத்துக்காரனுக்கு கைக்கூலியாக மாறிய ஒருவன், அவன்கூட நேற்றைக்குப் பார்த்து விட்டு ஐயோ என் நெஞ்சம் பதறுகிறதே சித்ரவதை முகாம்களுக்குள் இப்படி துன்புறுத்தி குவிக்கிறார்களே, என்று வேதனைப்பட்டதாக செய்திவருகிறதே, தமிழ் இனப்பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உலகம் இதுவரை சந்தித்திராத அக்கிரமம் அங்கே நடைபெறுகிறது. இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் உணவில்லை, மருந்தில்லை இதுதான் இன்றைக்கு அங்கே இருக்கிற நிலைமை.
எல்லாவற்றையும்விட மானத்தை உயிரினும் பெரிதாக கருதக்கூடிய நமது சகோதரிகளின் மானத்துக்குப் பாதுகாப்பு இல்லை. அந்தச் சித்ரவதை முகாம்களில் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. சரி இவர்கள் எங்குபோய் சேர்வார்கள்? சிங்களக் குடியயேற்றம் கிடையாது என்கிறான் இராஜபக்சே. ஒரு சதவிகிதமாக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள நாய்கள் நீங்கள் இன்றைக்கு அங்கே 34 சதவிகிதமாக எப்படி குடியேற முடிந்தது. இனி வடக்கிலும் நீங்கள் கால் வைப்பீர்கள்.
தமிழர்களின் பூர்வீக தாயகம் என்கின்ற கோட்பாடு ஏற்கனவே முடியாது என்று சொல்லி விட்டான் ராஜபக்சே. நேற்றைக்குச் சொல்கிறேன் ‘இனம் என்ற பேச்சுக்கே இந்த மண்ணில் இடம் இல்லை’ என்கிறான். அந்த வார்த்தையே என்னால் ஏற்கமுடியாது என்கிறான். எல்லோரும் சிங்கள தேசத்து மக்கள் என்கிறான். தமிழ்நாட்டு முதல்வர் இதை ஏற்றுக் கொள்கிறாரா? ஈழத்தில் தமிழ் இனம் என்பதே கிடையாதா?
ஈழத்தில் தமிழர்களின் பூர்வீக மண் வடக்கும் கிழக்கும் என்று இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சொன்னார். தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் என்றார். அவர்கள் ஒரு தனி இனம். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசு அமைத்து வாழ்ந்த இனம். அவர்கள் சுதந்திர தமிழ் ஈழம் அமைப்பதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்? இந்திய அரசு அதில் என்ன உரிமை?
இந்தப் புத்தகத்தில் ஒரு கடிதத்தை நான் பதிவுசெய்து இருக்கிறேன். இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் 'இலங்கையில் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு நாங்கள் இராணுவ உதவிசெய்கிறோம்' என்று அதில் குறிப்பிடுகிறார். இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீங்கள் யார்? இந்தியாவுக்கு என்ன உரிமை? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஆயுதம் கொடுத்தால், தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம்.
உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு நீங்கள் ஆயுதம் கொடுப்போம் என்றால் அந்த ஒருமைப்பாட்டை உடைப்பதற்கு தமிழ் ஈழம் மலர்வதற்கு தன்மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரும் தன்னையே தருவான். இது என்ன நிலைப்பாடு? இது எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்த நாட்டுக்கு தேசத் துரோகிகள் அல்லவே? உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நிலப்பரப்பும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? பூமிப்பந்துக்கே நீங்கள் காவல்காரனா?
அப்படியானால் கிழக்கு தைமூர் பிரிந்ததே? வாய்மூடிக் கிடந்தீர்களே? கொசோவா தனிநாடாகிவிட்டதே? உலகம் அதை கண்டுகளித்துவிட்டதே? அவர்கள் பூர்வீக பூமி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு அரசோட்சி வாழ்ந்தவர்கள். அவர்கள் தனி இனம்.
இன்னும் சொல்லப்போனால், தமிழ் இனத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டை அடி விடாமல் காத்து வீரம்,மானம், கற்பு, பண்பு, விருந்தோம்பல் என அனைத்தையும் இன்றைக்கும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஈழத்துத் தமிழர்களின் இனத்தின் முகவரியை தொலையவிடாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே தனி அரசாக வாழவேண்டும் என்ற நிலைமைக்கு எப்பொழுது வந்தார்கள்? அவர்கள் ஒடுக்கப்பட்ட பிறகு நாயினும் கேவலமாக நடத்தப்பட்ட பிறகு - சம உரிமை உள்ள மக்களோடு மக்களாக வாழமுடியாத நிலைமை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு தந்தை செல்வா பிரகடனம் செய்தார். காங்கேசன் துறை இடைத்தேர்தலுக்குப்பிறகு ஈழத்துத் தமிழர்கள் அனைவரும் இனி தனிதேசம் தான் என்ற அந்தத் தேர்தல் முடிவு நுழைவாயில் அமைத்தற்குப்பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தில் மே 16 ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு இனி தனித்தமிழ் ஈழமே என்று அறிவித்ததற்குப்பிறகு, இளைய தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் என்றார்.
அந்தப் போராட்டத்தை எவ்வளவு மக்கள் இரத்தம்சிந்தி உயிர்களைக் கொடுத்த போராட்டம் எத்தனை மகத்தான தியாகங்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை சுகங்களை வாலிபத்தின் இன்பங்களை வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அதை எண்ணிபாராது அதைச் சுவட்டைக்கூட சந்திக்காமல் மடிந்துபோனார்களே எத்தனை இளைஞர்கள், எத்தனை இளம்பெண்கள், வாழ்க்கைச் சுகம் எதுவுமே அவர்கள் அறிந்தது இல்லையே.
அப்படி மகத்தான தியாகங்களையும் இரத்தத்தையும் சிந்தி உருவாக்கப்பட்ட ஒன்றை அழிப்பதற்கு நீங்கள் யார்? உபதேசம் செய்கிறார் முதலமைச்சர். அண்ணா திராவிட நாட்டைக் கைவிட்டார் அதைப்போல அங்கு சகவாழ்வு சாத்தியமாகலாம். ஆக தமிழ் ஈழம் என்ற கோரிக்கைக்காக போராடுவது என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கிறார். அப்படியானால் இங்கே இருக்கிற தமிழர்கள், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் இந்தியாவில் நடத்தப்படுகிற நிலைமையும் ஈழத்தில் சிங்கள நாய்களின் கரங்களில் சிக்கி அவதிப்படுகின்ற ஈழத்துத் தமிழர்களின் நிலைமையும் ஒன்றா? ஏன் இப்படி தவறான வாதத்தை வைக்கிறீர்கள்.
அப்பொழுதே அண்ணா சொன்னார் காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என்றார். அதே நிலைமை ஈழத்தில் தமிழர்கள் வதைபடுவதைப்போன்ற நிலைமை இந்த உபகண்டத்தில் ஏற்பட்டால் அண்ணா எந்தக் கொள்கையைக் கைவிட்டாரோ அந்தக் கொள்கை மீண்டும் உயிர்த்து எழும். ஆக இரண்டையும் ஒப்புமைகாட்டிப் பேசுவது தவறு.
ஆகவே, அவர்களின் உரிமைப் போராட்டத்தில் இத்தனை நாடுகளின் ஆயுதபலத்தைக் கொண்டு அவர்களை அழித்தீர்கள். ஆயுதபலம் மட்டும் அல்ல தோழர்களே, வெறும் ஆயுத பலம் மட்டுமல்ல, அத்தனை நாட்டு ஆயுதங்களுக்கும் ஈடுகொடுக்கும் மாவீரர்கள் தான் பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப்புலி வீரர்கள். ஆனால், உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இதுவரை எந்த யுத்தக்களத்திலும் பயன்படுத்ததாத நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.
ஆயிரம் ஆயிரமாக அலை அலையாக சிங்களப் படைகள் வந்தாலும் எதிர்கொண்டு சின்னாபின்னமாக்கக்கூடிய விடுதலைப்புலி வீரர்கள். புலிப்படைத் தளகர்த்தர்கள் நிமிடநேரத்தில் எலும்பு உடம்பு அனைத்தையும் உருக்கிப் போட்டுவிட்டது. தணலில் உலோகங்கள் உருவாக்கப்படுவதைப்போல, இந்தக் குண்டுகள் பாய்ந்த இடங்களில் சிக்கிய விடுதலைப்புலிகளின் வீரத்தளபதிகளும் வீரர்களும் அப்படியே உருகிப்போனார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த மண்டலத்தில் இருந்த பிராணவாயு முழுமையாக உறிஞ்சப்பட்டது உடம்பில் காயமேபடாமல் செத்துவிழுந்தார்கள். இரத்தம் சிந்தாமலே செத்துவிழுந்தார்கள். இது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள். இதுவரை இப்படிப்பட்ட ஆயுதங்களை எவரும் பயன்படுத்தியது இல்லை. இந்த ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாகத்தான் பின்னடைவு ஏற்பட்டது.
தெர்மாபிலே யுத்தத்தில் போர்புரிந்த 300 ஸ்பார்ட்டா வீரர்களைவிட பிரபாகரனின் வீரர்கள் இன்னும் வீரசாகசம் சாகத்தை நிலைநாட்டினார்கள். ஆகவே, இவ்வளவு கொடூரமான முறையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அழிக்கவேண்டும் என்று இந்திய அரசு வகுத்துத் கொடுத்ததன் விளைவாக பன்னாட்டு ஆயுதபலத்தோடு விடுதலைப்புலிகள் போர்க் களத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் எவ்வளவு அக்கிரமமான முறையில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.
தமிழ் பெண்கள் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்து சிசுக்களை எடுத்து தெருவில் வீசுகின்ற கொடுமையினை ஹிட்லர் செய்யவில்லை நாஜிகள் செய்யவில்லை. ஆக மனிதகுல வரலாற்றில் இப்படிப்பட்ட இனக்கொலை இதுவரை நடந்ததே இல்லை.
இங்கு விடுதலை இராஜேந்திரன் சொன்னார் இனி இளைஞர்களிடம் உணர்ச்சி ஊட்டி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று சொன்னார் தமிழ் ஈழத்தை உருவாக்கி தமிழ் ஈழம் மலர்வதை நம் கண்களால் கண்டுவிட்டுத்தான் இந்த மண்ணில் மறையவேண்டும் என்ற உணர்வோடு நாம் போராடுவோம். இது ஒவ்வொரு தமிழனின் கடமை. தன்மான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழச்சியின் கடமை.
நம் வாழ்நாளில் இந்தப் பூமிப்பந்தில் ஈழத்தமிழனுக்கு ஒரு தேசத்தை நிர்மாணிப்பதற்கு எல்லாவிதத்திலும் தன்னலமற்று, அரசியல் எல்லைகளைக் கடந்து மாச்சர்யங்களைக் கடந்து சுயநலத்துக்கு கடுகளவும் இடம்கொடுக்காமல், நாம் தமிழ் ஈழம் மலர்வதற்கு எல்லாவிதத்திலும் தோள்கொடுப்போம் துணைநிற்போம் என்று சூளுரை மேற்கொள்ள வேண்டிய நாள் இந்தத் திருநாள். இந்த நாள்.
ஏனெனில், சிதறிக்கிடந்த யூதர்களுக்கு அமெரிக்கச் செல்வந்த யூதர்கள் அள்ளிக் கொடுத்தார்களே, நாங்கள் அநாதைகளாகிவிட்டோம் யுத்தக்களத்தில் செத்துமடிகிறோம் எங்களுக்குஉதவிவேண்டும் என்று மோல்டா அம்மையார் வந்தபோது இலட்சக்கணக்கான டாலர் பணத்தை அள்ளிக் கொடுத்தார்களே, ஆயுதங்கள் வாங்குவதற்கு கப்பல்களில் அனுப்பிவைத்தாரே? அப்படி நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கப் போவதாகச் சொல்லவில்லை. அப்படி நாங்கள் திரட்டிப் பணம் அனுப்பப் போவதாகச் சொல்லவில்லையே?
ஆனால், உலகில் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒருவன் பேசுவது ஒருவனுக்குத் தெரியாது அந்த மொழி தெரியாது. ஜெர்மனியில் இருந்து போகின்ற யூதனுக்கு செக்கோசுலோவாகியாக்காரன் மொழி தெரியாது. ஆனாலும் யூதர்கள் என்று ஒரு இனத்தில் நின்றுகொண்டு இன்றைக்கும் சர்ச்சைக்குரிய இடம் அதற்குள் நான்செல்லவிரும்பவில்லை. இடம் யாருக்குச் சொந்தம் பாலஸ்தீனியர்களுக்கா? யூதர்களுக்காக?என்று.
ஆனால், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் சென்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா பேசுகிறார் இரண்டு தேசங்கள் பாலஸ்தீனியர்களுக்கும் ஒருதேசம் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதோடு நிறுத்தவில்லை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யூதக்குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்கிறார். அதைவிட ஈழத்தில் எங்களுக்கு ஆயிரம் மடங்கு நியாயம் இருக்கிறதே.
எங்கள் பூர்வீக மண்ணில் அல்லவா? அவன் குடியேற்றம் அமைத்து இருக்கிறான். தனி தேசிய இனம் தானே, அவர்களுக்கும் ஒரு நாடு அமையவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தக் கோரிக்கையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வோம். தாய்த் தமிழகத்து இளைஞர்களுக்கு அந்த உணர்ச்சியை ஊட்டுவோம். அந்த உணர்வில் மாறுபட்ட கருத்து இருக்கவே முடியாது. கோபித்துக் கொள்வான் ராஜபக்சே என்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசுகிறார்.
வெள்ளைக்காரன் கோபித்துக் கொள்வான் என்று கருதியிருந்தால் பகத்சிங் ஆயுதம் ஏந்தி இருக்கிறான் - கோபித்துக் கொள்வான் ஆஷ் துரை என்று கருதினால் வாஞ்சிநாதன் மணியாச்சிக்குப் போயிருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக்காரன் என்று கருதியிருந்தால் நேதாஜி படைதிரட்டி இருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக்காரன் என்று கருதியிருந்தால் அன்றைக்கு விடுதலைப் போராட்டம் நடந்து இருக்க முடியாது.விடுதலைப்போராட்டம் நடத்தினால் வெள்ளையன் இன்னும் கொடுமை செய்வான் என்று கருதியிருந்தால் இந்தியர்கள் என்றைக்கும் பிறவி அடிமைகளாகவே இருந்திருக்கலாம்.
கதைக்கு உதவாததாம் - கோபித்துக் கொள்வாரா? கொடுமை செய்வதனை அவன் குலையை அறுப்பேன் என்று முடிவெடுத்தான் பகத்சிங். எங்கள் இனத்தை அழித்தவனை சங்கறுப்பேன் என்று முடிவு செய்வான் தமிழன். (பலத்த கைதட்டல்)
இனிமேலா கோபிக்கப்போகிறான்? எத்தனை குழந்தைகள் சாகடிக்கப்பட்டனர் - எத்தனை பெண்கள் நாசமாக்கப்பட்டனர் - எத்தனை இளம்பெண்களின் கற்பு நாசமாக்கப்பட்டது எத்தனை பேர் வீடுவாசல் எல்லாம் இழந்து பூர்வீக மண்ணைஇழந்து நாயினும் கேவலமாக நடத்தப்பட்டு கடைசியில் சென்றஇடங்களில் எல்லாம் அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இப்பொழுது மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்படுகிற நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்களே இனிமேலா அவன் கோபித்துத் துன்பத்தை விளைவிக்கப்போகிறான்?
ஆகவே, தர்பூஃரில் பழங்குடிஇனமக்கள் வதைக்கப்படுகிறார்கள், சூடான் ஆதிக்கத்துக்குள் வதைக்கப்படுகிறார்கள். அதை எடுத்துச் சொன்னால் இன்னும் அக்கிரமத்தைச் செய்வான் இராணுவத்தின்மூலம் ஒமர் அல் பஷீர் என்று தர்பூஃர்க்காரன் அமைதியாக இருக்கிறானா? குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறான். எங்கே சர்வதேச குற்றவாளிக் கூண்டில். தர்பூஃர் இன மக்களை சூடான் நாட்டு இராணுவம் வேட்டையாடியது என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒமர் அல் பஷீர் என்ற சூடான் அதிபர்மீது இன்றைக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அதேநிலைமையில் இராஜபக்சேவை கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை இருக்க இந்தக் கொலைபாதகத்துக்குத் துணைபோன இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் இராஜபக்கேவுக்கு ஆதரவாக வாக்களிக்கிறது. இன்று நேற்றல்ல, கடந்த ஐந்தாண்டுகளாக இந்த அக்கிரமத்தை செய்து கொண்டு இருக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு செய்த துரோகங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதோடு முடிந்துவிடவில்லை.
இன்றைக்குச் செய்திகளைப்பார்க்கிறோம் சின்னஞ்சிறு பாலகன் செத்துப்போய் இருப்பதாக நீ புகைப்படம் போட்டிருக்கிறாயே இந்த நெஞ்சம் பதறுகிறதே அதைப் பார்க்க முடியவில்லையே எங்களால் அதைப்போல இந்தச் செய்திகள் வருகிறபோது எத்தனை தமிழர்களின் உள்ளங்கள் நெஞ்சங்கள் கொதிக்கும். மனிதநேயத்தின் உருவமாக திகழ்ந்த செய்திகளை எல்லாம் சொன்னார்.
நானும் அண்ணன் நெடுமாறனும் சொல்கிறோம் பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார். ஈழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு உரியநேரத்தில் வருவார் அதே இராஜபக்சே படைகளை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடவைப்பதற்கு தமிழன் வருவான். அங்கு சிந்தப்பட்ட இரத்தம் வீண்போகாது. முளைக்கின்ற புல்பூண்டுகூட அங்கு தலை வணங்காது அங்கே. இந்த வீராவேச சூறாவளிப் பேச்சால் பயம் ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் சட்டமன்றத்துக்குள் சண்டபிரசண்டமாய் முதல்மந்திரி கலைஞர் கருணாநிதி .
இது வெறும்பேச்சல்ல நெஞ்சில் இருந்து பீறிட்டு வருகிற ஆவேச உணர்ச்சி. எங்கள் இரத்த சுழற்சியோடு கலந்து இருக்கிற தமிழ் ஈழ மக்களைக் காக்கவேண்டும் அவர்களுக்கும் ஒரு தனிநாடு என்று அமையவேண்டும் என்று எங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கக்கூடிய விடுதலை உணர்ச்சி.
ஆகவே தமிழகத்தில் இருக்கிற இளைஞர்கள் உள்ளம் தமிழ் ஈழம் மலர்வதற்கு துணை செய்யட்டும். இவ்வளவு அக்கிரமங்கள் செய்து கொண்டு இருக்கிற ராஜபக்சே சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டும். மனிதகுலத்தின் மனசாட்சி தட்டி எழுப்பப் படவேண்டும். மனிதகுலத்தின் காதுகள் செவிடாகிப் போய்விட்டன - கண்கள் குருடாகி போய்விட்டன என்று நாம் கடமையை விட்டுவிட முடியாது.
அனைத்துலகத்தின் மனசாட்சியும் தட்டி எழுப்பப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட இனத்தின், பகுதியின் பிரச்சனையல்ல. அது அகிலத்தின் மனிதாபிமான பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை என்றவகையில் இந்தப் பிரச்சனையை நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு உரிமைகாண்போம். அந்தவகையில் இந்த நூல் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத்தக்கதாக ஆதாரங்களோடு வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம் கேலி பேசுகிறவர்கள் கேலிபேசட்டும். கருத்துப் படங்களைக் கிண்டல்செய்து போடுகிறவர்கள் போடட்டும் அதை எல்லாம் நாம் அலட்சியம் செய்வோம்.
ஈழவிடுதலை உணர்வு என்பது நம்முடைய சிந்தைகள் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தது.
நம் வாழ்நாளில் தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதற்காகவே நம்மால் முடிந்த அளவுக்கு - அவர்களைப்போல தியாகத்தை எவரும் செய்யஇயலாது அப்படிப்பட்ட தியாகங்கள் வீண்போகக்கூடாது ஈழத் தமிழ் இனம் தனித் தமிழ் தேசத்தை அமைக்கின்ற வகையில் அவர்களுக்கு உறுதுணையாக நாம் குரல் கொடுக்க மக்களின் ஆதரவைத் திரட்ட அனைத்து வழிகளிலும் ஈடுபடுவோம் என்று சூளுரைமேற்கொள்வோம் என்றுகூறி, இந்த அரங்கத்துக்கு வந்திருக்கிற தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்றியைக்கூறி வெல்க தமிழ் ஈழம் மலர்க தமிழ் ஈழம் எனக்கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.
2 comments:
வஞ்சகமாக சதிச் செயல்களில் ஈடுபட்டவர் வைகோ குற்றம் சாட்டுகிறேன்.
Veeran
swiss
//வஞ்சகமாக சதிச் செயல்களில் ஈடுபட்டவர் வைகோ குற்றம் சாட்டுகிறேன்.//
போடா வெண்ணை.
Post a Comment